பகத்சிங் நினைவுநாள் - மார்ச் 23 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 19, 2022

பகத்சிங் நினைவுநாள் - மார்ச் 23

மாவீரர் பகத்சிங்கை போற்றுவோம்  - புலவர் பா.வீரமணி

இந்திய விடுதலை வரலாற்றிலும், சமுதாயப் போராளி வரலாற்றிலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத வீரராகப் பொன் எழுத்தில் பதிந்தவர் பகத்சிங். சைமன் கமிஷனை எதிர்த்த அறப்போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜிபதிராய் 3.10.1928 அன்று ஈடுபட்ட போது காவல்துறை அதிகாரிகளாகிய சாண்டர்ஸ், ஸ்காட் ஆகியோரால் தடிகளால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். அதனால் அவரது உடல் பெரிதும் பாதிக்கப்பட்டு அடுத்த இருவாரங்களில் 17.11.1928 அன்று காலமானார். அவரது அகால மரணத்தை அறிந்து இந்திய மக்கள் பெரிதும் அதிர்ந்தனர். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் பகத்சிங் தோழர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தியச் சமதமர்ம குடியரசு படை (HSRA) யின் சார்பாக, சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, ஜெயகோபால் ஆகியோருடன் பகத்சிங் சாண்டர்சைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டு 17.12.1928அன்று சாண்டர்சைச் சுட்டுவிட்டுத் தப்பி விட்டனர். அந்நாளிலிருந்து பகத்சிங்கும் தோழர்களும் தலைமறைவு வாழ்வை நடத்தினர். நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்சியின் முடிவுப்படி 8.4.1929 அன்று நாடாளுமன்றத்தில் குண்டு வீச பகத்சிங்கும், பி.கே.தத்தும் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களும் குண்டு வீசி  - காவல்துறையின ரால் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு சதி வழக்காக லாகூரில் நடந்தது. பின்னர் இரண்டு  ஆண்டுகளுக்கு அடுத்து 7.10.1930 அன்று நீதிமன்றத்தால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு ஆயுள்தண்டனையும், மற்ற சிலருக்கு ஏழு ஆண்டு சிறையும் வேறு சிலருக்கு மூன்றாண்டுச் சிறையும் விதிக்கப்பட்டன.

பகத்சிங் முதலான மூவருக்கும் 17.10.1930 அன்று தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால், வேறுபல காரணங்களால் அத்தண்டனைகள்அந்நாளில் நிறைவேற்றப்படவில்லை. காலம் சற்றுக் கடந்து கொண்டே போனது. ஆனால் இறுதியில் 23.3.1931 அன்று இரவு 7.30 மணிக்கு அவ்வீரர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். இக்கோரச் சம்பவம் இந்திய நாட்டிற்கும், விடுதலை வீரர்களுக்கும் பேரதிர்ச்சியை, பெரும் புயலை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுக் குறித்து, மேனாள் தலைமை அமைச்சர் நேரு “இந்திய விடுதலைப் போராட்டத்தில் அதுநாள் வரை இல்லாத ஒரு பேரலையை மக்களிடம் கொண்டு சென்றது பகத்சிங்கின் மரண தண்டனையேயாகும்.” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார். இது நம் கவனத்திற்கு உரியது.

பகத்சிங்கின் மரண தண்டனையை நிறுத்தவோ, வேறு தண்டனையை விதிக்கவோ காந்தியடிகள் அப்போதைய அந்நிய ஆட்சியினரிடம் கோரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. அதுபற்றி இதுவரை கிடைக்கும் ஆய்வுக்குறிப்புகள் அதனையே உறுதி செய்கின்றன. அக்குற்றச்சாட்டுகள் அந்நாளில் எழுந்த போது, பல நேரங்களில் அவர் மவுனமாகவே இருந்து விட்டார். நேருவுக்கு இதில் உடன்பாடு இல்லையெனினும், அந்நாளில் அவரும் காந்தியடிகளோடு ஒத்துப் போய் விட்டார் என்றே கூறலாம். இப்போக்கால், காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரும்பாலோர் பகத்சிங்கின் வீரத்தை, கொள்கை உறுதியை, தியாகத்தை வெளியே கூறுவதை மறந்திருந்தனர். சிலர் உள்ளுக்குள் மதித்துப் போற்றினாலும் அதனை வெளியே கூற அஞ்சினர். சிலர், பகத்சிங்கின் போராட்டத்தைக் கிண்டலடித்தும் உள்ளனர். அவர்களுள் பெரும் எழுத்தாளர்களும் அடக்கம். இதுதான் வரலாற்று அவலம். இங்கு ஒன்றை எடுத்துக்காட்டிற்காக நோக்கலாம். தமிழ்நாட்டில் பெரிய எழுத்தாளராக அறியப்பட்ட கல்கி. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் எழுதியுள்ளதை காணலாம்.

“இரண்டு இளைஞர்கள் திடீரென்று எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்து விட்டு, கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழு  மூடச் சிகாமணிகள் என்னும் பட்டத்தை விகடன் அளிக்க விரும்புகிறான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக் கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியினாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம். (ஆனந்த விகடன் - 1929- மே இதழ்)

இரு வீரர்களின் அஞ்சாமையை, வீரத்தை, ஈகத்தைப் பாராட்ட அவருக்கு எண்ணமில்லை. வெங்காய வெடி என்றும், ஓட்டைத் துப்பாக்கி என்றும் நையாண்டி செய்கிறார். ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதன் நாடாளுமன்றத்தில் ,உயிரை துச்சமாக எண்ணி, நாட்டைப் பெரிதெனக் கொண்டு குண்டு எறிந்ததைக் கல்கி கொச்சைப்படுத்துகிறார். அவமதிக்கிறார். சத்தியாக்கிரகத்தை வழிபடும் காந்திய சிகாமணி சத்தியாக்கிரகத்தை பீரங்கியாகப் பிம்பப்படுத்துகிறார். பாவம், பீரங்கியை அடையாளப்படுத்தாமல் சத்தியாக்கிரகியால் முடியவில்லை. மேலும் அந்த அஞ்சாநெஞ்சர்களை கொள்கை குரிசில்களை அவர், முழு “மூடச்சிகாமணிகள்” என்று முடி சூட்டுகிறார்.   

இப்படித்தான் அக்காலத்தில் பெரும்பாலோர் இருந்து உள்ளனர். இப்படிப்பட்ட காலத்தின், சூழலில்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தமிழகத்தில் முதன்முதலில் பகத்சிங்கை போற்றி குடிஅரசில் 29..3.1931 அன்று தலையங்கம் தீட்டியுள்ளார். அந்தத் தலையங்கம் சிந்தனை மிக்கது. அடர்த்தி கொண்டது.பல்வேறு செய்திகளை உள்ளடக்கியது. இங்கு சுருக்கமாகக் சிலவற்றை மட்டும் நோக்குவோம்.

“இப்போது நாம் அவரை ஓர் உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாம் அறிந்தவரை பகத்சிங்குக்கு சமதர்மமும், பொது உடைமையும் தான் அவரது கொள்கை என்று கருதி இருக்கிறோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது பொதுவுடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும் வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டே தான் இருக்கும். எங்களை கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது. அது பகிரங்கமாகவும், ரகசியமாகவும் நடந்துதான் தீரும் என்று குடிஅரசு 29.3.1931இல் குறிப்பிட்டிருக்கிறார்.

பகத்சிங்கை உண்மையான மனிதர் என்று பாராட்டி விட்டு அவரது உயிர்ப்பான கொள்கையை உள்ளபடி உணர்ந்து அதனை நமக்கு அவர் உணர்த்துகிறார். பெரும்பாலோர் பகத்சிங்கை விடுதலை வீரராக மட்டும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவரது உண்மையான கொள்கையை எடுத்துக்காட்டி அவரது ஆளுமையை பலப்படுத்துகிறார். பகத்சிங் தம் கொள்கையை 

அஞ்சா நெஞ்சத்தோடு கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் எழுதியதையும் தந்தை பெரியார் வெளிப்படுத்துகிறார். பகத்சிங் தன்னோடு தம் கொள்கை முடிந்து விடாது என்றும் அது தனக்கு பின்னரும் காலகாலமாக தொடரும் என்றும் தெளிவுபடுத்துகிறார். இந்தக் கொள்கை குன்றைத்தான் கல்கி “மூடச் சிகாமணி” என்கிறார். யார் மூடச் சிகாமணி என்பதை வரலாறு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் பகத்சிங்கை உயர்ந்த மனிதர் என்று போற்றுகிறார். தந்தை பெரியார் எங்கே? கல்கி எங்கே? 

மேலும் தந்தை பெரியார் எழுதியிருப்பது மிக முக்கியமானது. அதனையும் சிறிது நோக்குவோம்.

“தீண்டாமை ஒழிவதாய் இருந்தால், எப்படி மேல்ஜாதி கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தான் ஆக வேண்டுமோ, அதுபோலவேதான். ஏழ்மைத் தன்மை ஒழிவதாக இருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத்தன்மை ஓழிந்து தான் ஆக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதால் சமதர்மத் தன்மை, பொதுவுடைமைத் தன்மை என்பவையே அல்லாமல் வேறு இல்லை. இந்தக் கொள்கைகள் தான் பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள்.

இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கு உண்மையான சமத்துவமும் சாந்தியும் அளிக்கத்தக்க பாதையை காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறுயாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!

(குடிஅரசு தலையங்கம் 29.3.1931) 

தந்தை பெரியாரின் இக்கூற்றை நோக்கினால், பகத்சிங்கின் நோக்கை எத்துணை ஆழமாக அவர் நோக்கியுள்ளார் என்பதை நன்கு உணரலாம். சமுதாய ஏற்றத் தாழ்வையும் பொருளாதார ஏற்றத் தாழ்வையும் ஒழிக்க விரும்பிய கொள்கையாளர் தான் பகத்சிங் என்பதை உணர்த்துகிறார். தகவல் தொடர்புகளும் - பகத்சிங் பற்றி போதிய செய்திகளும் கிடைக்காத அக்காலத்தில் தந்தை பெரியார் எவ்வளவு செய்திகளை அறிந்து அவற்றை ஆழ்ந்தகன்று நோக்கியுள்ளார் என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும். இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே பாதை அமைத்தவர் பகத்சிங் என்கிறார். காரணம் பகத்சிங் உலகம் தழுவிய கொள்கையை ஏற்றதேயாகும் தந்தை பெரியார் பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம் பாராட்டுகின்றோம் பாராட்டுகின்றோம்! என்று அடுத்தடுத்து அடுக்கு பாராட்டுவதன் மூலம் பகத்சிங்கின் பெருமையை உணருவதோடு தந்தை பெரியாரின் பெருமையையும் உணருகிறோம். “கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்பதற்கேற்ப நல்லாரை நல்லாரே போற்றுவர் என்பதை உணருகிறோம்.

பகத்சிங்கின் தூக்குக் கயிற்றின் மரணம் தமிழகத்தை பெருமளவு உலுக்கியதற்கு   பெருங் காரணமும் மூலமும் தந்தை பெரியாரின் குடிஅரசு கட்டுரையாகும். நாடெங்கும் பொதுமக்களால் பகத்சிங் பேசப்பட்டார். அவரைப் பற்றி பற்பல நூல்கள் அடுத்தடுத்து வெளிவந்துள்ளன. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய “பகத்சிங்கும் இந்திய விடுதலையும்“ எனும் நூலில் அவர் ஒரு படி மேலேயே தந்துள்ளார். அவற்றைக் கீழே காணலாம்.

1) பகத்சிங் கொலை சித்து - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

2) பகத்சிங்கின் தேசியகீதம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை - 10.9.1982 

3) பாரத மாதாவின் மூன்று புதல்வர்கள் - பாடல் நூல் கே.டி.ஆர். வேணுகோபால்தாஸ் - 11.1.1932

4) பகத்சிங் பாட்டு - நடராஜ பிள்ளை - 1.4.1932

5) சர்தார் பகத்சிங் சரித்திரம் - பாடல்கள் - எம்.என்.முத்துக்குமாரசாமிப் பாவலர் - 5.4.1932

6) சர்தார் பகத்சிங் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை - 19.2.1932

7) தேசாபிமான திலகம் அல்லது பகதூர்சிங் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை - 12.9.1932

8) லாகூர் பகத்சிங் தூக்குத் தண்டனை - 13.9.1932

9) நவ ஜவான் பாரத் கீர்த்தனாமிர்தம் - 8.11.1932

10) பகத்சிங் கீர்த்தனாமிர்தம் - பாகம் 1 - நடராஜ பிள்ளை இசைப் பாடல்கள் 2.11.1931

11) பகத்சிங் தூக்கு அலங்காரம் - மன்னார்குடி கே.சுந்தர் ராஜி செட்டியார் - செய்யுள் - 17.12.1932

12) Bhagat Singh - or the Roar on the Scaffold - டி.எஸ்.கனகசபை

13) Heroie Martyr Sardar Baghat Sing - M.S.சுப்பிரமணிய அய்யர் - 2.2.1932

மேலும் சில ஆங்கில நூல்கள் வெளி வந்திருப்பதாகவும் அவை கிடைக்கவில்லை என்றும் அந்நூலில் பேராசிரியர் சுப.வீ. குறிப்பிட்டுள்ளார். இப்பட்டியலை பார்த்தால் சில மாதங்களில், சில ஆண்டுகளில் அடுத்தடுத்து நூல்கள் வெளிவந்திருப்பது அக்காலத்தில் பகத்சிங் பற்றிய புரிதலும் பரபரப்பும் எப்படி எல்லாம் இருந்துள்ளன என்பவற்றை காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் உந்துசக்தியாக இருந்தது தந்தை பெரியாரின் குடிஅரசு கட்டுரையாகும். அவர் சுயமரியாதைக்கும், பகுத்தறிவுக்கும், ஜாதி ஒழிப்புக்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும் மட்டும் முன்னோடி அல்லர். பகத்சிங்கின் தனிப்பெருமையை முதலில் அடையாளம் காட்டிய முன்னோடியும் அவர்தான். அப்படி முன்னோடியாக அவர் இருந்ததால்தான் பகத்சிங்கின் தோழரும் இந்திய சமதர்ம குடியரசு படையின் முக்கிய உறுப்பினருமான ஜிதிந்தரதாஸ் நினைவாகத் திருவல்லிக்கேணியில் ஒரு வாசக சாலையைத் தோழர்கள் அமைத்தபோது அதனைத் திறந்து வைத்து சிறப்புரையாற்ற தந்தை பெரியாரை அழைத்துள்ளார்கள். அதனைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையும் புதுமையானது, சிந்தனை மிக்கது.

இங்கு மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பகத்சிங்கின் தூக்கு அவருக்கு மட்டுமன்றி அவருடைய சகத்தோழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. அக்காலத்தில் சென்னைத் தோழர்கள் ஜதிந்திரதாஸ் நினைவாக வாசகசாலை அமைத்ததையும் அதனைத் திறக்க தந்தை பெரியாரை அழைத்ததையும் சாதாரணமாக கருதிவிட முடியாது. அது சென்னைக்கு பெருமை சேர்ப்பதாகும். இதில் என்ன வியப்பு என்றால் காங்கிரஸ் தலைவர்களும் தேசிய சிகாமணிகளும் பகத்சிங்கை பற்றியோ அவருடைய தோழர்களைப் பற்றியோ வாய் மூடி மவுனியாக இருந்ததுதான். அப்படி இருப்பதுதான் அவர்களின் மனிதம் போலும் பகுத்தறிவாளனே உண்மையான மனிதாபிமானி  ஆவான் என்பதேயே இந்நிகழ்வுகள் எல்லாம் காட்டுகின்றன.

தந்தை பெரியாரின் பேச்சை நோக்குவோம். அதில் ஒரு சிறு பகுதியை நோக்கினாலேயே அவரது சிந்தனையின் ஆழத்தை உணரலாம். பேச்சைக் கீழே காணலாம்

“நண்பர்களே! ஜதீந்திரதாஸ் பெயரால் இன்று வாசகசாலை திறக்கப்படுவதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதன், மேலும் நாம் அவருக்கு பெருமையும் மரியாதையும் செய்கிறோம் என்று கருதினால் அப்பாராட்டிற்கு அர்த்தமே இல்லை. அல்லது இவ்வாசக சாலையில் அவரது படத்தை திறந்து வைத்து, அதற்கு தேங்காய், பழம் உடைத்து, கற்பூரம் கொளுத்தி வைத்து கும்பிடுவது என்றால் அது மிகவும் மூடத்தனம் என்றுதான் சொல்லுவேன். ஆனால் மற்றென்ன செய்வது அறிவுடைமையானது என்று கேட்பீர்களானால் அவர் விட்டுப்போன வேலையை செய்வதும், அவரது தியாகத்தையும், கொள்கையையும் பின்பற்ற அடிக்கடி ஞாபகப்படுத்த அவரது பெயரை உபயோகிப்பதும் தான்” - (குடிஅரசு 1.12.1929)

படத்தை திறந்து வைத்து பெருமை பேசுவதும், அதனை பறைசாற்றுவதும் முக்கியமல்ல என்றும், அவர் விட்டுப்போன வேலையைச் செய்வதும், அதன் வழி மற்றவரை வழிநடத்துவதுமே சிறந்த தாகும் என்கிறார். இங்கும் அவர் ஒரு பகுத்தறிவாளராக வழிபாட்டை மறுத்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வதும், வழிகாட்டுவதுமே  சிறந்ததாகும் என்கிறார். மற்றும் வாசக சாலையின் படிப்பு, பெரும் பண்டிதத் தனமாக இல்லாமல் கற்பனையில் மிதக்காமல், உலக அனுபவம் தருவதாக இருக்க வேண்டும் என்கிறார். வாசக சாலையின் படிப்பு, ஒருவருக்கு செய்திகளை, தரவுகளை அளித்தாலும், ஒருவருக்கு உலக அனுபவம் மிக இன்றியமையாதது என்கிறார். அனுபவமே மிகச் சிறந்தது என்கிறார். இதுகுறித்து அவர் கூறுவதை நோக்குவோம்.

“பண்டித பரீட்சையில் தேறுவதும், மகா மகா உபாத்தியாயராகி விடுவதும், அரசாங்கத்தில் டாக்டர் அதாவது பண்டிதர் பட்டம் பெறுவதும், ராஜாக்களிடத்தில் வித்துவான்களாக இருப்பதும் உண்மையான கல்வியாகிவிடாது. ஏனெனில் செருப்புத் தைத்தல், சவரம் செய்தல், சலவை செய்தல், சித்திரம் எழுதுதல், வியாதிக்கு மருந்து கண்டுபிடித்தல், கவி பாடுதல், கதை எழுதுதல், ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லுதல், உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழ் ஆளுதல் முதலியவை எல்லாம் வித்தைகளாகுமே தவிர வேறில்லை. “ஏனெனில் உலக அனுபவம் தான் உண்மையான கல்வியாகும்“  (குடிஅரசு - 1.12.1929)

வெறும் ஏட்டுக் கல்வியை அவர் எவ்வாறு மறுத்துள்ளார், வெறுத்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. நம் முன்னோர்களும் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்று அழகாகவே உணர்த்திச் சென்றனர். ஆனால் தாம் பின்பற்றவில்லை. அதனால் தான் தந்தை பெரியார் அதனை அழுத்தமாக வலியுறுத்துகிறார்.

“எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணி கிழிச்சீங்க”

என்று பட்டுக்கோட்டையும் ஏட்டுக் கல்வியை நகையாடியிருப்பது எண்ணத்தக்கது. அதனால் தான் அவர் மற்றோரிடத்தில்,

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு

நான் பயணம் போறேண்டா!

நான் பயணம் போறேண்டா!

வெளியே படிக்க வேண்டியது

நிறைய இருக்குது - நான்

படிச்சிட்டு வாரேண்டா!

என்று மிகச் சரியாய் பாடினார். அனுபவத்தைப் பெறுவதை தான் அவர் வெளியே படிக்க வேண்டியது நிறைய இருக்குது என்றார். “அனுபவம்தான் செயலுக்கு வழிகாட்டி” என்றார் லெனின். அந்த அரிய அனுபவத்தின் சிறப்பைத்தான் தந்தை பெரியார் வாசகசாலையை திறக்கும்போது வாசகர்கள் வெறும் புத்தகப் புழுக்களாக இல்லாமல் உலக நடைமுறை அனுபவத்தைப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறார். இதனை வள்ளுவரும் “உலகத்தோடு ஒட்ட ஒழுகலாதார் பலகற்றும் கல்லார், அறிவிலாதார்”. என்று குறிப்பிட்டு இருப்பதையும் நமக்கு அவர் எடுத்துக்காட்டுகிறார். பகத்சிங் படிப்பாளியாக இருந்துகொண்டு இளம் வயதிலேயே அதாவது 21 வயதிலேயே இந்திய சமதர்ம குடியரசு படையை நிறுவியதற்குக் காரணம் அவர் பெற்ற அனுபவமே ஆகும். அந்த அனுபவம் அவரை மாவீரராக, கொள்கைக் குன்றாக வளர்த்தது எனலாம். அனுபவமே முழுமுதற் கல்வியாகும். அதனால் தான் தந்தை பெரியார், பகத்சிங்கையும் அவர்கள் தோழரான ஜதிந்திரதாசையும் நினைக்கும் போது அனுபவத்தை நமக்கு அறிவுறுத்துகிறார். அனுபவமே சிறந்த கல்வி - அதுதான் செயலுக்கு வழிகாட்டி. பகத்சிங் வாழ்வும், தந்தை பெரியாரின் கட்டுரையும் அதைத்தான் நமக்கு அறிவுறுத்துகின்றன. “பகத்சிங்கை பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம்“! என்றார் தந்தை பெரியார். பகத்சிங்கின் நினைவு நாளில் பகத்சிங்கை முதன்முதலில் தமிழகத்தில் நினைவுப்படுத்திய தந்தை பெரியாரை நாமும் பாராட்டுவோம்.

No comments:

Post a Comment