தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பக்தர்கள் 11 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பக்தர்கள் 11 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர், ஏப். 27- தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கோவில் தேரோட்டம் நேற்று (26.4.2022) நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டு செல்லப் பட்டது. 

தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு படு காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவர்.  இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர் கூறியதாவது:

"தேரை இழுத்தவர்கள் தேரை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது. இதனால், மீண்டும் தேரை பின்னால் இழுத்து திருப்ப முடியாமல் சாலை தான் அகலமாக உள்ளதே என்று சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்துத் திருப்ப முயற்சித்துள்ளனர். அப்படி வளைத்துத் தேரை இழுக்கும்போது கும்பம் சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. தேரின் உச்சியில் மடக்கி தூக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த அமைப்பை தெருக்களில் வரும் போது மின்கம்பிகள் இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தி யுள்ளனர். ஆனால், சாலையில் தேரை திருப்பும்போது தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்த வில்லை. இதை தேரை இழுத்தவர்கள், ஜெனரேட்டரை இயக்கி வந்த நபரும் கவனிக்கவில்லை. அதனால், தேரின் உச்சி பகுதி மேலே சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பி மீது உரசி தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. தேரின் பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வைத்திருந்த வாகனம் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது’ என்றார்.

இந்த தேர் விபத்தில் உயிரிழந்தோர் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மோகன் (வயது 22), பிரதாப் (வயது 36), ராகவன் (வயது 24), அன்பழகன் (வயது 60), நாகராஜன் (வயது 60), செல்வம் (வயது 56), சாமிநாதன் (வயது 56), கோவிந்தராஜ், சந்தோஷ் (வயது 15), ராஜ்குமார் (வயது 14), பரணிதரன் (வயது 13) 

தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தாததால் தேரை திருப்பும்போது சாலையின் மேல் சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி தேரின் உச்சியை உரசியுள்ளது. இதனால், உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் தேர் மற்றும் ஜெனரேட்டரைக் கொண்டு வந்த வாகனம்மீது பாய்ந்தது. இதனால், தேரை பிடித்திருந்தவர்கள், ஜென ரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர் உள்ளிட்டோர் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கப்பட்டதனால் இத் தகைய உயிரிழப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment