ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி-1:  இன்றும் முந்தைய ஆட்சியே நடப்பதைப் போன்று சில துறை உயரதிகாரிகள் நடந்துகொண்டு வருகிறார்கள். இதனால் முதலமைச்சரின் உழைப்பு மக்களிடையே செல்வது தடைபட்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவது போல் தெரிகிறதே? 

 - மலர்,  சென்னை

பதில்: பழைய இருண்ட கால ஆட்சியில் பயனடைந்த வவ்வால்களான சில அதிகாரிகள் - காவல்துறை, அய்.ஏ.எஸ். மற்றும் அடுத்த கீழ்மட்டத்தில் உள்ள அத்தகைய அதிகாரிகள் “பழைய நினைப்புடா பேராண்டி” என்ற சிந்தனையோடு முதலமைச்சரின் உழைப்பை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்காமல், விஷமத்தனம் செய்வதும் தொடர்கிறது. இத்தகைய ‘அதிகாரக் கரையான்களை’ நீக்க மருந்தடிக்க வேண்டியது முக்கியம்! முக்கியம்!!

----

கேள்வி-2:  ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா மற்றும் சில மாநிலங்களை ஆளும் கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிராக நிற்கத் தயங்குகின்றனவே?

 - சிதம்பரநாதன், தாம்பரம்

பதில்: “வீரன் ஒரு முறைதான் சாகிறான், கோழை பல முறை சாகிறான்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் மகா ராஜதந்திரிகள் - சிலர் மடியில் கனம், அதிலிருந்து விடியல் எப்போது என விழி பிதுங்க காத்திருப்போர் - இப்படி பல வகையினர்.

----

கேள்வி-3: முன்பு மாட்டிறைச்சிக்குத் தடை,  தற்போது ஹிந்துக்கள் இறைச்சியே உண்ணக்கூடாது என்று  வட இந்தியாவில் ஹிந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளை அடைக்கச் சொல்லி ஹிந்துத்துவ அமைப்புகள் மிரட்டுகின்றார்களே?

 - தங்கராஜ், செங்குன்றம்

பதில்: எந்தத் துவக்கத்திற்கும் முடிவு உண்டு  என்ற தத்துவப்படி அந்த முடிவின் துவக்கம் வந்து, நிறைவு பெற்றால், மாட்டுக்கார மனிதர்கள் காணாமல் போவார்கள்!

கேள்வி -4 தாழ்த்தப்பட்டமக்களை ஹிந்துமதப் பட்டியலில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது குறித்து ஹிந்து விரோதி என்று  அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுகிறதே?

- ஜோயல்ராஜ், பொத்தூர்

பதில்: ஏற்கெனவே ஹிந்து மதம் என்ற சனாதன, ஆரிய, பார்ப்பன வேதமதம், அவர்களை ஜாதியற்றவர்கள் அதாவது ‘அவர்ணஸ்தர்கள்” என்றுதானே வைத்துள்ளது.

ஜாதியை ஏற்காதவர்கள் ஹிந்துவாக இருக்க முடியாது - மதத்தத்துவப்படி கடவுளை ஏற்காதவர் கூட ஹிந்து மதத்தில் இருக்கலாம் என்ற போதிலும். எனவே அவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியான கருத்து ஆகும்!

 ---

கேள்வி -5:  இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தின் மூலம்  கற்க வேண்டிய பாடம் என்ன?

- வேல்முருகன், பொன்னேரி

பதில்: ஆட்சியில் பாசிசம், சர்வாதிகாரம் செய்து தலை கால் தெரியாமல் ஆடுபவர்களுக்கு இறுதி அத்தியாயம் இப்படித்தான் அமையும் என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ள, அண்மைக் கால எளிதான உதாரணம் இல்லையா? 

---

கேள்வி-6:  தொழில் நிறுவனங்களை அரசு நிறுவாமல், கார்ப்பரேட்டுகளிடம் தொழில் துறையை ஒப்படைப்பது சரியானதா?

- உ.விஜய், சோழங்குறிச்சி

பதில்: அரசுத்துறை, தனியார் துறை, அரசும் - தனியாரும் இணைந்த துறை  (Public Sector, Private Sector, Joint Sector)  என்ற மூன்றும் - நமது நாட்டில் முறையாக நடக்க வேண்டியது இன்றையக் காலக் கட்டத்தில் முக்கியம். அரசுத்துறையை அழித்து, சர்வம் தனியார் மயம் என்ற நிலைப்பாடு கண்டனத்திற்குரியது!

மாநில அரசு முதல் கட்டத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தனியார் முதலீடுகளை வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. காரணம் கருவூலம் காலியாக இருக்கிறது. கடனும் தீர்க்கப்பட வேண்டுமே!  

---

கேள்வி-7  மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஹிந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதே காங்கிரஸ் கட்சி?

- அ.தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: போதை ஒழிப்பை நடத்திட நாமும் போதை மாத்திரையை உட்கொள்ளலாம், போதைக் கும்பலோடு சேரலாம் என்பது போன்ற கேலிக்கூத்து இது!

சிகிச்சை, நோயை விட ஆபத்தானாலும் கூட மிக மோசமானதாக ஒரு போதும் அமையக்கூடாது.

ம.பி.யில் (காங்கிரஸ்கட்சி பொறுப்பில் உள்ள இஸ்லாமியர்கள்) இதனைக் கண்டித்துள்ளனரே!

--

கேள்வி-8 எளிய மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு இங்கு திண்டாடிக் கொண்டிருக்கும் போது போபர்ஸ் இதழின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானியும், அம்பானியும் இருக்கிறார்களே?

-தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: பா.ஜ.க. ஆட்சியின் அபூர்வ விளைச்சல் அதுதான்.  அதானிக்கு கரோனா காலத்தில் நாள் வருமானம் 1000 கோடி என்ற நிலைதான். 75ஆம் ஆண்டு சுதந்திரத்தில் கிடைத்த ‘சொக்கத்தங்கம்‘ ஏழைகளின் வாக்குகள் - முதலாளிகள் வருமானம்,  ஒடுக்கப்பட்ட ஜாதிகள் வறுமை - ஆதிக்க ஜாதியின் ஆட்சி பலம்.விசித்திர நாடு நம் ‘ஞான பூமி!’

---

கேள்வி-9:  பெயரைக் கேட்டாலே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என நினைக்கும் நிலை மாறி, கடந்த 20 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் 90 சதவீதம்  குழந்தைகளுக்கு  சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துப் பெருமைப்படும் பெற்றோர்கள் பற்றி?

- மன்னை சித்து , மன்னார்குடி - 1.

பதில்: ஆம். சரியான கேள்வி, இதற்கென தமிழ் இன உணர்வாளர்களும், தமிழ்நாடு அரசும் - பொது இயக்கங்களும் இணைந்து விடை காண வேண்டியது அவசரம், அவசியம்!

----

கேள்வி-10:  சேலம் ஆத்தூர் அருகே 146 அடி உயரத்தில் முருகனுக்குச் சிலை வைத்துள்ளார்களே?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: இதற்கு முறைப்படி அரசின் பல துறைகளின் அனுமதி வாங்கப்பட்டதா? இந்து அறநிலையத்துறை அனுமதி பெறப்பட்டதா? சிலை உரிய பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் கேட்டு விடைபெற வேண்டியது முதல் கட்டம். முக்கியமும் கூட. 

பக்தி வியாபாரம் மிக நன்றாக செழிக்க இப்படிப் புதுப்புது உத்திகள் போலும்!


No comments:

Post a Comment