என்.எல்.சி.யின் சதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

என்.எல்.சி.யின் சதி!

 தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

என்.எல்.சி. நடத்தும் தேர்வின் முறைகேடுபற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. 

Graduate Engineering Trainee (GET) என்ற பணிக்கு 300 பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த 26-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகளுக்கான இப் பணிக்கு விண்ணப்பிக்க Gate 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக Gate  தேர்வுகள் M.tech  போன்ற மேற்படிப்புகளுக்காக எழுதப்படுபவை. மேற்படிப்பு எண்ணம் இல்லாதவர்கள் 'கேட்' தேர்வுகள் எழுதுவதில்லை. ஆனால், இப்பணிக்கான அடிப்படைத் தகுதியாக வைக்கப்படுமேயானால், முன்கூட்டியே அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளில் (2014-2018) அவ்வாறே விளம்பரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன. அதற்கேற்ப விண்ணப்பிக்க விரும்புவோர் 'கேட்' எழுதி, தயாராக இருப்பார்கள். தற்போதும் அத்தகைய விளம்பரங்களை முன்கூட்டியே வெளியிட்டுத் தான் கோல் இந்தியா, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள், தங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரை 'கேட்' தேர்வுக்குத் தயார்படுத்தச் செய்கின்றன.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு ‘கேட்’ தேர்வு இல்லாமல், என்.எல்.சி. நிர்வாகம் நடத்திய தேர்வு மூலமே பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டுக்கு 'கேட்' தேர்வின் அடிப்படையிலேயே பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தால், என்.எல்.சி. சார்பில் முன்கூட்டியே ‘கேட்’டுக்குத் தயார்படுத்தக் கோரும் விளம்பரம்  வெளியிடப்பட்டிருக்க வேண்டும். வெளியாகவில்லை. 

கடந்த ‘கேட்’ தேர்வு 2021-இல் முடிந்து அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதியில் வெளியாகிவிட்டன. ஆனால், “கேட் தேர்வு அடிப்படையிலேயே பணியிடம் நிரப்பப்படும்; ஏப்ரல் 11-ஆம் தேதியே விண்ணப்பிக்க இறுதிநாள்” என்று இப்போதைக்கு ‘கேட்’ தேர்வு எழுத முடியாத சூழலில் அறிவித்திருப்பது, வாய்ப்பை மறுக்கும் அடாத செயலாகும். 

ஒன்று முந்தைய முறையைப் பின்பற்றி ‘கேட்’ தேர்வு இல்லாமல், நெய்வேலி நிலக்கரி நிறுவனமே தனித் தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது 'கேட்' தேர்வு கட்டாயம் என்பதை அறிவித்துவிட்டு, எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்தபின், அதன் அடிப்படையில் பணி நியமனத்திற்கான நேர்காணலை நடத்த வேண்டும். 

வடவர்களுக்கு மட்டும் பயன்படும் வாய்ப்பாக இப்படி திடீரென ஒரு ’கேட்’டைப் போடுவது கண்டனத்திற்குரியது. என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்று, நியாயமாக அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

கி. வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
9-4-2022


No comments:

Post a Comment