ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: அன்று ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களவர்களின் இன்றைய நிலைகுறித்துத் தங்கள் கருத்து?

- பு.சிவகுமார், ஈரோடு

பதில்: ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்‘ என்பது இயற்கைத் தத்துவம். தமிழர்களை அழிப்பதை வேடிக்கைப் பார்த்தவர்கள் இன்று வாழ்வாதாரம் பறிகொடுக்கும் அவலம். கொடுங்கோல் ராஜபக்சேக் களின் குடும்ப அரசியல் யதேச்சதிகாரத் தீ அவர் களையே சுட்டெரித்துப் பாடம் கற்பிக்கிறது. கடைசி வீட்டுத் தீ தம் வீட்டிற்கும் வரும் என்பதை இனியாவது கற்று வாழட்டும், கொடுமைக்குத் துணைபோன “குணாளர்கள்”.

- - - - -

கேள்வி: மூடநம்பிக்கையினால் உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் எவ்வளவோ நடந்தும், அதுகுறித்த செய்திகள் ‘விடுதலை’ நாளிதழில் வருவதில்லையே?

- செ.சுந்தரம், கவுந்தம்பாடி

பதில்: ‘விடுதலை’ ஒரு முழு செய்தி ஏடாக இல்லா மல், கருத்தியல் நாளேடாக முழு அளவில் உள்ளது. உங்கள் ஆலோசனையை கவனத்தில் எடுத்து நிச்சயம் பகுத்தறிவு பரப்புதல் - மூடநம்பிக்கைகளை அம்பலப் படுத்தும் செய்திகளை அதிகமாக்கிடுவோம் இனி. நன்றி!

- - - - -

கேள்வி: தாங்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரப் பெரும்பயணத்தால், தமிழ்நாட்டிற்கு ‘நீட்’டிலிருந்து விலக்குக் கிடைத்துவிடுமா?

- எ.செண்பகம், பூவிருந்தவல்லி

பதில்: என்னால் - நம்மால் முடிகிறதோ இல்லையோ - மக்கள் எழுச்சியால் எதுவும் முடியும், இது ஒரு விழிப்புணர்வுப் பயணம். தூங்கியவர் விழித்தால் விடிவது உறுதி.

- - - - -

கேள்வி: தமிழ்நாடு ஆளுநர் சென்ற கார்மீது கொடிக் கம்புகள் வீசப்பட்டன என்று கூறி அ.தி.மு.க .வினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருப்பது எதைக் காட்டுகிறது?

- ஆ.ஆதவன், சைதாப்பேட்டை

பதில்: எலி-தவளைக் கூட்டணி போன்ற பழைய கதையையே நினைவூட்டுகிறது.

- - - - -

கேள்வி: இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒப்பிடுக?

- க. கவுதமன், கரையான்சாவடி

பதில்: இரண்டு நிலைகளிலும் ஆக்கப்பூர்வ அணுகுமுறை. அஞ்சாமையும், செயல்திறனும் இரண்டு நிலைகளிலும் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொண்டு, “திராவிட மாடலை” உலகுக்கு உணர்த்தும் இரு நிலைகள்.

- - - - -

கேள்வி: 89 வயதிலும் தங்களை சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?

- ம.அசோக், சென்னை

பதில்: பெரியார் என்ற “சார்ஜர்” - கழகக் கொள்கை உறவுகளின் கட்டுப்பாடு ததும்பும் பாசம்! கட்சி வேறுபாடின்றி அனைவரும் நமக்கு ஊட்டும் உற்சாகம்!

- - - - -

கேள்வி:  அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிடும் இளையராஜாக்கள்பற்றி...?

- மு.மணி, மதுரை

பதில்: நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அலட் சியப்படுத்த வேண்டிய செய்திகளுக்கு அதிமுக்கியத் துவம் தேவையற்ற ஒன்று.

- - - - -

கேள்வி: தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆற்றிய பணிகளைவிட, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பணிகள் சிறப்பாக இருக்கிறதா?

- சு.வில்லவன், கன்னியாகுமரி

பதில்: இப்படி ஓர் ஒப்பீடு தேவைதானா? கலைஞர் பணியின் இத்தகு தொடர்ச்சி வளர்ச்சியாக இருப்பது வியப்பில்லையே! "துப்பாக்கி வயிற்றில் பீரங்கி முழக்கம்!"

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் கொலைகளும், கொள்ளை களும் தொடர்ந்து அதிகரித்து வருவது தி.மு.க. ஆட்சிக்கு நல்லதா?

- நல்லதம்பி, சேலம்

பதில்: ஆட்சியாளர் - காவல்துறையின் கவனமும், அதி தீவிர செயல்பாடும் மேலும் மேலும் தேவை! தேவை!! போதாமை நீங்க வேண்டும்.

- - - - -

கேள்வி: இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் தோல்வி வருகின்ற 2024 இல் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமா?

- சு. கற்பூரவல்லி, தருமபுரி 

பதில்: மக்கள் உணர்வுகள் நாளுக்கு நாள் அதிக புரிதல்களுடன் தான் உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை நிச்சயம் தேவை.


No comments:

Post a Comment