முதுமை சுகமா? சுமையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

முதுமை சுகமா? சுமையா?

வயது ஏறுவது தவிர்க்க முடியாத இயற்கையின் விளைவு. முதுமை என்பதைக் கண்டு அஞ்சவோ, ஆயாசப் படவோ கூடாது.

மனதை இளமையாக வைத் திருந்தால் மட்டும் போதாது நண்பர்களே.

உடலில் தவிர்க்க இயலாது வரும் முதுமைக்கான நோய்களுக்கு போதிய தடுப்பு முன்னெச்சரிக்கைகளையும் முதுமையான நண்பர்கள் கடைப்பிடிக்கத் தவறக்கூடாது.

முதுமையின் விளைவாக வரும் நோய்கள்பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தடுத்தும் மீறி ஏற்பட்டால், அதிலிருந்து விடுபடவோ, அல்லது அதன் தீய விளைவுகளைப் புறந்தள்ளிட முதியவர்கள் கற்றலும் அதன்வழி நிற்றலும் மிக மிக அவசியம்.

(1) மறதிநோய் ( (Dementia) 

(2) பார்க்கின்ஸன் என்ற உதறுவாதம்

(3) சிறுநீர் அடக்க முடியாமை (Urinary incontinence)

(4) அடிக்கடி கீழே விழுந்து விடுதல்  (Fall)

(5) எலும்பு தேய்மானம்

(6) சிறுநீர் வழி அடைப்புச் சதைவலி - புரோஸ்டேட் நோய்  (Prostate disease)

இதுதவிர இரத்த அழுத்தம்  (B.P.) சர்க்கரை நோய், இதய நோய், மத்திய வயதில் ஏற்பட்டு முதுமையில் தொடர்வது என்ற அல்லல் - சிற்சில நேரங்களில் தலை சுற்றல் (Vertigo)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றாலும்கூட நோயுற்ற மனிதர்களை தகுந்த சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம்.

முதுமையிலும் இயன்றவரை நடப்பதை நிறுத்தி விடாமல், வீட்டுக்குள்ளேயே சிறிது நேரமாவது நடந்து தினமும் உடற்பயிற்சிபோல செய்தல், நமது உடலைப் பாதுகாக்க மிக எளிமையான முறை ஆகும்.

பல முதியவர்கள் பிள்ளைகளோ, குடும்பத்த வர்களோ, தங்களை நன்கு கவனிக்காமல் புறக்கணிப்பதுபோல உணர்வார்கள்.

ஒரு கிராமத்து முதியவர் சொன்னார் ஒரு பழமொழி - மிகப் பொருத்தமாக   - "நடைமுடமானால் கிடை சேர நேரிடும்"

புற்று நோய் போன்ற சில நோய்கள் மறைந்து இருந்து தாக்கி, உயிர்களைப் பறிக்கும்  ஆபத்து இருப்பதால், முதியவர்கள் கட்டாயம் உடற்பரிசோதனையை முதுமை நிலைக்கு ஏற்ப, ஒரு ஆண்டுக்கு ஒருமுறையோ, 6 மாதங்களுக்கு ஒரு தடவையோ செய்து கொள்ளுவது மிகவும் இன்றியமையாதது (ஸ்கேன் செய்து பார்த்தல்  - முக்கியமாக நமது உடல்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்).

மருத்துவமும், மின்னணுவியலும் இணைந் ததால் தான் இந்த ஸ்கேன் கருவிகள்  கிடைத்தன - பயோமெடிக்கல் படிப்பும் உண்டு.

ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை போன்றவைகளையும் அத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த உடல் ஆய்வு மூலம் நமக்கு அருமையான அரிய உடல்நலம்பற்றிய உண்மைகள்   தெரிய வாய்ப்புண்டு.

அரசின் ஆயுள் காப்பீடு அல்லது வேறு தனியார் ஆயுள் காப்பீடு திட்டத்தினையும் பயன்படுத்தினால், செலவுகளை ஈடுகட்ட முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக முதியவர்களிடம் கருணையும், அன்பும், பாசமும் காட்ட இளைய தலைமுறையினர் தவறக் கூடாது.

அவர்களை இன்று இளைஞர்கள் சரிவர மரியாதையுடன் நடத்தத் தவறினால், நாளை அதே கதி - இவர்கள் முதியவர்களாகும்போது ஏற்படும் என்பதை மறக்கவே கூடாது! அதே நேரத்தில் முதியவர்களும் இளைஞர்களைப் புரிந்து, உணர்ந்து நடந்து கொள்ளவும் தவறக் கூடாது.

No comments:

Post a Comment