ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னை, மார்ச் 28- ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) (28.3.2022) தொடங்கியது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

2 நாள் வேலைநிறுத்தம்

குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

சி.அய்.டி.யு., அய்.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.அய்.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

20 கோடி தொழிலாளர்கள்

இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த தாக்கீது வழங்கியுள்ளன.

நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, அஞ்சல், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 30ஆம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில், இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும், போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இன்று பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளும் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதாக வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

பொது வேலை நிறுத்தத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment