இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (10) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (10)

 இவர்தான் அன்னை .வெ.ரா. மணியம்மையார்! (10)

அன்னையார் அவர்கள் அய்யாவைவிட சிக்கனத்தில் மிகுந்தவர் - அவருடைய பயணப் பை ஒன்று இருக்கும். அதில் ஒரே ஒரு புடவை மற்றும் உடைகள்; இவைகள் எப்போதும் தயாராக புறப்படும் வகையில்! தேவையானவை களுக்கு மட்டும்தான் செலவு செய்வார்கள்.

எதையும் வீணாக்கவே மாட்டார்கள். பெரியார் மாளிகையில் அப்போது நாங்கள் அம்மா, புலவர், நான், முதலியவர்கள்தான். எதிர் பாராது வரும், கழகத் தோழர்கள் - சாப்பாட்டு நேரத்திற்கு வந்து விட்டால் அவர்களையும் சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார். இது அய்யா இருக்கும்போது அன்றாடம் நடை பெறுவது - வேறு வேலைக்கு  ஆள் வைத்துக் கொள்வது கிடையாது.

அவர் எதுவும் மிஞ்சாத அளவுக்குத்தான் சமைப்பார்; இது ரொம்ப அதிசயம்; மற்றவர்கள் வந்து விட்டால் அதற்கென்று சில மணித் துளிகளில் கூடுதலாக சமைப்பார்.

அம்மாவின் சமையல் - அது காய்கறி உணவானாலும், இறைச்சி உணவு என்றாலும் அவர்கள் சிறப்பாகவும், சுவையாகவும் சமைப்பார். சமையலில் பெரும் ஆடம்பரப் பரிமாறல்கள் இருக்காது - காரணம் அது அய்யாவுக்கும் பிடிக்காது. அம்மாவுக்கும் ஏற்காத ஒன்று!

1943இல் முதலில் அம்மா ஈரோடு சென்று அய்யா வீட்டில் சமையல் அறையைச் சீர்படுத்தி பொருள் வாங்கி தனியே அய்யாவுக்குச் சமையல் செய்ய ஆரம்பித்த அனுபவம்பற்றி -  அந்தக் காலக் கட்டத்தில் எங்களிடம் (புலவர் - நான்) சொல்லியுள்ளார்.

இவருக்கு, அவரது வீட்டில் சமைத்துப் பழக்கமே இல்லை; எல்லாம் புது அனுபவம் தானாம்.

அன்னை நாகம்மையார் மறைந்தது மே 10 1933. அதன்பிறகு ஏறத்தாழ சுமார் பத்து ஆண்டுகள் அய்யாவுக்கு அவரது அண்ணண் - பெரியவர் .வெ. கிருஷ்ணசாமி - அவரது துணைவியார் சமைத்து இவருக்கு அனுப்புவது தான் ஈரோட்டில் தங்கியிருக்கும்போது அய்யா வுக்கு உணவு. சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டு ஈரோடு திரும்புகையில் ரயில் இரவு நேரத்திலோ, விடியும் முன்போ வந்தால் பசி  அய்யா வயிற்றைக் கிள்ளியபோதும், அந்த நேரத்தில் பெரிய அம்மா வீட்டிற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதியவர் (இது அய்யாவின் சிறப்பான தனிக் குணம் - வியக்கத்தக்க பண்பு, யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதை ஒரு வாழ்க்கை நியதியாக அய்யா கடைப்பிடித்தவர்; சுற்றுப் பயணத்தில் வந்த எங்களைப் போன்ற உதவியாளர்களை சில நேரங்கள் அழைக்கும்போது, அம்மா அனுபவம் காரணமாக 'தூங்குகிறார்' என்று சொல்ல மாட்டார். மற்றவர்கள் அவர் தூங்குகிறார் என்றால் உடனே, "வேண்டாம், எழுப்ப வேண்டாம். பிறகு நான் அதைக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்றே சொல்லும்" பெருங் குணம் அய்யாவின் மனிதத் தன்மையின் மகத்தான வெளிச்சம் ஆகும்!) திண்ணையிலேயே 2 டம்ளர்   தண்ணீரை வயிறு நிரம்பக் குடித்து விட்டு தூங்கி விடுவாராம்.

அதுவே அவருக்கு வயிற்றுப் புண் (அல்சர்) பின்பு வந்து அவதிப்படுத்தி கார உணவுகளைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத் தியது எனலாம்.

அம்மா வேளைக்கு உணவு மருந்து தந்து தான் பல ஆண்டுகாலம் உரிய உணவைச் சமைத்து - அவரது ஆயுள் நீண்டிடக் காரண மானவர்.

அம்மாவுக்கு சமையல் அங்கே புது அனுபவம். இவர் எப்படியோ சமாளித்து சமைத்துப் பரிமாறிடும்போது அய்யா, ரொம்ப நல்லா இருக்கும்மா? என்று சொல்லி 'பாராட்டுப் பத்திரம் வாசிக்க'த் தவற மாட்டாராம்!

அம்மா பிறகு சாப்பிடும்போது, உப்பு ரொம்ப குறைவாக இருக்கிறது. காரம் சற்று தூக்கலாக இருக்கிறது என்று புரிந்து - தன்னை ஊக்கப் படுத்த  அய்யா அதை சொல்லாமல் - உற்சாகப்படுத்தி - ஒரு நல்ல 'நளபாகி'யாக அம்மாவை உருவாக்கி விட்டார் அய்யா,

ஒரு சம்பவம் பெரியார் மாளிகையில் தங்கியிருந்த சில நாட்களில் எனக்கு நினைவில் நிற்கிறது.

புலவரும் நானும் கடை வீதிக்கு (திருச்சியில்) செல்வோம் - அவர் காய்கள், மற்றவை அம்மாவிடம் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கி வந்து கொடுப்பார்.

என்னிடம் ஒரு முறை காப்பித் தூளை கடையில் அரைக் கிலோவாக வாங்கி வரச் சொன்னார். வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். சில நாட்கள் கழித்து அம்மா (நிறைய வருகை யாளர்கள் வந்ததால் காப்பி அதிகம் போட்டுக் கொடுத்து உபசரிப்பால் தீர்ந்து விட்டிருக்கக் கூடும்) என்னிடம் காப்பித் தூள் வாங்கி வா என்று மீண்டும் சொல்லி பணம் கொடுத்தார்.

நான் உடனே "என்னம்மா

2, 3 நாள் முன்பு தானம்மா வாங்கி வந்தேன் அதுக்குள்ளாகவா அவ்வளவும் தீர்ந்து விட்டது" என்று கேட்டு விட்டேன்!

உடனே அம்மா என்னைப் பார்த்து 'டேய் என்னை உங்கய்யாகூட,  என்ன இப்படி குடும்ப சமையல் கணக்குக் கேள்வி கேட்டதில்லை. நீ கேக்கிறீயே' என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு, "நான்தான் சிக்கனக்காரி, அய்யாதான் சிக்கனக்காரர் என்று சொல்லப்பட்டோம், பரவாயில்லை எங்களைவிட சிக்கன கணக்குப் பிள்ளையா இப்போது இங்கே நீ வந்து விட்டாயா" என்று உரிமையுடன் அன்புடன் கேட்டார்; நான், "அப்படி எல்லாம் இல்லைம்மா - உங்கள் தாராளம் பலருக்கு எவ்வளவு என்று புரியாமல் கேட்டு விட்டேன் - மன்னியுங்கள்" என்றேன்.

இல்லேப்பா, "மகிழ்ச்சியாக உள்ளது - உன் சிக்கன குணத்தை மெச்சத்தான் அதை சொன் னேன் - மற்றபடி வேறு ஒன்றுமில்"லேன்னார்!

உடனே புலவர் வந்து அதுதான் சரியான நேரம் என்று கருதி, 'அம்மா, இவரு எழுதுற பென்சிலை கடைசி முனைவரை கூட தூக்கிப் போடாமால் எழுதுவாரும்மா, நாங்களெல்லாம் இவரை எவ்வளவு கேலி பண்ணாலும் மாற மாட்டாரம்மா - கல்வி கற்கும் போதே சிக்கனக் காரர் இவர், எங்களுடன் படிக்கும்போதே' என்றார்!

இப்படி எத்தனையோ பல பல நீங்காத நினைவுகள்! தேவையைக் குறைக்காது தருவது அய்யா - அம்மா கணக்கில் சிக்கனம் என்பதற்கு விளக்கம் - விடையாகும்!

No comments:

Post a Comment