ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: ஆளுநர் உரையின்றி பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும்  என்று  தெலங்கானா முதலமைச்சர் தெரிவித்துள்ளாரே  - அரசமைப்புச் சட்டம் ஏற்குமா? அப்படி ஏற்றால் தமிழ்நாடு அரசும் பின்பற்றலாமல்லவா?

 -கார்த்திகேயன், ஜெயங்கொண்டம்

பதில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசமைப்புச் சட்ட ரீதியாகவே - தனக்கு மக்கள் அளித்த ஆட்சியை நடத்திச் செல்லும் பண்பாளர். அவர் உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறாத நெறியாளர். 

அரசமைப்புச் சட்டரீதியாகவே சிந்திப்பதால் எதையும் ஆத்திரப்படாமல், அவசரப்படாமல் நின்று வென்று காட்டும் அணுகுமுறை அவர்தம் அணுகுமுறை.


 கேள்வி:  சென்னை புத்தகக் காட்சி பற்றி பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்மறை விமர்சனம் வைக்கிறார்களே- காரணம் என்ன?

 - முருகேசன், ஆவடி

பதில்: தந்தை பெரியார் தான் இப்போது இளைஞர்கள், மகளிரிடையே, “புவி ஈர்ப்பு” சக்தியாகவே திகழ்கிறார்; எனவே அவரது நூல்கள் உலகளாவிய நிலையில் பரவுகிறது. - பயனாளிகள் அவற்றையே வாங்கி அறிவாயுதங்களாகப் பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். கடை மற்றும் ஆன்மீக சரக்குகள் அந்தக் கண்காட்சியில் விற்பனையாகவில்லை; அதற்காகத்தான் இந்த பூணூல் ‘காந்தாரிகள்’, தங்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஸ்டாலின் புத்தகத்திற்கு ஒரு ஸ்டாலா? என்று குமுறுவது அவாளின் புழுக்கத்தின் உச்சம். சங்கையில்லாத சங்கிகளின் நிலை பரிதாபம். வாழ்க, வளர்க, வயிற்றெரிச்சல்காரர்கள்!


கேள்வி: ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் கருநாடகத்தில் ஒலிக்கத் தொடங்குகிறதே, இனியாவது ‘நீட்’ விவகாரத்தில் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டுடன் கரம் கோர்க்குமா? 

- வ.சிற்றரசு, உல்லியக்குடி

பதில்: சிறுதுளி பெருவெள்ளமாகும்; எப்போதும் தமிழ்நாடுதான் சமூகநீதியில் பிறருக்கு வழிகாட்டும். இதிலும் அதுதான் நடைபெறுகிறது.


கேள்வி: அறிவியல் கல்வி வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும் சாமியார்கள் செழிப்பாகவும், செல்வாக்காகவும் உள்ளனரே...? ஊடகங்களும் விளம்பர வெளிச்சம் அளிக்கின்றார்களே ...?

 -வி.அகிலன்,  அயப்பாக்கம், சென்னை 77

பதில்: அறிவியல், மின்னணுவியல் - வித்தைகள் அவர்கள் வியாபாரம். ஈஷாவின் மாந்திரீக உருத்திராட்சம் வாங்கும் மடையர்கள், கண்மூடி நம்பிக்கை விளம்பரத்தாலேதான் செழிக்க முடியும்?


கேள்வி: பொதுக் கூட்டங்களுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் “நீட்” எதிர்ப்புக்கான  மக்கள் ஆதரவு கூட்டங்களை தொடங்கலாம் அல்லவா?

- ஆரோக்கிய சேவியர்,  செங்கோட்டை

பதில்: விரைவில் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு கூடி, தமிழ்நாடு தழுவிய தொடர் பிரச்சாரங்கள், எனது  பங்களிப்போடு தொடங்க ஆயத்தமாகி வருகிறோம்,  ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து!’


கேள்வி: இந்திய மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது,”  சிங்கப்பூர் நாடாளுமன்ற உரையின் போது அந்நாட்டு பிரதமர், திரு.லீ. சென் லூங் அவர்கள் பேசியிருப்பதை  எப்படிப் பார்க்கிறீர்கள்..?

 -செந்துறை மதியழகன், சிங்கப்பூர்

பதில்: நமது நாட்டு அமைப்பு ஒன்று வெளியிட்ட புள்ளி விவரங்களைத்தான் சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ.சென் லூங் குறிப்பிட்டார். அவர்மீது ஆத்திரப்படாமல் நமது ஒன்றிய அரசு “நோய் நாடி நோய் முதல் நாடி” நிலைமையை மாற்றிட புது வழி கண்டுபிடிப்பது இன்றையத் தேவை!  “யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு” - அல்லவா?


கேள்வி:நாடுகளுக்கு இடையில் போர் உருவாக பெரும்பாலும் அடிப்படையாக இருக்கும்  காரணம் என்ன?

  - ஜானகி,  ஆண்டிமடம்

பதில்: போர் ஆயுத வியாபாரிகளின் லாபியின் தனித்த பெருத்த செல்வாக்கே அடிப்படைக் காரணம்.


கேள்வி:காஷ்மீர் மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து வந்த ஆதரவை நினைவு கூர்ந்து உமர் அப்துல்லா பேசியது மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட அரசியலுக்கான அங்கீகாரம் அல்லவா?

  -செ. பகுத்தறிவு, கோபி

பதில்: நிச்சயமாக அதிலென்ன சந்தேகம்! அவரது நன்றி உணர்ச்சிக்குப் பாராட்டுகள்.


கேள்வி: ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பேற்று 59 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நீங்கள் எழுதிய முக்கிய தலையங்கங்கள், அவற்றின் பின்னணி குறித்து ஒரு தொடர் எழுதினால் என்ன?

- சு.அறிவன்,  வீராக்கன்

பதில்: நல்ல யோசனை - நேரத்தைத் தேடுவேனாக!


கேள்வி: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பணி நியமனத்திற்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அநீதி அல்லவா?

  - இர.சரஸ்வதி,  பெருங்களத்தூர்

பதில்: உங்கள் கேள்வி நியாயமானதே!

 

No comments:

Post a Comment