தமிழர்களே! தமிழர்களே! ‘தமிழ் வருஷப் பிறப்பு’ மகிமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

தமிழர்களே! தமிழர்களே! ‘தமிழ் வருஷப் பிறப்பு’ மகிமை!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ஆ.சிங்காரவேலு முதலியாரால் 1890ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கப்பட்ட ‘முதல் தமிழ் கலைக்களஞ்சியத்திற்கு’ பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்வி நிறுவனப் பிரிவின் அறங்காவலராக இருந்த வ.கிருஷ்ணமாச்சாரி, அதிக செலவாகுமென்று உதவி செய்ய மறுத்ததால், நிதியுதவி கேட்டுப் பலரிடம் விண்ணப்பித்தும் பலனின்றிப் போன நிலையில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த பாண்டித்துரை தேவர் முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டதால் 1050 பக்கங்கள் கொண்ட ‘அபிதான சிந்தாமணி’ (Abithana Chintamani: The Encyclopedia of Tamil Literature)  1910இல் வெளிவந்தது. அந்த நூலில் ‘விடுபட்டுப் போனதையும் பின்னர் தெரிந்துகொண்டவற்றையும்’ சேர்த்து இரண்டாவது பதிப்பைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர் 1931இல் காலமாகிவிடவே, அவரது மகனும் சென்னைத் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உயரதிகாரிகளில் ஒருவராக இருந்தவருமான ஆ.சிவப்பிரகாச முதலியார் 1634 பக்கங்களுடயை அதன் இரண்டாம் பதிப்பை 1935ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

முதல் பதிப்பின் முன்னுரையில், சங்க இலக்கியங் களைப் பொறுத்தவரை உ.வே.சா. அவர்களின் பதிப்புகள் தனக்கு உதவியதாகக் குறிப்பிடும் ஆ.சிங்காரவேலு முதலியார் இந்தக் ‘கலைக்களஞ்சிய’த்தின் கணிசமான பகுதிகளுக்கான தரவுகளைக் குறிப்பிடுகிறார்:

“நான் ஒருவனே பலர்கூடிச் செய்ய வேண் டிய இதனை ‘கலேகபோதிநியாயாயமாக’, பல விடங்களிற் சென்று பல அரிய கதைகளைப் பல புராண, இதிஹாஸ, ஸ்மிருதி, ஸ்தல புராணங்களிலும், மற்றுமுள்ள நூல்களிலுமுள்ள விஷயங்களையும், உலக வழக்குகளையும் அவற்றினுட் கருத்துகளையும் தழுவியதாகும். இதிலடங்கியவை: வேதப் பொருள் விளக்கம், பல மஹாபுராணக் கதைகள், ஸ்தலபுராணக் கதைகள், பாரதாதி இதிஹாசங்கள், ஸ்மிருதி விஷயங்கள், பல நாட்டுச் சமய நிச்சயங்கள், பல ஜாதி விஷயங்கள், பரதம், இரத்தினோற்பத்தி, வைத்யம், சோதிடம், விரதம், நிமித்தம், தானம், கனாநிலை, பல சமய அடியாழ்வார்களின் சரிதைகள், பல வித்வான்களின் சரிதைகள், சிவாலய விஷ்ணுவாலாய மான்யங்கள், சூர்ய சாத்திர, ராக்ஷஸ, இருடிகளின் பரம்பரைகள், சைவ வைஷ்ணவ மாதவ ஸ்மார்த்த சமய வரலாறுகள், சைவாதீன பண்டார சந்நதிகளின் மட வரலாறுகள், இந்து தேசம் ஆண்ட புராதன அரசர் வரலாறுகள் முதலிய அரிய விஷயங்களாம்.

இது ஒரு தத்வ கலாரத்னாகரமாய் மந்திர சாஸ்திரமாயுள்ள அரிய விஷயங்கள் நீங்க மற்றவைகளின் சாரசங்கிரகமாகும்...

நம் புண்ணிய பூமியான பாரத தேசத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஊறுவிளைவிக்கும் விதேசிகளின் அறிவியல், வரலாறு எழுதுமுறை, ஆராய்ச்சி முறை ஆகியவற்றை நாடாமல், நம் அறிவுக்கு ஆதாரமான புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றிலிருந்து நம் வரலாறு முதலியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேசபக்த உணர்வால் உந்தப்பட்டு, தமிழ் வருஷப் பிறப்பு (’தாது வருஷப் பஞ்சம்’ என்றால் விதேசிகளின் ஆண்டுக் கணக்கை நாட வேண்டிய துர்பாக்கியம் ஒருபுறம் இருந்தாலும்) பற்றிய ஆதார அறிவை இக்களஞ்சியத்தில் தேடிக் கண்டறிந்தேன். இரண்டாம் பதிப்பில் 1892ஆம் பக்கத்தில் காணக் கிடைக்கும் அது பின்வருமாறு:

வருஷம் - 1. ஒருமுறை நாரத முநிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதாயிரம் கோபிகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன, அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, உடன்பட்டுத் தான் (60000) வீடுகளிலும் பார்த்து இவர் இல்லாத வீடு கிடைக்காததால் கண்ணனிடம் வந்து அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணங்கொண்டேன் என்றனர். கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ்செய்ய ஏவ, முநிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர். இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.

2. பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கிரீச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள். சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி. விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்.பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதி, கிருது, பரிதாபி, பிமாதீச, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துன்மதி, துந்துபி, உருரோத்காரி, இரதாக்ஷி, குரோதன, அக்ஷய இவ்விருபதும் அதம வருஷங்களாம்.

3. பூமி தன்னினும் பல மடங்கு பெரிய சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு (3651/4) நாட்கள் ஆகின்றன.அதுவே வருஷம்”.

தமிழர்களே... இப்போது தெரிந்துகொள்ளுங்கள்... உங்கள் தமிழ் வருஷப்பிறப்பின் மகிமையை!

நன்றி: மின்னம்பலம் இணைய இதழ் 10.4.2022

 கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மய்யத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர்.  The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.



No comments:

Post a Comment