குலக்கல்வியை எதிர்க்க இதே நாகை அவுரித் திடலிலிருந்தே புறப்பட்டு வெற்றி பெற்றோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 10, 2022

குலக்கல்வியை எதிர்க்க இதே நாகை அவுரித் திடலிலிருந்தே புறப்பட்டு வெற்றி பெற்றோம்

'நீட்'டை ஒழிப்பதிலும் வெற்றி பெறுவோம்!
தமிழர் தலைவர் எழுச்சி முழக்கம்

திருவாரூரில்  நடைபெற்ற பிரச்சார பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார் (9.4.2022). 

நாகை, ஏப்.10-  உடம்பெல்லாம் மூளை என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஆச்சாரியார் (ராஜாஜி) 1952இல் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க இதே நாகப்பட்டினத்தில் தான் குலக்கல்வி ஒழிப்பு மாநாடு நடத்தி, இதே அவுரித் திடலிலிருந்து பிரச்சாரப்படை சென்னையை நோக்கிப் புறப்பட்டது. அதில் வெற்றியும் பெற்றோம். அதே போல 'நீட்' புதிய கல்வி திட்டங்களையும் ஒழிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். 

நாகப்பட்டினத்தில் நேற்று (9.4.2022) மாலை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

குலக் கல்வியை எதிர்த்து நடைபயணம்

தமிழர் தலைவர் தமது உரையில் "தொடக்கத்தில் நாம் நீட் தேர்வே கூடாது என்று சொன்னால், ’நீட்’ தானே வேண்டாம் என்கிறீர்கள்? நாங்கள் அதை விட அதிகமாக கொண்டு வருகிறோம் பாருங்கள் என்று 'ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை! தாழ்ப்பாளை அல்ல, அந்தக்கதவையே தகர்க்கும் சக்தி, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு உண்டு” என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே சொன்னார். தான் ஏதோ அலங்காரத்திற்காகச் சொல்லவில்லை என்று ஒரு முன்னுதாரணத்தையும் சுட்டிக்காட்டினார். "உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூளை என்று சொல்லப்பட்டவர்; வெள்ளைக்காரன் போன பிறகு, முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்; ஹிந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று சொன்னவர்களை சிறையிலடைக்கணும் என்றவர்; பெரியாரை பெல்லாரி சிறையிலே அடைத்தவர் ராஜகோபாலாச்சாரி என்று சொல்லப்படக்கூடிய ராஜாஜி கொண்டு வந்த இதே குலக்கல்வியை சட்டப்போராட்டம் நடத்தி, சர்வசக்தி வாய்ந்த ராஜகோபாலாச்சாரியை பெரியார் கடுமையாக எதிர்த்து அவரை விரட்டியடித்தார். இதே அவுரித்திடலில் இருந்து அந்த குலக்கல்வியை எதிர்த்து சென்னை வரை நடைப்பயணம் செய்த வரலாறு இந்த நாகப்பட்டினத்திற்கு உண்டு" என்றதும் மக்கள் வியந்தனர். அவர்களையும் அறியாமல் கைகளைத் தட்டினர். அப்படிப்பட்ட ராஜாஜியை விட இவர்கள் மதியூகிகளா? என்று கேள்வி எழுப்பி, அப்படி இல்லை என்பதை சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ - அறிவுபூர்வமான வரலாற்றைச் சொல்லி இந்தியாவில் ஏற்படுத்த முயலும் ஹிந்தித் திணிப்பு எவ்வளவு மோசமானது என்று புரிய வைத்ததோடு, அறிவுக்கும், இவர்களுக்கும் தொடர்பில்லை என்பதை சொல்லாமல் புரியவைத்தார்.

மேலும் அவர், ’நீட்’ எதிர்ப்பு, ‘புதியதேசியக் கல்விக்கொள்கை’ எதிர்ப்பு, ’மாநில உரிமை மீட்பு’ ஏன், எதற்கு. எப்படி என்று அரசமைப்புச் சட்டப்படியே விலாவரியாக மக்களுக்கு விளங்க வைத்தார். 

தமிழர் தலைவர், அனைவரும் பேசி முடித்தபின்,  தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.கவுதமன் மீனவர் நலத்துறையில் அரசு பொறுப்பு பெற்றுள்ளதை நினைவூட்டி, ஆடையணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

நாகை பரப்புரை - நிகழ்ச்சி விவரம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் நாகப்பட்டினம் அவுரித்திடலில் மாவட்ட தலைவர்  வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது (9.4.2022). மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஷ் குப்தா அனைவரையும் வரவேற்று பேசினார். 

மண்டல தலைவர் கி.முருகையன், மண்டல செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி, நகர செயலாளர் தெ.செந்தில் குமார், மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மாநில ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் பாவா.ஜெயக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், மாவட்ட இணை செயலாளர் இராமலிங்கம், மாநில மாணவர் கழக துணை செயலாளர் நாத்திக.பொன்முடி,  மண்டல மகளிர் கழக செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் உரை யாற்றினார். அதனை தொடர்ந்து  கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் நாகை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, ம.தி.மு.க.நாகை ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை, நகர தி.மு.க. செயலாளர் போலீஸ் பன்னீர்செல்வம், வி.சி.க. மாவட்ட செயலாளர் கதிர் நிலவன், காங்கிரசு கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, ம.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நிசார், கீழையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூர் தி.மு.கழக செயலாளர் ஜார்லி, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஜார்மிலா, நாகை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

திருவாரூரில் தமிழர் தலைவர் உரை

திருவாரூர் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர், கரோனா தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்று  வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, “பத்து மாதத்தில் பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை செய்துள்ள நல்ல ஆட்சி இருக்கிறது. அதை தடுக்கும் விதமாக டில்லியிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று எடுத்த எடுப்பிலேயே ஒன்றிய அரசையும், ஆளுநரையும் விமர்சித்தார். மேலும் அவர், "இதையெல்லாம் உங்களிடம் சொல்வதற்குக் காரணம் இறுதியில் நீதி வழங்க வேண்டியது மக்களாகிய நீங்கள்தான்” என்று மக்களை நீதிபதிகளாக்கினார்.

முடிவெடுத்தால் பெண்கள் மாற மாட்டார்கள்

"30 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி, வழக்கத்திற்கு மாறாக, 'போராட்டத்தில் பெண்கள் அதிகமாக கலந்துகொள்ளுங்கள்' என்று சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்றேன். ஆனால், நாங்கள் எதிர்பார்க்கவில்லை; காவல் துறையில் எதிர்பார்க்கவில்லை; எம்.ஜி.ஆர் அரசு திகைத்தது. 600 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனை வரும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். சிலர் காலமாகி இருக்கின்றனர். காவல்துறை அதிகாரி என்னுடன் ஒன்றாகப் படித்தவர். எங்களை அணுகி, 'இத்தனை பேரை கைது செய்யக்கூடிய அளவுக்கு எங்களிடம் வாகனங்கள் இல்லை. ஆகவே பெண்களை மட்டும் வீட்டுக்குச் செல்லச் சொல்லுங்கள்' என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால், பெண்கள் மறுத்துவிட்டனர்.” என்று திருவாரூரில் நடந்த அந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, “ஆண்கள் சில நேரம் முடிவெடுப்பதில் தடுமாறுவார்கள். ஆனால் பெண்கள் முடிவெடுத்துவிட்டால் மாறமாட்டார்கள்” என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே எதிரில் அமர்ந்திருந்த மகளிரைப் பார்த்துச் சொன்னார். பிறகு சமூக நீதிக் காவலர் வி.பி.சிங். அவர்கள் வந்து தான் நமக்கு நடுவர் மன்றம் அமைத்துக் கொடுத்தார் என்று அந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

ஆங்கில மொழியாலல்லவா?

தொடர்ந்து அமித்ஷாவின் இந்தித் திணிப்புப் பற்றி பேச வந்தவர், “ஆங்கிலம்தான் உலக அறிவின் சாளரம். ஹிந்தியில் என்ன இருக்கு?” என்று கேள்வி கேட்டு, ”துளசிதாஸ் இராமாயணத்தைத் தவிர” என்று பதிலளித்தார். தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் ’ஹிந்தி படிச்சா வேலை கிடைக்கும்’ என்ற ஆதாரமில்லாத பொய்க்கு, ”ஹிந்தி படிச்சவன் தான் இங்கே வேலைக்கு வந்துகொண்டிருக்கிறான்” என்று ஒரு நடைமுறை உண்மையைச் சொல்லி, தமிழ்நாட்டில் அறிவு வளர்ந்து விட்டதையும், அதுதான் 'திராவிட மாடல்' என்று நாமல்ல, ஆய்வாளர்கள் சொல்கின்றனர் என்று முரசறைந்தார். தொடர்ந்து, “இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவல்லவா?” என்று மக்களைப் பார்த்து பேசினாலும் கேள்வியை அமித்ஷாவுக்கு வைத்தார்!

மேலும் அவர், நீதிக்கட்சியைப் பற்றி சொல்லும்போது, வந்து, சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் திருவாரூரின் இன்னுமொரு சிறப்பு என்பதைக் குறிப்பிட்டார். அதேபோல், கூட்டம் நடக்கும் சாலையின் பெயரே பனகல் சாலைதான் என்பதைக் குறிப்பிட்டு, பழைய வரலாற்றை எடுத்துரைத்தார். மாநில உரிமைகளில் தலையிடும் போக்கைக் கண்டிக்கும் விதமாக, “எல்லாம் ஒரே, ஒரே என்று பேசுகிற ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தில் ’ஒரே’ என்று எங்கே இருக்கிறது? காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விட்டார்.  ’ஆளுநர் செய்வது அதிகப்பிரசங்கித்தனம் என்றும், தமிழ்நாட்டில் மோதல் அரசியலை செய்ய முயல்கிறார் என்றும், குற்றம் சாட்டினார். தொடர்ந்து இது திராவிட மாடல். இங்கே அவர்களின் சூழ்ச்சி பலிக்காது என்று சொல்லிவிட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. அமித்ஷாவுக்கு கொடுத்த பதிலடியை எடுத்துரைத்தும், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் திராவிட மாடலை சுட்டிக்காட்டி பேசியதையும் நினைவூட்டினார்.

திருவாரூரில் நிகழ்ச்சியை முடித்து, மேடையிலேயே பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

தஞ்சையைப் போலவே, திருவாரூர், நாகப்பட்டினம் கூட்டங்களிலும் சாலை வளைவுகள் மற்றும் சாலையின் இருபுறமும், கூட்டம் நடக்கும் பகுதிகளிலும் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் பரப்புரை - நிகழ்ச்சி விவரம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் திருவாரூர்  பனகல் சாலையில் மாவட்ட தலைவர் வீ. மோகன் தலைமையில் நடைபெற்றது (9.4.2022). மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார். 

மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் க.வீரையன், மண்டல தலைவர் கி.முருகையன், மண்டல செயலாளர் கிருட்டிணமூர்த்தி, மாநில ப.க.ஆசிரியரணி தலைவர் இரா.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி,  மண்டல மாணவர் கழக செயலாளர் அ.ஜெ.உமாநாத், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வி.சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் பி.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் சு.பொன்முடி, நகர துணைத் தலைவர் மனோகரன், மாவட்ட ப.க. தலைவர் அரங்க.ஈவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.  

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற் றினார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், ம.தி.மு.க.கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் சீனிவாசன், மக்கள் அதிகாரம்  ஒருங் கிணைப்பாளர் சண்முகசுந்தரம், இ.யூ.முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் மொகைதீன் அதுமை, ம.ம.க.மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், ம.ஜ.க. மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், த.வா.கட்சி மாவட்ட செயலாளர் சீனி.செல்வம், நகர செயலாளர் ஆறுமுகம்  உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் கோ. இராமலிங்கம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment