ஒன்றிய நிதி அமைச்சரின் பதற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

ஒன்றிய நிதி அமைச்சரின் பதற்றம்!

சென்னையில் நடைபெற்ற ஓர் ஏட்டின் ஆண்டு விழாவில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் முழுக்க முழுக்க தன் உரையில் அப்பட்டமான அரசியல் விடயங்களைப் பேசியுள்ளார்.

"பா.ஜ.க. உயர் ஜாதியினர் கட்சி, ஹிந்திக்காரர்களின் கட்சி, ஏழைகளுக்கு எதிரான கட்சி எனத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பேசி வருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பிஜேபியினர் எதிர்வினை ஆற்றவில்லை" என்று பேசினார் என்பதைவிட புலம்பித் தள்ளி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

எதிர்வினை ஆற்றவில்லை என்று தமிழ்நாடு பிஜேபியினர்மீது குற்றப் பத்திரிகையும் படித்துள்ளார்.

'அந்தோ பாவம்!'

தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை அய்.பி.எஸ்., ‘துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி ஒரு பக்கம் அண்ணாமலையைச் சாடுகிறார் என்றால், இன்னொரு பக்கத்தில் சிறப்பு விருந்தினரும், ஒன்றிய நிதி அமைச்சருமான திருமதி நிர்மலா சீத்தாராமனும் சாட்டையடி கொடுக்கிறார். இந்த வர்ணாசிரமத்தை அண்ணாமலை அய்.பி.எஸ். அறிவாரா?

வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள். எதிர்வினை ஆற்றாமல் இல்லை அது எடுபடவில்லை என்பதுதான் உண்மை.

மனிதனை மனிதன் தூக்குவது மனித உரிமைக்கும், மனிதநேயத் திற்கும், நாகரிகத்துக்கும் எதிரானது என்று முற்போக்குச் சிந்தனையா ளர்கள் குரல் கொடுத்தால், "நானே பல்லக்கைச் சுமப்பேன்!" என்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் பேசுகிறார் என்றால் தமிழ்நாட்டு மக்கள், பெரியார் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் - அதற்கு எதிர்வினைதான் ஆற்றுவார்கள்.

உயர் ஜாதியினர் கட்சி என்று பிஜேபி பற்றி தமிழ்நாட்டில் பேசப்படுகிறதாம். இதே நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் "நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாத வகையைச் (ஜாதியை) சேர்ந்தவள்" என்று சொன்னாரே - இதன் பொருள் என்ன?

நான் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர் என்பதைத்தானே மறைமுக மாகச் சொல்லுகிறார்.  

130 கோடி மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டத்தின் நிதியமைச்சர் இப்படிப் பேசுகிறார் என்றால் இது கடுமையாக விமர்சிக்கப்படாதா?

ஒன்றிய அரசின் காபினட்டில் பெரும்பாலான மக்களின் பிரதிநிதித் துவம் என்ன? சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களின் எண்ணிக்கை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலிலோ, பிஜேபி போட்டியிடும் சட்டமன்றத் தேர்தல்களிலோ சிறுபான்மையினர் முற்றிலும் புறக்கணிக்கப்படுவது ஏன்?

நிதி அமைச்சராக இருக்கக் கூடிய இந்த அம்மையார்கூட தேர்தலில் நின்று மக்களிடம் வாக்கு வாங்கி நிதி அமைச்சர் ஆனவர்தானா? இரண்டு முறை தொடர்ந்து காபினட் அமைச்சர் ஆனது எப்படி? இந்த வாய்ப்பு பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கிடைக்குமா - கிடைத்திருக் கிறதா?

அடுத்து தமிழ்நாடு பொருளாதாரத்துறையில் ஓரவஞ்சனை செய் யப்படுகிறது என்று தவறாக தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறதாம் எது தவறு? இதற்கான ஆதாரங்களை எங்களால் எடுத்துக்காட்ட முடியுமே!

இயற்கை பேரிடரை எதிர்கொண்ட குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மட்டும் ரூ3,063.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய அரசு. ஆனால் பெருமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக் கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை

6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் ஒன்றிய அரசின் மானியமாக ரூ.3,063.21 கோடி வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட இந்த ஆறு மாநிலங்களின் மக்களுக்கு உதவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டின் விவரம் வருமாறு: 'டௌக்டே' சூறாவளியால் 2021இல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி, 'யாஸ்' சூறாவளியால் 2021இல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 - தென்மேற்கு பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளம்/நிலச்சரிவுகளுக்காக அசாமுக்கு ரூ.51.53 கோடி, கருநாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி. இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு ஏற்கெனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்குக் கூடுதலாகும். 2021-2022ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

மேலும், ஒன்றிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 'டௌக்டே' மற்றும் 'யாஸ்' புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ. 1,000 கோடி விடுவிக்கப்பட்டது, 29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ. 300 கோடி வழங்கப்பட்டது. 2021-2022 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு பாதிக் கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், 22 அமைச்சகங்களுக்கு இடையேயான ஒன்றிய குழுக்களை ஒன்றிய அரசு உடனடியாக நியமித்தது." 

இவ்வாறு ஒன்றிய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரி செய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி தமிழ்நாடு அரசு நவம்பர் 16, நவம்பர் 25, டிசம்பர் 15-ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. கரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந் தார். ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவரங்களை மறுக்க முடியுமா? 'துக்ளக்' 'தினமலர்' 'தினமணி' 'தமிழ் இந்து', விஜயபாரதங்கள் எல்லாம் விழுந்து விழுந்து பிஜேபியைத் தோளில் தூக்கி வைத்து ஆதரவுப் பிரச்சாரம் செய்வதின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் பிஜேபி வேர் ஊன்ற முடியவில்லை என்ற பதற்றத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார் என்பதே சரியான மதிப்பீடாகும்.

கஜகுட்டி கர்ணம் போட்டாலும் தமிழ்நாட்டின் தனித் தன்மையான குணத்தின் முன் - அதன் பலத்தில் முன் பிஜேபியாக இருந்தாலும், அதன் அப்பனாக இருந்தாலும் புஜபலம் காட்ட முடியாது - இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment