அ.தி.மு.க.வில் அண்ணா பெயர் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

அ.தி.மு.க.வில் அண்ணா பெயர் ஏன்?

அ.தி.மு.க.வில் அண்ணா பெயர் ஏன் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகும்.

அண்ணாவின் கொள்கை என்ன? அவர் வாழ்ந்து காட்டிய முறை என்ன? வழி என்ன? என்பதைத் தெரியாமலேயே அவர் பெயரைக் கட்சியிலும் அவர் உருவத்தைக் கொடியிலும் பொறித்திருப்பது, அந்தத் தலைவரை அவமதிப்பது ஆகாதா?

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அவர் சொல்லி விட்டதாலேயே அண்ணா அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர் ஆகி விட்டாரா? அவர் எந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்? எந்தக் கடவுளைக் கும்பிட்டுள்ளார் என்று சொல்ல முடியுமா?

தூத்துக்குடி துறைமுகத் திட்டங்கள் என்பது நீண்ட காலமாக திராவிட இயக்க மாநாடுகளில் இடம் பெற்ற முக்கிய தீர்மானமாகும்.

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அந்தத் திட்டம் நல்லதோர் முடிவை எட்டியதன் காரணமாக ஒன்றிய நீர் வளத் துறை அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவ் முதல் அமைச்சர் அண்ணாவிடம், இந்த நல்ல காரியம் முடிவுக்கு வந்தமைக்காக காஞ்சிபுரம் வரதராசர் கோயிலுக்குச் செல்லலாம் என்று சொன்னபொழுது, முதல் அமைச்சர் அண்ணா ஒன்றிய அமைச்சரிடம் சொன்னது என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கோ மூத்தவர்களுக்கோ, அமைச்சர்களாக இருந்தவர்களுக்கோ கிஞ்சிற்றும் தெரியுமா?

"நான் கோயிலுக்குச் செல்வதில்லை; உங்களுக்கு வேண்டும் என்றால் ஒருவரைத் துணைக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று முகத்துக்கு முகம் பதில் சொன்னவர் அண்ணாவாயிற்றே.

அவர் பெயரைத் தாங்கிய கட்சி மூடநம்பிக்கைகளின் மொத்த குத்தகைதாரர்களானது தலைகுனியத்தக்கதே!

மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குச் சவாரிக்கும் பச்சைக் கொடி காட்டும் அளவுக்குக் கீழிறக்கம் கொள்ளலாமா?

"சங்கராச்சாரி பதவித் தற்கொலை!" - என்ற அண்ணாவின் கட்டுரை (திராவிட நாடு - 13.4.1942).

எழுதுகிறார் அண்ணா - அண்ணா தி.மு.க.வினரே கேளீர், கேளீர்!

"ஈட்டிய பொருளில் வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதியைச் சொத்தாகவும், சுக போகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யக் கல்வி வேண்டும் என்ற உருக்கமான இந்த உபதேசம், துறவுக்கோலம் பூண்டு உள்ளவரால், இல்லறவாசிகளுக்கு எடுத்து ஓதப்படுகிறது. மிகச் சரி. ஆனால் சுவாமிகளின் நிலை என்ன? அவர் வாழ்க்கை விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது, பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்லவில்லையே, பக்த கோடிகள், மேலும் மேலும் பணம் தரவில்லையே, சூடிய பூ வாடிற்றே" இத்தியாதி இத்தியாதி வருணனைகளை அண்ணாவுக்கே உரித்தான வகையில் அடுக்கிக் கொண்டே போகிறார்.

"இதில் பல்லக்குத் தூக்கிகள்!" என்பதை எந்தப் பொருளில் எடுத்தாண்டுள்ளார் என்பதுதான் முக்கியம்.

சங்கராச்சாரியாரின் கவலை எல்லாம் - பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்லவில்லையே என்பது பற்றிதான். பல்லக்கை தூக்குவோரின் வலியைப் பற்றியல்ல.

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சங்கராச்சாரியார் இடத்தில் இருந்தல்லவா பார்க்கிறார். அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாவின் பார்வையில் பார்க்கவில்லையே! இந்த நிலையில் கட்சியில் அண்ணாவின் பெயர் எதற்கு? கொடியில் அண்ணாவின் உருவம்தான் எதற்கு?

அண்ணாவின் "சந்தான சப்ரமஞ்சம்" என்ற கட்டுரையின் (திராவிட நாடு 14.1.1956) ஒரு பகுதி இதோ:

"இவ்வளவு மேதாவித்தனத்தையும் காட்டி விட்டு அதே மூச்சில் கங்கணம் கயிறு கட்டுதல், முழுக்குப் போடுதல், பேய் ஓட்டுதல் என்பன போன்ற பாட்டி முறைகளுக்கும் அதி தீவிர வக்கீல்களாகி, தீர்ப்பே அளித்து விடுவார்கள்"

என்பதுதான் அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி. கையில்  கயிறு கட்டுவதுவரை அண்ணா அலசுகிறார். தமது பெயரைத் தவறாகப் பயன்படுத்துவார்களோ என்ற தொலைநோக்கில் அண்ணா எழுதி இருப்பார் போலும்! அதிமுக மேனாள்  முதல்வர்கள் கைகளில் கத்தைக் கத்தையாக வண்ண வண்ண கயிறுகள் - வெட்கப்பட வேண்டாமா!?

அண்ணாவின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொத்துக் கொத்தாக இன்னும் எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டலாம். பயன் கிடைக்காது. அண்ணா இவர்களுக்கு ஒரு "லேபிள்" அவ்வளவுதான்.

இதை எல்லாம் முற்றாகத் தெரிந்து கொண்டு தான் அன்றைய ஒன்றிய அமைச்சரும் - இன்றைய குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யநாயுடு தெளிவாகவே சொன்னார்.

ராஜாஜி மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை செலுத்திய பின்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். அதுபற்றி 'தி இந்து' ஏட்டுக்குப் பேட்டியும் அளித்தார். அந்த சம்பவம் அதிமுக மீதான பிஜேபியின் அணுகுமுறையைக் காட்டுகிறது.

"தத்துவார்த்த அடிப்படையில் அ.தி.மு.க. பி.ஜே.பி.க்கு நெருக்கம். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றிய பிஜேபி அரசுக்கு பிரச்சினை ரீதியிலான ஆதரவை அளித்து வருகிறது. அதைத் தொடரும் என எதிர்பார்க்கிறோம்" என்று பிஜேபியின் அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியது எதைக் காட்டுகிறது. தத்துவார்த்த அடிப்படையில் அ.தி.மு.க. - பி.ஜே.பி.க்கு நெருக்கம் என்று சொன்னது நூற்றுக்கு நூறு துல்லியமான உண்மை என்பது பல்லக்குத் தூக்கும் பிரச்சினை வரை மிகச் சரியாகப் பொருந்துகிறதா இல்லையா?

அண்ணாவின் கொள்கை வழி அதிமுக நடைபோடும் என்று நம்பிக் கொண்டு அதில் இருக்கும் கடைசித் தோழனாவது சிந்திக்கட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'விடுதலை'யில் (5.5.2022 பக்கம் 1) எழுதிய அறிக்கையையும் படித்துப் பார்க்கட்டும்!

No comments:

Post a Comment