மற்றொரு கிரன்பேடியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

மற்றொரு கிரன்பேடியா?

"தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவிக் காலம் நிகழாண்டு டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ளார்.

கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018- டிசம்பர் 31-இல் பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்தவற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், மைசூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் டாக்டர் பி.சுரேஷ், போரூர் சிறீராமச்சந்திரா மருத்துவ மய்யத்தின் இதய நல சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

துணைவேந்தர் பொறுப்புக்கு மொத்தம் 37 பேர் விண்ணப்பித்தனர். அதில் மூவரது பெயரை இறுதி செய்து ஆளுநரின் முடிவுக்கு தெரிவுக்குழு அனுப்பியது.

அதில் எவரேனும் ஒருவர்  புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போதைய துணைவேந்தர் டாக்டர்  சுதா சேஷய்யனுக்கு வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக புதிதாக தெரிவுக் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அக்குழுவின் மூலம் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு துணைவேந்தரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது."

('தினமணி' - 10.4.2022)

தமிழ்நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனநாயக ஆட்சிதானே தவிர ஆளுநர் ஆட்சியல்ல.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த 37 பேர்களுள்  தேர்வுக் குழு மூன்று பேர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்றால் அதில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டியதுதான் ஆளுநர் வேலையே தவிர, ஒட்டு மொத்தமாக அத்தனைப் பேர்களையும் நிராகரித்து விட்டு புதிதாகத் தேர்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என்று ஓர் ஆளுநர் சொல்லுவதெல்லாம் - எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட  முடியாத அதிகார துஷ்பிரயோகமே!

ஒருக்கால் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்களுள் 'ஒருவரும் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில்' ஆளுநர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாரோ என்று எண்ணுவதற்கு இதில் இடம் உள்ளது. 

தேர்வுக்கு குழுவைத் தேர்வு செய்த அரசை அவமதிக்கும் செயல் என்பது ஒருபுறம்.

அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் மூவரையும் அவமதிக்கும் அடாத செயலாகவே இது கருதப்பட வேண்டும்.

ஆளுநரின் போக்கைத் தொடர்ந்து கவனிக்கும் பொழுது புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த கிரன்பேடிதான் நினைவிற்கு வருகிறார். 

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 19 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. முதல் அமைச்சர் நேரில் சந்திக்கும் பொழுதெல்லாம் தலையை ஆட்டுவதும், அதற்குப் பின்னர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.

துணைவேந்தரை முடிவு செய்வதில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை என்ற நிலையை சட்ட ரீதியாக உருவாக்கும் முடிவு பற்றி தமிழ்நாடு அரசு கடுமையாக யோசிக்க வேண்டிய தருணம் இதுவே! கேரள மாநில அரசு எடுத்துக்காட்டு!

இப்படியொரு முடிவை எடுத்தால்தான் தமிழ்நாடு ஆளுநரின்  போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

'கொட்டினால்தான் தேள் - இல்லையெனில் பிள்ளைப்பூச்சி' என்ற எண்ணம் ஏற்பட்டு விடக் கூடாதல்லவா!

"திராவிட மாடல் ஆட்சி" என்பதில், நடுப் புள்ளியாக "சுயமரியாதை" என்பது முதன்மையாக இருப்பது - அப்பொழுது தான் தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும்.

"ஆட்டுக்குத் தாடி எதற்கு - நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?" என்ற அண்ணாவின் முழக்கம் நாடெங்கும் வெடிக்காமல் இருப்பது ஆளுநரின் கையில்தான் இருக்கிறது. 

No comments:

Post a Comment