திகில் மாளிகை (சிறுகதை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

திகில் மாளிகை (சிறுகதை)

செந்துறை மதியழகன்

    காற்றுவீசிய திசையில் கரைந்து கொண்டிருந்தது சிற்றூர் மக்களின் கூச்சலும் குழப்பமும், 

சேதுராமன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஜமீன் மாளிகையில்தான் அது நடந்தது,ஜமீன்தார் அதை ரகசியமாகத்தான் கனகசபையிடம் தெரிவித்தார், 

    “ஜமீன்தார் அய்யா.. இந்த பங்களாவில் ஏதோ அமானுசிய சக்தியிருக்கு, அதுதான் உங்களை  ஆட்டிப் படைக்குதுன்னு நினைக்கிறேன், அந்த கெட்ட சக்தியை விரட்ட, மலையாள மாந்திரிகம் தெரிஞ்ச சாமியார் அம்மா ஒன்னு இருக்கு.., பேரு அருக்காணி, நீங்க சம்மதம் சொன்னீங்கன்னா... அந்தம்மாவை கூட்டிவந்து, பரிகாரம் செய்திடலாம்,”  கனகசபை போட்டப் பீடிகையில் ஜமீன்தாருக்கு ஆட்டம்கண்டது, 

    “காலம் காலமா வாழும்  மாளிகையில் .., கெட்ட ஆவியா..? நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன் அட... கடவுளே! மனைவி, பிள்ளைகளுக்கு  ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்ய..!”  மனம் தளர்ந்தார் ஜமீன் சேதுராமன்,

    “அதனாலதான் சொல்றேன், என்ன, ஒரு அம்பது... அறுவதாயிரம் செலவாகும், அத்தோட பிடிச்ச பீடை ஒழியும் பாருங்க..,”  கனகசபையின் பார்வை ஜமீன் கஜானாவை நோக்கியே இருந்தது,

 அந்த பெண் சாமியாரை உடனடியாக அழைத்துவர உத்தரவு போட்டார் ஜமீன்தார்,அப்படித்தான் அது நடந்தது,

    கூட்டல் குறியாகக் கிடந்த நான்கு சாலை சந்திப்பில், நான்கைய்ந்து பெட்டிக்கடைகளும், இரண்டு தேநீர் கடைகளும் இருந்தன, போக்குவரத்து அதிகம் இல்லாத சாலை, ஊருக்காகவே வாக்கப்பட்டது போல,, ஒரே ஒரு பேருந்து நாளொன்றுக்கு மூன்று முறை போக வர இருந்தது, 

    ஓட்டையும், உடைச்சலுமாக இருந்த சிமெண்ட் ஓடுகளை போர்த்தியிருந்தது அந்தக் கோபால் தேநீர்விடுதி, 

    வராக்கடனுக்கு தேநீர் கொடுத்து நோட்டு போட்டுக் கணக்கு எழுதி, ஒவ்வொரு விஜயதசமிக்கும் நோட்டை புதுப்பிக்கும் அப்பாவி மனிதர் கோபால்,

    அங்குதான் கூடினர் இளைஞர்கள், சாய்ந்து உக்காருவதற்கு பெஞ்ச் வசதியில்லை என்று, அருகாமை வேப்பமரத்தின் ஆதரவில் அமர்ந்த முதியவர்கள் சிலர் தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்,

    “ தக..தக..ன்னு  தகடு, கள்ளிச்செடியில் கிறுக்கியது மாதிரி, ஏதோ எழுதியிருக்கு! நம்ம ஊர்ல யாராலும் அதை படிக்கமுடியலையே..!”  குழப்பத்தில் தலையை சொறிந்தான் பழனி,

    “ அவ்ளோ... பெரிய மாளிகை நடுவால.. எப்புடி வந்துச்சு தகடு..? என்னாலையும் நம்ப முடியலடா சாமி!”  கிடந்து புலம்பினான் மாரி,

    “மாரி.. அந்தச் சாமியாரம்மா தகட்டை எடுத்தப்போ,  நம்ம ஊரு புள்ளைங்க நாலுபேரு கூடவே இருந்திருக்காங்க,, அதில ஒருத்தரப் பார்த்து  சந்தேகத்தை  கேட்டா என்ன?,”  ஆலோசனை  சொன்னான் பழனி,

     “அதானே..! நம்ம கவிதா புள்ளையும் அந்த நால்வர் குழுல  ஒருத்திதானே.? அதை போய் கேப்போமா?” என்றான் மாரி,

    “ம்...ம்...கவிதா புள்ளைய பார்க்க, மாரிக்கு வழிக் கிடைச்சாச்சிடோய்.., காதலிக்கிறவனுக்கு மட்டும் எப்படித்தான் பட்டு, பட்டுன்னு அய்டியா வருதோ..” சொல்லிச்  சிரித்தான் தோழனில் ஒருவன்,

    கவிதாவுக்கும், மாரிக்கும் வார்த்தைகளால்  பரிமாற்றம் அடையாத காதல் கனிந்து வருவதை, ஊரில் சில இளசுகள் மோப்பம் பிடித்திருந்தனர்,

    பிரம்மை பிடித்தவளாக, வீட்டு வாசலிலேயே உகார்ந்திருந்தாள் கவிதா, பதின்ம வயதை கடந்தும் இன்னும் பாவாடை சட்டைதான்,

    அரைகுறை ஆடையோடு, அங்கம் முழுவதும் தங்க அணிகலன்கள் பூட்டி, ஆடிக்கொண்டிருந்த அஜந்தா ஓவியத்தை, ‘ஆடியது போதும், கொஞ்சம் பாவாடைச் சட்டையோடு இப்படி பக்கத்தில் உக்காரு,’ என்று, யாரோ இட்டக் கட்டளைக்கு கட்டுப்பட்டவளாக அமர்ந்திருந்தாள், 

கவிதா வீட்டிற்கு வந்த இளவட்ட பயல்களில் பழனிதான் கேட்டான்,

“ஏன் கவிதா,. அந்த அருக்காணி எப்படித்தான் தகட்டை எடுத்தாள்..?” 

    “ அண்ணே... ஜமீன்தார் குடும்பத்தோட, ஊருல பாதி சனம், மாளிகைக்கு வெளியேதான் நின்னுது, பன்னெண்டு  மணி இருக்கும், லைட்ட அமிச்சி, கதவை அடைச்சிட்டு, நாங்க நாலு பேரும்  அந்தம்மாவை சுற்றி நின்னோம், ஒரே இருட்டு, ஒரு லட்சுமி விளக்கு மாத்திரம் மினுக்கு மினுக்குன்னு எரிய, அந்தம்மா...

    ‘ஏ..முத்துமாரி.. முண்டக்கண்ணி.. முத்தாலம்மா.. வாடி ஜக்கம்மா...’ன்னு, சத்தம்போட்டு விபூதிய அள்ளி வீசியதும். எங்களுக்கு கண்ண.. மின்ன தெரியல..  கண்ண தொடச்சிப் பார்த்தா..! அந்தம்மா கடப்பாரையை பிடிச்சு தோண்ட ஆரம்பிச்சுட்டுது! 

ஒரு அரையடி குழிதான் இருக்கும், பல, பல’ன்னு தகடு! அதப் பார்த்ததும் நான் மயங்கி விழுந்திட்டேன், கூடவே ராசாத்தியும் மயங்கிட்டா,.. 

    கண்ணம்மா அக்கா, தண்ணி தெளிச்சி எழுப்பவும்தான் எழுந்தோம், “ஏய்...ம்...ம்...” ன்னு அந்தம்மா  ஆடியதை பார்த்து, எனக்கு எடுத்த நடுக்கம் விடல,...

    கன்னிகழியாத வயசு புள்ளைகதான் வேணுமுன்னு, ஜமீன்தார் கூட்டியாரச் சொன்னதா கனகசபை சொன்னதும், சரி.. நம்ம ஜமீன் மாளிகைதானேன்னு, நம்பிப்போனதுக்கு நடுக்கம் கண்டதுதான் மிச்சம், “  என்றக் கவிதாவின் உடல் நடுக்கம் குறைந்தபாடில்லை,

    “என்னடா... மாரி. அப்படி ஒரு சக்தி அந்தம்மாவுக்கு நடுக்கூடத்தில், அதுவும் அரையடி  ஆழத்துல..?” வியந்துச் சொன்னான் பழனி,

கவிதாவின் செவ்விதழ்கள் பாடிய பாசுரத்தை பயபக்தியோடு கேட்டுக்கொண்டு நின்றான் மாரி,

சிநேகிதியை காணவந்த ராசாத்தி, எல்லோரும் வீட்டு வாசலில் கூடியிருப்பது கண்டு,

“ஊர்லதான் கும்பல் கும்பலா சனம் கூடி பேசுதுன்னா.. இங்கேயுமாடா பழனி? என்று பகடிசெய்தாள்,

“இங்கபாரு வத்தச்சி, வாடா.. போடான்ன பாத்துக்க... அங்க இருட்டுல மயங்கி விழுந்திட்டு இங்க வந்து சவடால் பேசுறியா..?” 

கூட்டாளிகள் முன்பாக ராசாத்தி அப்படி பேசியது பழனிக்கு  கவுரவக் குறைவாகப் பட்டது,, 

“ஏ.. விடுடா... உங்க சண்டையா இப்ப முக்கியம்.” என்று அதட்டினான் மாரி இருவரையும்,

“மாரி, அந்தம்மாவ சாதாரணமா நினைக்காத, பெரிய, பெரிய அரசியல்வாதிங்க, நடிகருங்க எல்லாம், அதோட பரிகார பூசையாலதான் இன்னைக்கு பெரிய ஆளுங்களா இருக்காங்களாம், ஜமீன் மாளிகையில... கனகசபை சொன்னாரு, நீ’ எகத்தாளம் பேசாத.. அப்புறம் கைய, கால, கட்டிடப் போவுது பாத்துக்க..” எச்சரித்துச் சிரித்தாள் ராசாத்தி,

“டேய்... என்னால பொறுக்கமுடியல.. தலையே வெடிச்சிடும் போல இருக்கு, அந்த அருக்காணி நம்ம கனகசபை வீட்டுலதான் இருக்காளாம். நேரா போய் அவளையே புடிச்சி, அப்படி உங்கிட்ட என்னதான் சக்தியின்னு கேட்டுடுவோமா?” என்றான் பழனி,

“போங்கடா...  இந்த சின்ன வயசிலேயே சாவ நேர்ல பாக்க ஆசைப்படுறீங்க,,, போங்க..”  என்று,  ராசாத்தி மேலும் அச்சமூட்டினாள்,

“எங்கிட்டு போனாலும் ஒரு துப்பும் கிடைகலையே..” சலிப்புற்றான் மாரி,

மதிய உணவுக்கு கலைந்துச் சென்றவர்கள், சூரியன் தலைசாய்ந்த நேரத்தில், ஆலமரத்தடி நிழற்குடையில்  கூடினார்கள்,

அவர்கள் எதிர்பார்க்கவில்லை, போலீஸ் வாகனம் வந்து நின்றது, வாகனத்தில் ஆறு காக்கிகள் வந்திருந்தனர், அதில் ஒருவர்  இறங்கி வந்து,

“தம்பிகளா.. உங்களை அய்யா கூப்பிடுறார்,” என்றார்,

ஏன்னு புரியாமல், கேட்கவும் முடியாமல் பயத்தில் கைகளை  கட்டிக்கொண்டு நடந்தார்கள், பழனி தலைப்பா துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டான்,

“நான் ‘அமினாபாத்’ ஸ்டேசனுக்கு புதுசா வந்திருக்கும்  ஆய்வாளர், இராவணன், இந்த கனகசபை வீடு எங்கே இருக்கு..?”  என்று, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, அவர் தன்மையாக கேட்டது இளைஞர்களை வெகுவாக ஆச்சரியப்பட வைத்தது,

“அச்சமில்லை மனமே,.. என்று, உள்ளுக்குள் பாட்டுச்சத்தம் கேட்டகவும், துண்டைத்தூக்கி தோளில் போட்டபடி, “அது.. தெக்கால வீதிதான்சார்,” என்றான் பழனி

“அங்க யாராவது புதுசா ஒருப்பெண் வந்திருப்பதை பார்த்தீங்களா..?” 

“ஆமாங்க..,”  

“ வண்டிய கனகசபை வீட்டுக்கு விடுங்க,” என்று, ஆய்வாளர் அவசரம் காட்டியதும் வாகனம் விரைந்தது,

கனகசபை வீட்டின் முன்பாக சென்று வாகனம் நிற்கவும், காவலர்கள் வீட்டுக்குள் புகுந்தார்கள்,

தனிமையில் இருந்த  கனகசபையும், சாமியாடி அம்மாவும் அள்ளிச்சுருட்டிய அரைகுறை ஆடையோடு, பின் வாசல் வழியாக தப்பிக்க முயன்றவர்களை, விரட்டி பிடித்து  வாகனத்தில் ஏற்றினார்கள், காவல்  வாகனம் ஜமீன் மாளிகை பக்கம் சுழன்றதும்,

ஊர் மக்கள் ஓட்டமும், நடையுமாக ஜமீனை நோக்கிச் சென்றனர்,

வாகனத்திலிருந்து ஆய்வாளர் இறங்கி மாளிகைக்குள் செல்ல முற்படுகையில்  ஜமீன் சேதுராமனே வெளியில் வந்தார்,

குழப்பம் அடைந்தவர், “என்னசார்,.. என்னாச்சி..? எங்க ஊருக்குள் போலீசு வந்ததே இல்லையே..!” என்றவரின் கண்கள், காவல் வாகனத்தை ஊடுருவிப் பார்க்கையில் விளங்கிக்கொண்டார், ‘ ஏதோ தவறு நடந்திருக்கிறது,’

மிஸ்டர், ராமநாதன் அந்த ரெண்டு பேரையும் இறக்குங்க.. என்றார், ஆய்வாளர்,

“சேதுராமன் இந்தம்மாவை உங்களுக்கு இதற்கு முன் தெரியுமா?”

“தெரியாதுங்களே... இந்த கனகசபைதான் அழைச்சி வந்தாரு..” என்ற சேதுராமன் கனகசபையை பார்த்தார், கனகசபை உடல் சுருக்கி, விழிபிதுங்கி நின்றார்,

“சரி.. அந்த செப்புத் தகடு எங்கே இருக்கு?”

“அந்தம்மாதான் எடுத்துகிட்டு போனா சார்,” என்றார் சேதுராமன்,

சேதுராமன் உங்களுக்கு இது தெரியுமா என்பது தெரியல... அந்தக்காலத்தில் கேரளாவில் இருக்கும் திருவாங்கூர் அரண்மனைதான் மன்னர்களின் ராஜிய ரகசியங்களை பாதுகாக்குற இடமாவும். ஆலோசனை நடத்துகிற இடமாவும்  இருந்திருக்கு, 

1600 ஆண்டு பக்கமா,  இறவி வா மா குலசேகரப்பெருமாள் என்ற மன்னர், தலைமையில், பூமியில் எங்கேயோ... ஒரு இடத்தில் தங்கம், வைரங்களை புதைச்சியிருக்காங்க, 

அந்த ரகசியங்களை ஒரு செப்புத் தகட்டில் எழுதி, அதை நான்கு  பாகமாக வெட்டி மறைச்சு வெச்சிருக்காங்க,

ஒன்னு கர்னாடக மைசூர் அரண்மனையிலும், இன்னொன்று, ஆந்திரா விசயநகர அரண்மனையிலும், மூணாவது உங்க ஜமீன் மாளிகையிலும்  மறைக்கப்பட்டிருக்கு, நான்காவது இடம்  எங்கேன்னுதான் தெரியல, ஒருவேளை அது கர்னாடகத்தில்கூட  இருக்கலாம், என்று சந்தேகிக்கிறோம்,”

காவல் ஆய்வாளர் சொல்லச் சொல்ல, ஜமீன் குடும்பம் மட்டுமல்ல, மாரியும், பழனியும் ஏன், மொத்த சனமும் விக்கித்து வாய் பிளந்து நின்றது,

“ஒவ்வொரு தகடும் எந்த இடத்தில்,  புதைக்கப்பட்டதோ அந்த  இடத்தைச் சுற்றியுள்ள அடையாளம், எங்கிருந்து காலடியை கணக்கிட வேண்டும், என்பது வரை தெளிவாக அந்தக்காலத்தில் குறித்து வைத்திருக்கிறார்கள்,

அம்மாவாசை நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு, ஒரு சிமிழ்விளக்கை ஏற்றினால் அதன் நிழல்விழும் இடம் எதுவோ, அதுதான் தகடு புதைக்கப்பட்ட இடம் என்று, 

இதற்கு முன் ஆந்திராவில் கிடைத்த தகட்டில் உங்க மாளிகையில் தகடு உள்ள விபரங்கள் பொறிக்கப் பட்டிருக்கு, 

இந்த ரகசியங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர், சிறையில் எங்க பாதுகாப்பில்தான் இருக்காரு, 

இந்த ரகசியங்கள்  யார் மூலமாகவோ கசிந்து , தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க இந்தம்மாவை வெச்சு ஒரு கூட்டமே செயல்படுது,” என்று, ஆய்வாளர் மர்மங்களை விளக்கிடவும் சேதுராமனுக்கு வியர்த்துக் கொட்டியது,

“அய்யா.. சாமி.. இது எதுவும் எனக்கு தெரியாது,, ஜமீன்தார் வீட்டுமாடுக்கு வருடக் கணக்கா கருதங்கலன்னு என் காதில் சொன்னாரு,  இதைவச்சு பரிகாரம் அது, இதுன்னா ஆயிரம், ரெண்டாயிரம் கிடைக்குமேன்னுதான் இந்தம்மாவை கூட்டியாந்தேன், இதில வேறெந்த பாத்தியமும் எனக்கில்ல சாமி... என்னை விட்டுடுங்க நான் புள்ள குட்டிகாரன்,” என்று, சேதுராமன் காலில் விழுந்து கதறினார் கனகசபை,

கனகசபை மனைவி, தலையில் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து புரண்டாள்,

“சார்.. இவனை விட்டுடுங்க.. சாமிபேர் சொல்லி நாடகமாடின அவளை இழுத்துப்போங்க,” 

“சரிங்க..சேதுராமன் விசாரணைக்கு அழைக்கும்போது இந்த ஆளை நீங்களே கூட்டி வரவேண்டியது இருக்கும்,” என்ற, காவல் அதிகாரி இராவணன் வாகனத்தில் துள்ளி அமரவும், வாகனம் சிற்றூரை கடந்தது.


No comments:

Post a Comment