குற்றாலத்தில் சந்திப்போம் வாருங்கள் தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

குற்றாலத்தில் சந்திப்போம் வாருங்கள் தோழர்களே!

எதிர்காலச் சிற்பிகளான மாணவர்களே, இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 42 ஆண்டுகளாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றுள்ளது. 43ஆம் ஆண்டாக வரும் ஜூன் 8 முதல் 11 முடிய நான்கு நாள்களில் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் பாடங்களை நடத்த இருக்கின்றனர்.

அன்னை மணியம்மையார் அவர்களால் குற்றாலத்தில் தொடங்கப்பட்ட பயிற்சிப் பட்டறை இது. இடையிலும், கரோனா கால கட்டத்திலும் இது தடைப்பட்டது. என்றாலும் நமது இயக்கத்தின் இலட்சியப் பயணம், இளைஞர்களை இயக்கப் பாசறைக்கு ஈர்க்கும் செயல்பாடு தடைப்பட்டதில்லை.

மறைந்த பெரியார் பேருரையாளர்கள் புலவர் ந.இராமநாதன், புலவர் மா.நன்னன், கு.வெ.கி.ஆசான், அ.இறையன் போன்றோர் எல்லாம் வகுப்புகள் நடத்திய வரலாறு குற்றாலப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு உண்டு.

இந்தப் பட்டறையில் தயாரிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் பிற்காலத்தில் கழகத்தின் மாநிலப் பொறுப்புகளை ஏற்கும் அளவுக்குத் தயாரானார்கள்.

இவ்வாண்டுப் பயிற்சிப் பட்டறையிலும், நமது தலைவர் ஆசிரியர் அவர்களும், பேராசிரியர்களும் பங்கு கொள்ள இருக்கிறார்கள். 

இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் இன்றியமையாத தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேறு எந்தக் கால கட்டத்தையும் விட இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இயக்கப் பாசறையை நிரப்ப வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று கூவும் பாசிச சக்தி இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்து ஆட்டம் போடுகிறது.

சமூக சீர்திருத்தவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். புதிய கல்வி என்ற பெயரிலும் சமூகப் புரட்சியாளர்கள், தந்தை பெரியார், நாராயண குரு, பகத் சிங் போன்றவர்களின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு அவற்றின் மீது மசூதிகள் கட்டப்பட்டன என்ற பொய்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். உண்மையைச் சொல்லப்போனால் பவுத்த விகாரங்களை எல்லாம் இடித்துத் தள்ளி ஹிந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன என்பதற்குத் துல்லியமாக வரலாற்று ஆவணங்கள் பறை சாற்றுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் புத்தரின் நின்ற கோலம் என்ற ஆய்வு செய்து (பி.எச்டி.) மும்பையில் நூல் வெளிவந்துள்ளது.

புத்தருக்கு சாஸ்தா என்ற பெயருண்டு, அதனை இப்பொழுது அய்யப்பனுக்கு மாற்றியுள்ளனர். புத்தருக்கு விநாயகர் (தலைவர்) என்ற பெயருண்டு, அதனை விக்னேஸ்வரன், பிள்ளையார் என்று மாற்றியுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் தாராதேவி கோயிலாக இருந்திருக்கிறது. "பவுத்தமும் தமிழும்", "சமணமும் தமிழும்" என்ற நூல்களில் ஆய்வாளர் மயிலை சீனி வேங்கட சாமி கல்வெட்டு ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ளார்.

இன்னொரு பக்கத்தில் புதிய கல்வி என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுவதற்கான தேர்விலிருந்து தமிழ் போன்ற மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 73 லட்சத்து 30 ஆயிரத்து 302 பேர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வங்கித் தேர்வுகளிலும், மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் இந்தி திணிக்கப்பட்டு தமிழ் வெளியேற்றப்பட்டுள்ளது.

மொழி திணிப்பு என்பது ஒரு கலாச்சாரத் திணிப்பாகும். இவற்றைப் பற்றி எல்லாம் நமது இன மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டாமா?

சென்னையில் கூடிய மாநில அளவிலான மாணவர் கழகம், இளைஞரணி கலந்துரையாடலில் ஏராளமானவர்கள் பங் கேற்றது கண்டு நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் பெருமிதம் கொண்டுள்ளார். அதனுடைய எதிரொலி குற்றாலப் பயிற்சிப் பட்டறையில் காணப்பட வேண்டும். குறிப்பாக மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர்ப் பாசறைப் பொறுப்பாளர்கள் கண்டிப் பாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு தலைப்புகளில் எடுக்கப்படும் பாடங்கள் அவர் களால் உள்வாங்கப்பட வேண்டும். மாவட்டக் கழகத் தலைவர் கள், செயலாளர்கள், மண்டல தலைவர்கள், செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாணவர் கழகம், இளைஞரணி, மாநிலப் பொறுப்பாளர்கள், இதற்கு முன்னுரிமை கொடுத்து இரு பால் மாணவர்களையும் குற்றாலத்திற்கு அனுப்பி வைக்க முன்வரவேண்டும். இது முக்கியம்! இது முக்கியம்!! மிக மிக முக்கியம்!!!

சிந்தாந்தப் போர் மூண்டு விட்டது. மதவாத நோய்க்குக் கைகண்ட மருந்து ஈரோட்டுப் பகுத்தறிவு மூலிகைதான்.

தந்தை பெரியார் பற்றி நாடாளுமன்றத்தில் பேசப்படுகிறது. வட திசை நோக்கியும் இந்தப் புயல் நகர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

முதலில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மாணவர் - இளைஞர் பட்டாளம் தயாராகட்டும் - அதற்குக் குற்றாலம் முக்கிய சிந்தனைப் பட்டறையாகும்.

சந்திப்போம் குற்றாலத்தில் வாருங்கள் தோழர்களே! 

No comments:

Post a Comment