ஆளுநர் தமிழிசை அவர்களின் சிந்தனைக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

ஆளுநர் தமிழிசை அவர்களின் சிந்தனைக்கு...

ஹிந்தி யாருக்குத் தாய்மொழி பதில் கூறுங்கள் தமிழிசை அவர்களே!

தமிழ்நாட்டில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "நாம் ஹிந்தி மொழியைக் குறைகூறுகிறோம், அப்படிக் குறை கூறுவது தவறு; ஒரு மொழியைப் பேசும் மக்களுக்கு அந்த மொழி மீது பாசம் உண்டு, இந்த நிலையில் நாம் ஹிந்தி மொழியைக் குறைகூறும் போது ஹிந்தி மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்களை அவமானப்படுத்துகிறோம்".

"சிலர் இருப்பிற்காக தமிழ் தமிழ் என்று கத்துகிறார்கள். எங்களை விட அதிகம் தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட வர்கள் யார் இருக்கின்றனர்? தமிழில் பதவியேற்ற ஆளுநர் நான் தான், அதே போல் ஆளுநரான பிறகு தமிழில் உரையாற்றினேன்".

"நம் மொழி மீது அன்பும், பாசமும் இருக்க வேண்டும். இன்னொரு மொழி மீது எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஏனெனில், அது இன்னொருவரின் தாய்மொழி. இதைப் புரிந்துகொள்ளாமல், மற்றொரு மொழியை நாம் குறைகூறுவதன் மூலமாக, மற் றொரு சகோதரத்துவ மாநிலத்தை நாம் துன்பப்படுத்துகிறோம். நாம் அனைவரையும் மதிக்கப் பழகியவர்கள். தமிழ் கலாச்சாரம் என்பது உலகளவில் மதிக்கப்படக்கூடிய ஒன்று. ஆகையால், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம் மொழியை கொண்டாட வேண்டும்" என்று பேசியுள்ளார்.

 ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் எந்த மொழிக்கும் அவர் பரிந்துபேசட்டும், தனது தாய்மொழியில் பேசுவதைப் பெருமையாகக் கொள்கிறார். வரவேற்கிறோம் - அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள்  ஆங்கிலத் தில் கேள்வி எழுப்பும் போது  நன்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட ஹிந்தியில் பதில் கூறுகிறார்கள். கேட்டால் மொழிபெயர்ப்புக் கருவி இருக்கிறதே என்று நாடாளுமன்ற அவைத்தலைவரே நையாண்டி பேசும் பாணியில் கூறுகிறார். 

 ஹிந்தி மொழி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் முதல் சிந்தியாவரை ஹிந்தியில் பதில் கூறுவது நம்மை இழிவு படுத்துவதாகுமே - இது தமிழிசைக்குத் தெரியவில்லையா? 

 அதுமட்டுமா? தமிழ் நாளிதழ்களில் ஒன்றிய அரசு கொடுக்கும் விளம்பரங்களில் ஹிந்தி வார்த்தைகளை தமிழில் எழுதி விளம்பரப்படுத்துகிறார்களே!

தமிழ் படிக்கத்தெரிந்த தமிழர்களுக்கு அதன் பொருள் புரியாதே, ஹிந்திக்காரருக்கு அதில் என்ன உள்ளது என்றே தெரியாதே, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பொருள் தெரியாத ஒரு விளம்பரத்திற்காக வீணாகிறதே - இது குறித்து தமிழிசை கருத்து கூறுவாரா?

 பிரதான் மந்த்ரி கரீப் கல்யாண் யோஜனா, பிரதான் மந்த்ரி அவாஜ் யோஜனா, பிரதான் மந்த்ரி சர்வசுரக்‌ஷா பிஹீமா  போன்ற விளம்பரங்கள் சென்னை சாஸ்திரி பவனில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. அதன் தமிழாக்கத்தை அங்கு வேலை பார்க்கும் ஒப்பந்தப் பணியாளர் அச்சிட்டு அதன் கீழ் ஒட்டினார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பினார்களே! அந்தப் பணியாளர்  என்ன தவறு செய்தார்?

 புரியாத மொழியில் விளம்பரம் உள்ளதே! தமிழில் வைத்தால் அனைவருக்கும் புரியுமே என்ற நல்லெண்ணத்தில் செய்த செயல் தானே! ஒன்றிய அரசு அலுவலகத்திற்கு வேலையை விட்டே விரட்டும் அளவிற்குப் பெரும் தவறாக தெரிந்திருக்கிறது, இது குறித்து தமிழிசை பதில் கூறுவாரா?

 எல்லாவற்றையும் விட ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று தமிழ்நாட்டு அமைச்சர்களை குறைகூறியுள்ளாரே,  ஹிந்தி யாருக்குத் தாய்மொழி? பீகார் மக்கள் போஜ்பூரி, மகத், மைதிலி பேசுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில், அவதி, பிரிஜ், கான்பூரி, போஜ்பூரி உள்ளிட்ட 8 மொழிகள் பேசுகிறார்கள். மத்தியப் பிரதேசம், டில்லியில் கடிபோலி உருது, பஞ்சாபி கலந்த உருது பேசுகிறார்கள். ராஜஸ்தானில் ராஜஸ்தானி, ஹரியானாவில் ஹரியானி, பஞ்சாபில் பஞ்சாபி, ஹிமாச்சல பிரதேசத்தில் ஹிமாஞ்சல், உத்தராகண்டில் கும்மோனி, கர்வாலி, தக்கரி, கோச்சி போன்ற மொழிகளைப் பேசுகிறார்கள். 

 இப்படி இருக்க ஹிந்தி யாருக்குத் தாய்மொழி? ஒருவேளை ஹிந்தி என்ற போர்வையில் சமஸ்கிருதத்தைத் தாய்மொழி யாகக் கொண்ட மத்திய ஆசியப் புல்வெளிகளில் இருந்து ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டு வந்த ஆரியர்களுக்கு மட்டுமே அவமானமாக இருக்கலாம். 

அதனால் தான் தமிழிசை இந்தத் துடிதுடிக்கிறார்கள் போலும்!

தமிழிசைக்கு ஒரு முக்கிய கேள்வி. தமிழை நீஷப்பாஷை; பூஜை வேளையில் பெரியவாள் (சங்கராச்சாரியார்) பேச மாட்டாள் என்கிறார்களே - தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர் வழிபாட்டு மொழி என்றால் உச்சநீதிமன்றம் வரை செல்லுகிறார்களே - அதைப் பற்றி எல்லாம் ஆளுநர் தமிழிசை திருவாய் மலர மாட்டாரா? 

என்ன செய்வது - ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டால் இப்படித்தான் பேசுவார்கள். 

பெயரில் தான் தமிழிசை - சிந்தனையில்?

No comments:

Post a Comment