மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (1)

மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (1)

நமது சாலைகளில் பனி படர்ந்தால் அது எவ்வளவு போக்குவரத்துக்கு இடையூறு என்பது அமெரிக்கா மற்றும் பனி கொட்டும் நாடுகளில் வாழுபவர்களுக்கு நன்கு விளங்கும்!

குளிர்காலத்தில் திடீரென்று பனி கொட்டி வழியை மறைப்பது மட்டுமல்ல, அவரவர் வீட்டுக்கு முன்னே உள்ள கார்ஷெட்டிலிருந்து காரை வெளியே எடுத்து சாலையில் செல்ல ஆயத்தம் செய்யும் பகுதியில் பனி கொட்டி யுள்ளதால் எளிதில் அந்தக் காரை எடுக்க முடியுமா?

பனிக் கட்டிகளை அகற்றிவிட்டு தடத்தை ஒழுங்குபடுத்தித்தான் அதன்பிறகே வீட்டில் (garage-இல்) நிறுத்திய காரை எடுத்து ஓட்டிச் செல்ல முடியும்.

சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத் திட அந்தந்த பகுதி நகராண்மையினர் உப்பு முதலியவைகளைக் கொட்டி, பனியை விலக்கி, வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி காரை ஓட்டிச் செல்ல உதவி செய்வார்கள்!

நடுவழியில் காரை வேகமாக ஓட்டினால், கார்கள் ஒன்றோடொன்று மோதி, விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு! 

எனவேதான் இந்த கொட்டும் பனியை அகற்றிய பிறகே சாலையானது பயண வசதிக்கு வாய்ப்பாக அமையும்.

சாலையில் பனி கொட்டுவதைப் போலவே நமது மனதில் மூடுபனி - அதாவது மன அழுத் தம் - இறுக்கம் அமைந்து விட்டால் நம்மை எளிதில் செயல்படவிடாது. அண்மையில் கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 கொடுந்தொற்று பல உருவங்களில் மனித குலத்தை வாட்டி, உயிர்ப்பலிகளை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அச்சத்தாலும், பல இழப்புகளாலும், வாழ்வாதாரத்தை இழந்து வருவதின் - துன்பம் - துயரம் காரணமாகவும் நம்மவர்கள் பலரது மனங்களிலும் படிந்து வரும் மூடுபனியை (Mental Fog) எவ்வாறு விலக்குவது? இது பற்றி சுகாதார - நல்வாழ்வுத் துறையினர் - மருத்து வர்கள் குறிப்பாக மனோதத்துவ மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து, அதன் முடிவுகளை - நமக்கு நம்பிக்கையூட்டுவதற்காக கட்டுரை களை பாடம் எடுப்பதுபோல வெளியிட்டு தளரக் கூடாத தன்னம்பிக்கையை விதைக்கிறார்கள்!

அத்தகைய குறிப்புகள் பற்றிய கட்டுரையைப் படித்தேன் - உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன்.

இந்த மனவெளியில் படிந்துள்ள மன அழுத்த மூடுபனியை எப்படி விலக்குவது என்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் ஆய்ந்து நேர்த்தியோடு கூறியுள்ள பரிந்துரை போன்ற யோசனைகளை அறிவோமா?

மிக எளிதான வழிமுறைகள்தான் - ஆனால் சோம்பலின்றிக் கடைப்பிடித்துப் பயன்பெற முயற்சிக்க வேண்டும்.

1. நாம் குடிக்கும் தண்ணீர் அளவை அதிகப்படுத்துவது முக்கியம் (தூய்மையான வெந்நீர் - ஆறவைத்தாலும் பரவாயில்லை). ஏனெனில் நீர்ச்சத்து உடலில் லேசாகக் குறைந் தாலும் (even a mild dehydration) நமது சிந்தனை ஆற்றலை சிதைத்து - மூளை - அதன் அவயங்கள் செயல்படுவதால் - எப்போதும் துடிப்புடன் - கவனத்துடன் (Alertness) இருக்கும் மூளைத்திறனை அது பாதிக்கிறதாம்!

மனதில் சில நேரங்களில் தெளிவற்ற தன்மை (Mental Clarity) இன்மை ஏற்படலாம். எனவே போதிய அளவு நீரை அருந்தத் தவறாதீர்கள். குறிப்பாக வயதான முதுகுடிமக்கள், உள்பட்ட இளைஞர், மகளிர் அனைத்து பாலரும் உடம் பின் நீர் தேவையைக் குறைக்காமல் பார்த்துக் கொள்வது நலம் பயப்பதாகும். எப்போதாவது நமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மருத்து வர்கள் உடனே "அதிகம் தண்ணீர் குடியுங்கள் - உப்பு சத்து உள்பட வெளியேறிவிடும். சமனப்படுத்த ORS Drinks குடிங்க!" என்று கூறுவதைக் நினைவில் கொள்ளுங்கள்!

(தொடரும்)


No comments:

Post a Comment