இலங்கைக்கு உதவி செய்யட்டும் - தமிழ்நாட்டு மீனவர்கள் உரிமைகளையும் காப்பாற்றட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

இலங்கைக்கு உதவி செய்யட்டும் - தமிழ்நாட்டு மீனவர்கள் உரிமைகளையும் காப்பாற்றட்டும்!

 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு - உயர்நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்திட்ட வெற்றி!

இராமநாதபுரம் - காரைக்குடியில் தமிழர் தலைவர் பேட்டி

இராமநாதபுரம், ஏப். 8  பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் இலங்கைக்கு இந்திய ஒன்றிய அரசு உதவி செய்யட்டும்; அதேநேரத்தில், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த நேரத் தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்திட்ட வெற்றி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பிரச்சார பயணக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (7.4.2022) இராமநாதபுரம் - காரைக்குடிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

அரசமைப்புச் சட்டப்படி ஒரு மாநில அரசு அமைச் சரவையில் ஒருமுறை அல்ல பலமுறை 'நீட்'டிலிருந்து விலக்குக் கோரி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அரசுகள் மாறினாலும், இந்த நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுகள் தொடர்ச்சி யாக இருக்கிறது. பேரறிவாளன் உள்பட ஏழு பேர் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குமேலாக சிறைச் சாலையில் இருந்தி ருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது, உச்சநீதிமன்றமே இதை ஏன் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறது.

இதை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், அரசமைப்புச் சட்டப்படி அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லாத தால், வேறு எதுவும் செய்ய முடியாததால் அவர்கள், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் ஆளு நருடைய பணியாகும்.

உச்சநீதிமன்றம் தெளிவாக சொன்ன பிறகுதான், அவருக்கு பரோல் கிடைத்தது; பிறகு ஜாமீனும் கிடைத் திருக்கிறது.

இலங்கைக்கு இந்தியா உதவி - ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

செய்தியாளர்: தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர் களைக் கைது செய்துகொண்டே இருக்கிறார்கள்; ஒன்றிய - மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக் காததுதான் இதற்குக் காரணமா?

தமிழர் தலைவர்: மாநில அரசைக் குறை சொல்வதால் ஒரு பயனும் இல்லை. இது மாநில அரசின் எல்லைக்குள் இல்லை. இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

இலங்கை நாடு நெருக்கடியில் இருக்கிறது என்று இந்திய ஒன்றிய அரசு பணம் கொடுக்கிறது; மற்ற உதவி களை செய்கிறது.

இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டிய பணி களை செய்துகொண்டிருக்கிற இந்திய ஒன்றிய அரசு, நம்முடைய நாட்டு மீனவ சகோதரர்கள் அவர்களுடைய தொழிலை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள்.  அவர்களுடைய பிரச்சினைக்கு முக்கி யத்துவம் கொடுக்க முன்வருவதில்லை ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் திட்டமிட்டு எல்லையைத் தாண்டுவதில்லை; கடலில் காற்றடிக்கும் திசையில் படகு அந்தப் பக்கம் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உடனே அவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பது என்றால், இது எப்படி நியாயமாகும்?

இந்திய ஒன்றிய அரசு, இலங்கைக்கு வாழ்வாதாரமே இல்லை என்று சொல்கிறவர்கள், இங்கே இருக்கின்ற நம்முடைய குடிமக்களுடைய வாழ்வாதாரத்தைப்பற்றி அதிகமாகக் கவலைப்படவேண்டும் அல்லவா!

இலங்கையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது தவறு என்று நான் சொல்லவில்லை.

ஆனால், குறைந்தபட்சம் எங்கள் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்று சொல்லவேண்டும் அல்லவா!

இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வு வரவேண்டுமானால், கச்சத்தீவை மீண்டும் நம்மிடம் திரும்பவேண்டும்.

அதற்காக இராமேசுவரத்தில் திராவிடர் கழகம் சார்பில் ஒரு பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து, அம்மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு தீர்வு காணவிருக்கிறோம்.

இப்பொழுது இருக்கிற நம்முடைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், மீன் வளத்துறை என்ற பெயரினை, மீனவர் நலன் என்று மாற்றினார்.

மீனவர் பிரச்சினை என்பது ஒன்றிய அரசுதான் தலையிட்டுப் பேசவேண்டும். நேரடியாக மாநில அரசு பேச முடியாது.

ஆகவே, இலங்கை அரசுக்கு அதிகமாக உதவிக் கரத்தை  நீட்டக்கூடிய ஒன்றிய அரசு, குறைந்தபட்சம் தமிழ் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருப்பதற்கான வழியை செய்யலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; மனம் இல்லை.

கச்சத்தீவை மீட்க வற்புறுத்தப்படுமா?

செய்தியாளர்: ஒன்றிய அரசு இலங்கைக்கு இப்பொழுது நிறைய உதவிகளைச் செய்கிறது; இதைப் பயன்படுத்தி கச்சத்தீவை முழுமையாக மீட்கவேண்டும் என்று சொல்கிறீர்களா?

தமிழர் தலைவர்: இதைப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை; நியாயம் நம் பக்கம் இருக்கிறது. அந்த அடிப்படையில் தாராளமாகக் கேட்கலாமே!

ஏன் இவ்வளவு உதவிகளை இலங்கைக்கு செய்கிறோம் என்று சொன்னால், அப்படி ஒன்றிய அரசு செய்யாவிட்டால், சீனா பக்கம் சாய்ந்துவிடும் இலங்கை என்று பூச்சாண்டி காட்டினார்கள்.இப்பொழுது அந்தப் பூச்சாண்டிக்கும் வழியில்லை.

மனிதாபிமான அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் உதவிகளை செய்யட்டும் ஒன்றிய அரசு. ஆனால், நம்முடைய நாட்டில் இருந்து அதைத் தொடங்கவேண்டும். இந்த நாட்டு குடிமக்கள் மீனவர்கள் - அவர்களுக்கு ஓர் ஆபத்து வரும்பொழுது, இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கூட செய்யவில்லையானால், அவர்களுக்கு மனம் இல்லை என்றுதான் அர்த்தம்.

நீட் தேர்வால் யாருக்குப் பயன்?

யாருக்குப் பாதிப்பு?

செய்தியாளர்: 7.5 இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே?

தமிழர் தலைவர்: நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க பெரும்பாலான வசதிபடைத்தவர்கள், பாரம்பரியமாகக் கல்வியை ஏகபோகமாக உடைய குடும்பங்கள் இவர்களுக்கே பயன்கிட்டுகிறது. சி.பி.எஸ்.. பள்ளி மாணவர்களுக்கே வாய்ப்புகள் அதிகம். குறைந்த வாய்ப்பில் டாக்டராக வர முடியாத சூழ்நிலையில்தான், இதற்கு முந்தைய அரசு, நீதிபதி கலையரசன் அவர்களுடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கலாம் என்று சொன்னது.

பழைய அரசு 10 சதவிகிதத்தை ஒதுக்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் 7.5 சதவிகிதத்தைத்தான் ஒதுக்கினார்கள்.

இதில் மிக முக்கியமான ஓர் அடிப்படையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நீட் தேர்வு என்பது எவ்வளவு சங்கடமான ஒன்று என்று பார்த்தால், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் தேர்வாகவில்லை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

நம்முடைய மொத்த இடங்களையும் ஒன்றிய அரசுக்குக் கொடுத்துவிட்டு, அதில் கொஞ்சமாவது கொடுங்கள் என்று கேட்பது- கெஞ்சுவது போன்று இருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்தால், எல்லா மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

நீட் தேர்வைப் பொறுத்தவரையில், 11 லட்சம் விண்ணப்பங்கள் இந்தியா முழுவதும் போன நிலையில், வெறும் 88 ஆயிரம் இடங்கள்தான் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கேகூட வாய்ப்புகள் கிடையாது. வரிசைப்படி அதிகமான மதிப்பெண்கள் பெறவேண்டும். யார் அதிக மதிப்பெண்கள் வாங்கினார்கள் என்றால், கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்று, மூன்றாவது முறை, நான்காவது முறை நீட் தேர்வு எழுதி, ஏராளமான பணத்தை செலவழித்தவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

12 ஆம் வகுப்பு படிப்பு என்பதே அர்த்தமில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அவ்வகுப்பில் வாங்கும் மதிப்பெண்ணே மதிப்பில்லாத ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டது.

இந்த சூழ்நிலையில், ஏதாவது கொஞ்சம் இடமாவது கிடைக்கட்டும் என்பதற்கா ஒரு இடைக்கால ஏற்பாடுதான் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு.

பாலம் கட்டும்வரை, மாற்று வழி இருக்கிறதோ, அதுபோன்று. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு!

செய்தியாளர்: வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என்று சொல்லியிருப்பதுபற்றி....?

தமிழர் தலைவர்: தொடக்கத்தில் சமூகநீதி என்பதே தந்தை பெரியார், நீதிக்கட்சி காலத்திலிருந்து தெளிவாக அனைவருக்கும் அனைத்தும் என்ற அளவில் வருகிறபொழுது, எல்லா வாய்ப்புகளும் கிடைக்கக் கூடிய அளவில், புள்ளி விவரத்தோடு செய்யவேண்டும்.

10.5 சதவிகத இட ஒதுக்கீடு, தேர்தலை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்டு, அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோன்று செய்தார்கள். இதை அப்பொழுதே நாங்கள் சொன்னோம்.

இரண்டு நாள்களில் சட்டத்தை நிறைவேற்றி, தேர்தல் அறிவிப்பு 4 மணிக்கு வந்தது என்றால், மூன்று மணிக்கு இந்த சட்டத்தை அறிவித்து, கையெழுத்துப் போடுகிறார்கள். அதிலுள்ள குறைபாடுகளைப்பற்றி சட்ட நிபுணர்களிடம் கலந்ததாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே, 69 சதவிகிதத்திலிருந்துதான் அது எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த 69 சதவிகித இட ஒதுக்கீடும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதும், இதிலிருக்கும் குறைபாட்டை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதை - தமிழ்நாடு அரசு, அதனை தக்க வகையில் சரிப்படுத்தி, குறிப்பாக இன்றைய  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுடைய அரசு தெளிவாகச் செய்யும்.

யாருக்கும், எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய வகையில் இருந்தால், எப்படி 7.5 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று சொன்னார்களோ, அதேபோன்று ஒரு குழு அமைத்து, தெளிவாக 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டு சட்டத்தை செய்திருந்தால், இந்த அவலம் ஏற்பட்டு இருக்காது.

88 பக்கத் தீர்ப்பை படித்த நேரத்தில், தீர்ப்பின் பல அம்சங்கள் சட்ட ரீதியாக இருக்கக்கூடிய இடையூறுகளைப்பற்றி சிந்திக்காமல், மீண்டும் சொல்கிறேன், அவசரக் கோலத்தில் அள்ளி தெளித்ததுபோல இருக்கிறது.

உதாரணமாக, ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்தம், அதற்குப் பிறகு இன்னொரு அரசமைப்புச் சட்டத் திருத்தம் வருகிறது - அதற்கிடையில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் பார்க்கவில்லை.

என்றாலும், மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்பது நமது எண்ணம் அல்ல. அதிலுள்ள குறைபாடுகளை நீக்கவேண்டும்.

எனவேதான், அந்தக் குறைபாடுகளோடு இருக்கின்ற காரணத்தினால், சட்ட ரீதியாக நிற்கக்கூடிய அளவிற்கு அதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையில்தான், இப்படிப்பட்ட ஒரு வழக்கு வந்திருக்கின்ற நேரத்தில், அவசரமாக கருத்துகளை சொல்லவேண்டாம் என்று இருந்தோம்.

இந்த நிலையைத் தெளிவாக்கியவுடன், சமூகநீதியில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும் நம்முடைய தமிழ்நாடு அரசு, பெரியாருடைய பிறந்த நாளை சமூகநீதி நாளாக இன்றைய முதலமைச்சர் தெளிவாகக் கொண்டாடியபோது எடுத்த உறுதிமொழயில், அந்த சமூகநீதிக்கான விளக்கத்தில், அனைவருக்கும் அனைத்தும்.

எனவேதான், யாருக்கும் அதிருப்தி ஏற்படாத வகையில், பாதிக்கப்பட்ட மக்கள் எங்கே இருந்தாலும், எல்லோருக்கும் விரைவிக் கொடுக்கவேண்டும்.

இட ஒதுக்கீடு என்பதே, மிகப்பெரிய அளவில், தேவை அதிகம்; இருப்பது குறைவு. யாருக்கு எப்படி விநியோகம் செய்வது என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டினுடைய தத்துவம்.

அனைவருக்கும் அனைத்தும் என்று இருக்கிறபொழுது, அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட  முடியாத அளவிற்கு இருக்கும்.

ஆகவேதான், அவசரக் கோலத்தில் செய்யப்பட்ட அந்த சட்டத்தில் இருக்கின்ற ஓட்டைகளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

ஆகவே, அதனை சரிப்படுத்தி, சட்ட நிபுணர்களின் கருத்துகளோடு, போதிய தரவுகளோடு நிச்சயமாக மீண்டும் அதை செய்யக்கூடிய ஆற்றலும், திறமையும், ஒழுங்குமுறையும் தெளிவாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உண்டு. அதனைச் செய்வார்கள். யாரும் இதில் அவசரப்படவேண்டிய அவசியமில்லை. அவசரப்பட்டு, மிக வேகமாக சென்றால், ஏற்கெனவே சந்தித்த ஒரு அவலம்தான் ஏற்படும்.

ஆகவேதான், வேகத்தடைகள் எங்கெங்கே இருக்கிறது என்று பார்க்காமல் வண்டியை ஒட்டிக்கொண்டு போனால், என்ன ஆபத்து ஏற்படுமோ, அதுபோலத்தான் இதிலும் ஏற்படும்.

பி.ஜே.பி.மீது மக்களுக்கு அதிருப்தி!

செய்தியாளர்: ஒன்றிய அரசில் காங்கிரசோ, மற்ற கட்சிகளோ வலுவாக இல்லாத நிலையில், பி.ஜே.பி.யினுடைய செல்வாக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருவதுபோன்று ஒரு கருத்து இருக்கிறதே?

தமிழர் தலைவர்: மக்களுடைய அதிருப்தி என்பது பி.ஜே.பி.யின்மீது இருக்கிறது.

ஏனென்று சொன்னால், அவர்கள் சொன்ன எதையுமே நிறைவேற்றவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் ஒரு வித்தையை வைத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகள் நன்கொடைகளை அதிகமாக 78 சதவிகிதம் பி.ஜே.பி.தான் வாங்கியிருக்கிறது.

தேர்தல் வித்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, முன்பு எவ்வளவு இடங்களில் வெற்றி பெற்றார்களோ, அதே அளவு இப்பொழுது வெற்றி பெறவில்லை.

உத்தரகாண்ட் முதலமைச்சரே தேர்தலில் தோல்வி கண்டிருக்கிறார். அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், பழைய இடங்களை அவர்கள் பெறவில்லை.

எனவேதான், மக்களுடைய அதிருப்தி என்பது ஏராளமாக இருக்கிறது.

விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், ஒவ்வொரு ஆண்டிலும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்கள்; அப்படி செய்திருந்தால், 16 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொன்னார். ஒரு ரூபாய்கூட போடவில்லை.

முட்டை விலைகூட அதிகமாகிவிட்டது; தேநீர் விலைகூட 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகிவிட்டது. சமையல் எரிவாயு ரூ.965 ரூபாயாகிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையினால் நாள்தோறும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியினால், மக்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிகளில் இது எதிரொலிக்கும்.

மாநில அரசு தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது அப்படியே  மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கவேண்டிய அவசியமில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய அதிருப்தி மேகங்கள் மிக வேகமாக வந்துகொண்டிருக்கின்றன.

இதனை எதிர்க்கட்சிகள் நல்ல அளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மக்கள் தயாராக இருக்கிறார்கள்; சில அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. இது நாளடைவில் சரிப்படுத்தப்படும்.

செய்தியாளர்: அண்ணாமலை அவர்கள், என்னை சீண்டினால், தி.மு..காரர்கள் பாதி பேர் ஜெயிலுக்குப் போவார்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: மிரட்டல் அரசியல். அவர் காவல்துறையில் இருந்ததினால், மிரட்டல் அரசியல் செய்கிறார். இப்படி மிரட்டல் அரசியல் செய்தவர்களையெல்லாம் வரலாறு எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறது என்பதை அவர் நினைத்துப் பார்த்தால், தெளிவாகத் தெரியும்.

இந்தப் பனங்காட்டு நரிகள், இதுபோன்ற சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment