நூல் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

நூல் அறிமுகம்

மனித உரிமைப் போரில் 
பெரியார் பேணிய அடையாளம்

 - பேராசிரியர் கு. வெ. கி. ஆசான்
வெளியீடு:  பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் - பக்கங்கள் 192  - நன்கொடை ரூ.80/-

* சிறந்த பகுத்தறிவாளரும், தனித்தமிழ் பற்றாளரும், உலகப் புகழ் பெற்ற நூலான, ரிச்சர்ட் டாக்கின்சின்  'The God Delusion ' என்ற நூலை தமிழில்,  ' கடவுள் ஒரு பொய் நம்பிக்கை ' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவரும், ' பெரியார் பேருரையாளர் ' என்ற பட்டத்தை பெற்றவருமான பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் (1935 - 2010) பேசிய,  அருப்புக்கோட்டை  கைலாசம் அறக்கட்டளையால் ஜூன் 1988இல் நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவின் தொகுப்பே - இந்த நூல் !

* மனித உரிமைப் போரில் பெரியாரின் பங்கு மிகவும் சிறப்பான ஒன்று ! அவர் மேற்கொண்ட எல்லா போராட்டங்களுமே மனித உரிமைப் போராட்டங்களே !

*  வைக்கம் போராட்டம் | சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் | குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம் | இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் | ஜாதி ஒழிப்பு போராட்டம் | மூடநம்பிக்கை ஒழிப்பு போராட்டம் | அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் போராட்டம் | இவைகள் அத்தனையும் மனித உரிமைக்கான போராட்டங்களேயன்றி ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் அரசியல் போராட்டங்கள் அல்ல !

* ஆகவே, பெரியாரின் இந்த மாண்பை, மானுட மாண்பை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில், 18ஆம் நூற்றாண்டிலிருந்து சமூக மாற்றத்திற்காக நடைபெற்ற நிகழ்வுகளையும் பின்னர் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் பொது வாழ்க்கையில் நுழைந்த காரணங்களையும் விவரிக்கின்றார்.

* பெரியார் காங்கிரசில் சேர்ந்தது (1919), காந்தியின் கொள்கையை தீவிரமாக பரப்பியது, காங்கிரசிலிருந்து வெளியேறியது (1925), சுயமரியாதை இயக்கத்தை துவக்கியது, நீதிக்கட்சியின் செயல்பாடுகள், பெரியார் தனது பிரச்சாரங்களில் மனித உரிமைகளுக்காக பேசியதும் எழுதியதும் என ஒரு ஆய்வாளராக அருமையாக விளங்கச் செய்கிறார் பேராசிரியர் ஆசான் ! 

அவர் தந்த அரிய தகவல்களிலிருந்து நினைவில் வைப்பதற்காக சில செய்திகள் :

*  பெரியாரின் கொள்கைகள் பிறந்தது எவ்வாறு என்ற கேள்விக்கு பேராசிரியர் ஆசான் அடுக்கடுக்காக தருகின்ற காரணங்களை யாராலும் மறுக்க முடியாது.. அந்த காரணங்களால்தான் பெரியார் மறைந்தும் இன்றும் வாழ்கின்றார் என்பது எந்த சந்தேகமும் இல்லாமல் தெளிவாகின்றது. ஆசானின் மொழியிலேயே அதை அறியவும்.

*  " புதியதோர் உலகம் காணப் புறப்பட்ட பெரியார் வகுத்தளித்த புரட்சிக் கொள்கை - புத்தகப் படிப்பிலிருந்து வகுத்ததோ; தனித்த வெற்றிடச் சிந்தனையிலிருந்து தோன்றியதோ; உள்ளொளியாய் திடீரென முளைத்ததோ அன்று ! அவர் ஒரு போதி மரத்தைத் தேடாத புத்தன் ! உண்மையான தொண்டில் மனம் ஒன்றிப் பண்பட்டு பெற்ற அனுபவம் ! துணிந்த ஆழமான நடுநிலை சிந்தனை ! மானமுள்ள வாழ்வுக்கான உரிமை வேட்கை ! மனித நேயம் ! ஆகியவற்றிலிருந்து பெரியாரின் கொள்கை பிறந்தது ! " ....

* மனித உரிமைகளைப் பாதுகாக்கவே பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தை துவக்கினார் என்பதற்கு சான்றாக - செங்கல்பட்டு முதல் மாநில சுயமரியாதை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, குடிஅரசு 13.01.1929 இதழில் பெரியார் தீட்டிய தலையங்கம், சரித்திரம் படைத்த ஆவணமாக திகழ்வதை எடுத்து காட்டியுள்ளார் பேராசிரியர்.

* " முக்கியமாக இம்மாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விடயங்கள் யாவையென்றால் - சமத்துவம்; சமஉரிமை;  சமதர்மம்; சிக்கனம்; அன்பு; இரக்கம்; ஒழுக்கம் ஆகியவைகள் ஏற்படவும், குருட்டு நம்பிக்கை; மூடப்பழக்கம்; தீண்டாமை; பெண்ணடிமை ஆகியவை எடுபடவும், எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்கள் படித்தவர்களை ஏமாற்றமலும், ஏழையை செல்வந்தர்கள் கொடுமைப்படுத்தாமலும், பகுத்தறிவு வளர்ச்சி பெறவும், தன்முயற்சியில் நம்பிக்கை உண்டாகவுமான தன்மைகள் போன்ற விடயங்களே அங்கு நடைபெறும்!

*  ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே தனது கொள்கைகளை, மனித உரிமைகளை காப்பதற்காக உருவாக்கி, சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து, நீதிக்கட்சியின் தலைமையையும் ஏற்று, பின்பு திராவிடர் கழகத்தை தோற்றுவித்து - மனித உரிமைப் போரை தனது இறுதி மூச்சு வரை நடத்திக் காட்டிய தலைவரை அறிந்து கொள்ள 

இது மேலும் ஒரு அருமையான படைப்பு!

பொ. நாகராஜன்

"பெரியாரிய ஆய்வாளர்"

No comments:

Post a Comment