ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 19, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

 கேள்வி:  நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பப்படும் என்று தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சரிடம் கூறியிருக்கிறாரே, அதுகுறித்து தங்கள் கருத்து?

- ச.சஞ்சய், பெரம்பூர்

பதில்:  “சுவத்துக் கீரையை வழிச்சி போடடி” என்று நடுநிசியில் உச்சக்கட்டப் பசியில் கேட்ட பரிதாபத்திற்குரிய வீம்பு கணவர் கதையை கிராமங்களில் சொல்வார்கள். அது நினைவுக்கு வருகிறது. 

அரசமைப்புச் சட்டப்படி வேறு வழியில்லையே ஆளுநருக்கு  என்றதும் இப்படிக் கூறுகிறார். ஒரு மாதத்திற்கு மேல் “ஊறுகாய் ஜாடி”யில் ஊற வைத்தது ஏன்? இந்நிலை தேவையா என்பதே நமது கேள்வி.

 கேள்வி :  “பெரியார் உலக மயமாகிறார், உலகம் பெரியார் மயமாகிறது” என்று நீங்கள் சொல்லி வருகிறீர்கள், ஆனால், இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசத்திலே மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறதே?

- பா. ஓவியன், அரும்பாக்கம் 

பதில்: “பெரியார் உலக மயமாகிறார்,  உலகம் பெரியார் மயமாகிறது” என்பதை அருள் கூர்ந்து சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் தோழரே! தத்துவ ரீதியாக பெரியாரை உலகம் ஒரு பெரும் வழிகாட்டியாக தத்துவ ஆசானாகக் கொள்ளும் நிலை வடக்கேயும் பரவிக் கொண்டுள்ளது என்பது தான் உறுதி!

அரசியல் தேர்தல் வெற்றிகளை-தோல்விகளை இதனுடன் இணைக்காதீர்கள். தேர்தல் வெற்றி - தோல்வி ‘வித்தை’களைப் பொறுத்தது!

 கேள்வி :  தன்னம்பிக்கைக்கும், கடவுள் நம்பிக்கை என்று நம்பப்படுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

- பா.திவ்யபாரதி, பழனி

பதில்: தன்னம்பிக்கை அச்சத்தைப் போக்கும் பொறுப்புணர்ச்சியை அதிகப்படுத்தி கடுமையாக உழைக்க உந்தித்தள்ளும். ஆனால் கடவுள் நம்பிக்கை அச்சத்தையும், பொறுப்பின்மையையும் உருவாக்கி “எல்லாம் அவன் செயல்” என்றால் இவரின் பங்கு ஏது? முந்தையது உண்மை; பிந்தையது கற்பனை - பொய். முந்தையது பகுத்தறிவு; பிந்தையது மூடநம்பிக்கை.

 கேள்வி: ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப்படுவதற்காக தமிழ்நாட்டில் விளக்கு பூஜை செய்தால் போர் நின்றுவிடுமா?

- ம.மணி, செங்கல்பட்டு

பதில்: அட அறிவு (உலக்கை) கொழுந்துகளா? வெட்கமே இல்லையா? இவ்வாறு செய்யச் சொல்வது ஓர் ஆர்.எஸ்.எஸ். வித்தை - மூடநம்பிக்கை பரப்பும் சூழ்ச்சிவலை - புரிந்து கொள்ளுங்கள்!

 கேள்வி : தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படுகிறதே, இது சாத்தியமா?

- கவுசிக், திருக்கழுக்குன்றம்

பதில்: “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்ற பழமொழியை எப்படி மறந்தீர்கள்?

மூன்று வேளாண் சட்டங்களை மோடி பின் வாங்கினாரே?- பகிரங்க மன்னிப்பு கேட்டாரே? மறந்து விட்டீரா? மக்கள் மன்றத்திற்கு முன் எதுவும் -  மக்களாட்சியில் சாத்தியமே!

 கேள்வி : தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.கவைச் சேர்ந்த மேனாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுகிறதே, இது பழிவாங்கும் நடவடிக்கையா?

- எல்.பாலா, கோவை

பதில்: தொல் பொருள் துறையில் தோண்டி எடுப்பது போல, தொலைந்தவைகளையும், திருட்டுப் போனவைகளையும் கண்டறிந்து கொள்ளைக்காரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதி வழங்க தேவையானவற்றைத் தேடுவது பொது வாழ்க்கையின் துப்புரவுப் பணியின் மற்றொரு அம்சமே இது!

 கேள்வி: தொடர் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளீர்களே, உங்கள் உடல் நலம் பாதிக்கப்படாதா?

- எம் . கீதா, திருச்சி

பதில்: நாட்டு மக்கள் நலனா? எனது உடல் நிலையா என்பதில் முன்னதுதானே முக்கியம். அய்யாவின் தொண்டன் - அம்மாவின் தொடர்பணியாளன்  வேறு என்ன செய்வான் - இதைத் தவிர; அவர்கள் உடல் நிலையையா பார்த்தார்கள் தோழரே!

 கேள்வி : மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களை தொடர்ந்து திராவிடர் கழகம் செய்து வந்தாலும், தமிழ்நாட்டில் கோவில் திருவிழாக்கள் பெருகி வருகிறதே?

- தாஸ், பூவிருந்தவல்லி

பதில்: மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் மருத்துவர்கள் எண்ணிக்கையும், புதுமருந்துகளும், புதிய மருத்துவமனைகள் பெருக்கமும் இருந்தும், புதுப்புதுப் நோய்களின் வீச்சு பெருகுகிறதே - அது போலவே நோய்க் கிருமிகள் வேகமாக பரவும்; சிகிச்சை மெல்லதான் பயனளிக்கும் - இல்லையா? 

 கேள்வி: அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் வளர்ச்சியைக் காட்டுகிறதா?

- பா.முகிலன், வேலூர்

பதில்: பா.ஜ.க. வித்தைகள் எத்தகையன என்பதெல்லாம் - பேஸ்புக்கில் விளம்பர வித்தைகள் உள்பட பலப்பல வெளிச்சத்துக்கு வருகின்றன. இவையெல்லாம் வளர்ச்சியா? தந்திர வித்தைகள் வெற்றியா? 

 கேள்வி : தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி போல, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

- பா.கண்மணி, பெங்களூரு

பதில்: காலத்தின்கட்டாயம் - தன்முனைப்பைத் தள்ளி வைத்து, இலட்சியங்களுக்கு முன்னுரிமை தந்து  எதிர்க்கட்சிகள் வாக்குச் சிதறிடாமல் மய்யப்படுத்தினால் நிச்சயம் சாத்தியமே.

நாளைய அரசியல் பற்றி இன்றே முடிவு கட்ட முடியாது! அரசியலில் நேர் கூட்டுத் தொகை என்பது ஏதும் இல்லை!  

No comments:

Post a Comment