ஆட்சி மொழிச்சட்டத்திற்கு எதிரானது ஹிந்தித் திணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

ஆட்சி மொழிச்சட்டத்திற்கு எதிரானது ஹிந்தித் திணிப்பு

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை யில் தமிழ், வங்காளம், மலையாளம்  உள்ளிட்ட 22 மொழிகள் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள் ளன. அதில் ஒன்றுதான் ஹிந்தி.  பெரும்பான்மையான மக்கள்  ஹிந்தி  அல்லாத மாநில மொழிகளை பேசுகின்றனர். இந்த  நிலையில்  ஆட்சிமொழிக் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதிலாக இனி ஹிந்தி இணைப்பு மொழியாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். இது ஆட்சி மொழிச் சட்டத் திற்கு எதிரானது. 1963ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சி  மொழிச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது ஹிந்தியை தொடர்பு மொழியாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றாத மாநிலங்களில், ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்  என்றது. இதனையடுத்து 1968ஆம் ஆண்டு ஹிந்தியை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய ஆட்சி மொழிச் சட்டத்திற்கு 1976ஆம் ஆண்டு விதிகள் உருவாக்கப்பட்டன. அதுவும், ஹிந்தியை விரும்பாத மாநிலங்களில் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்றது.

இந்நிலையில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேச னுக்கு ஒன்றியஅரசு இந்தியில் கடிதம் எழுதியது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதி மன்றம், ஒன்றிய ஆட்சிமொழி சட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,  நாடாளுமன்ற உறுப் பினருக்கு ஒன்றிய அரசு ஆங்கி லத்தில்தான் கடிதம் எழுத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதற்கு மாறாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடும், ஹிந்தி திணிப்பை  ஏற்றுக் கொள்ள முடியாது; ஆங்கி லம்தான் தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசும், எதிர்க் கட்சிகளும் ஏற்கவில்லை. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையைத்தான் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். அரசின் புள்ளி விவரத்தின்படி, மொத்தவிலை குறியீட்டு எண் 14.55 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சில்லறை குறியீட்டு எண் இதைவிட  அதிகமாக இருக்கும். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஒன்றிய  பாஜக அரசு, தனது ஒரேநாடு ஒரே மொழி என்கிற இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஏப்ரல் 19 செவ்வாயன்று சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக்குழு  சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து...

நன்றி: 'தீக்கதிர்', 21.4.2022

No comments:

Post a Comment