நந்தன் பாரதி - யாழினி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

நந்தன் பாரதி - யாழினி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

மூடநம்பிக்கை தன்னம்பிக்கைக்கு எதிரானது சாதாரண கிராமத்தில் பிறந்த செய்யாறு ரவி அவர்களை

உலகத்தார் பாராட்டி, புகழக்கூடிய-ஆற்றல்மிகு இயக்குநராக்கியது தன்னம்பிக்கைதான்!

சென்னை, மார்ச் 29   மூடநம்பிக்கைகள் தன்னம்பிக் கைக்கு எதிரானது; தன்னம்பிக்கை இருந்தால், நாம் வளர்ச்சி அடையலாம். அந்தத் தன்னம்பிக்கைதான் சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்த செய்யாறு ரவியை, உலகத்தார் பாராட்டி, புகழக்கூடிய ஆற்றல்மிகு ஒரு இயக்குநராக்கியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நினைவில் வாழும் இயக்குநர் செய்யாறு ரவி இல்ல மணவிழா

கடந்த 27.3.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில்   நினைவில் வாழும் இயக்குநர் செய்யாறு ரவி அவர்களின் இல்ல மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மணமக்கள் நந்தன் பாரதி - யாழினி

அன்புச் செல்வர்கள் செய்யாறு ரவி - ஜெயந்தி ஆகியோருடைய செல்வன் நந்தன்பாரதி அவர் களுக்கும், மதுரை தோழர் இளங்கோவன் - கவிதா ஆகியோருடைய செல்வி யாழினி அவர்களுக்கும் நடைபெற்ற இந்த சிறப்பான இல்வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விரிவாகவும், விளக்கமாகவும் வாழ்த்துரை வழங்கிய திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில விவசாய அணியின் துணை அமைப்பாளரும், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினருமான அன்பிற்குரிய சகோதரர் செய்யாறு .அன்பழகன் அவர்களே,

செய்யாறு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டுதலுக்கும், வாழ்த்துதலுக்கும் உரிய மானமிகு .ஜோதி பி.., அவர்களே,

இங்கே உரையாற்றி விடைபெற்றுச் சென்ற ..மு..வின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், செய்யாறு ரவி அவர்களின் பக்கத்து வீட்டுக்காரருமான அருமைச் சகோதரி சி.ஆர்.சரசுவதி அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து வாழ்த்துரை வழங்கிய திரைப்பட இயக்குநரும், செய் யாறு ரவி அவர்களுடைய வழிகாட்டியுமான அன்பிற் குரிய சகோதரர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் அவர்களே,

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொறுப்பாளரும், தமிழ்நாட்டின் சீரிய சமூகநீதிப் போராளியுமான அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய பிரின்ஸ் பு..கஜேந்திரபாபு அவர்களே,

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் மானமிகு தோழர் திருமதி பார்வதி சீனிவாசன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து, உரை யாற்றிய தோழர் நக்கீரன் அவர்களே,

செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தோழர் .இளங்கோவன் அவர்களே, வெம்பாக்கம் ஒன்றிய செயலாளர் எம்.தினகரன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் இணைப்புரை வழங்கிக் கொண் டிருக்கக் கூடிய கவிமொழி அவர்களே,

பெருமைக்குரிய நம்முடைய இயக்கத் தோழரும், செயல்வீரர்களில் ஒருவரும், மேனாள் உதவியாளரு மான அருமைத் தோழர் வெங்கட்ராமன் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய செய் யாறு தோழர் காமராஜ் அவர்களே, தேவகுமார் அவர் களே, மற்றும் நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர் களே, திரைப்படத் துறையிலிருந்து வந்திருக்கக்கூடிய கலைத்துறை நண்பர்களே, மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடிய புதிய தலைமுறை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் மற்றும் தோழர்களே, மணமக்களின் பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான               வணக்கத்தினைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

சென்னையிலும், தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும் ஒரு வழக்கம் உண்டு இப்பொழுதெல்லாம். என்ன வென்றால், மணவிழாவிற்கு நாம் செல்லும்பொழுது, அந்த மணவிழா எவ்வளவு சிறப்பான மணவிழாவாக நடைபெற்றாலும்கூட, அந்த மணவிழாவைப் பொறுத்த வரையில், அந்த மணவிழாவில், மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு, தாலிக் கட்டக் கூடிய நிகழ்ச்சியாக இருந்தால், தாலி கட்டியவுடன், உடனே கலைந்து சென்றுவிடுவார்கள், உடனடியாக, அவசரமாக.

உங்களுக்கு முதலில்

நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

ஆனால், இந்த மணவிழாவிலே அதேபோல ஒரு வேளை இருக்கும் - அதிகமாக பேசவேண்டிய அவசி யமும் இருக்காது; பேச்சாளர்கள்கூட வாழ்த்துரை ஆற்றுவதும் குறைவாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால், எல்லாத் தோழர்களும், பெற்றோர்கள், தாய்மார்கள், அத்துணை பேரும் இங்கேயே இருந்து, வாழ்த்துரையைக் கேட்கவிருக்கிறீர்கள், மணமக்களை வாழ்த்தவிருக்கிறீர்கள் என்பது இந்த மணவிழாவின் தனிச்சிறப்பாக இருக்கிறது என்பதை முதலில் உங் களுக்கு நன்றியோடும், பெருமிதத்தோடும் குறிப்பிடு கிறேன்.

இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், செய்யாறு ரவி அவர்களின் மணவிழாவைப்பற்றி மிக அழகாக இங்கே சொன்னார்கள். அதிலும் குறிப்பாக தோழர் அன்பழகன் அவர்கள் சொன்ன ஒரு செய்தி.

செய்யாறு ரவி- ஜெயந்தி மணவிழா

செய்யாறு ரவி அவர்களுடைய மணவிழா கலைஞர் அவர்களுடைய தலைமையில், சென்னை ராமா திருமண மண்டபத்தில் நடை பெற்றது. அந்தக் காலகட்டத்தில் ஒரு நெருடலான சிக்கல் என்னவென்று சொன்னால், பாரதீய ஜனதாவோடு தி.மு.. கூட்டணி வைத்திருந்தது என்ற காரணத்தினால், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையோடு நாங்கள் சமரசம் அடையவில்லை.

அதன் காரணமாக, பல காலமாக, மாணவப் பருவந் தொட்டு, இன்றும், நாளைக்கும், என்றைக்கும் பிரிக்கப்பட முடியாதவர்களாக இருந்தாலும்,  அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு சூழலில், திராவிடர் கழகம் வெளிப்படையாக அதை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், கலைஞரும், நாங்களும் பல காலம் ஒன்றாக இருந்தவர்கள்; ஆனாலும், அன்றைக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கவேண்டிய சூழல், இயல்பாக, கொள்கை ரீதியாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில்தான், செய்யாறு ரவி - ஜெயந்தி ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது.

ரவி அவர்களுக்கு ஒரு சங்கடமான சூழல். காரணம், கலைஞர் அவர்களிடத்தில் நெருங்கி, அவருடைய செல்லப் பிள்ளை போன்று பழகக்கூடியவர் ரவி.

பெரியார் திடலில் எங்களிடமும் வேற்றுமை இல் லாமல் இருக்கக்கூடியவர்.

கலைஞரும், நானும் மதிக்கக்கூடியவர் ரவி அவர்கள். நாங்கள் இரண்டு பேரும் அவருடைய மணவிழாவிற்கு வரவேண்டும் என்று சொன்னவுடன், கலைஞர் அவர் களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக்கூடாது என்பதற் காக, நானே தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னேன்.

கலைஞர் அவர்கள் மூத்தவர், அவர்தான் உங்க ளுடைய மணவிழாவினை நடத்தவேண்டும். ஆகவே, அவருடைய தலைமையில் உங்களுடைய மணவிழா வினை நடத்திக் கொள்ளுங்கள். அவர் அடுத்த மண விழாவிற்குச் செல்லவேண்டிய அவசியமும் அவருக்கு இருப்பதால், அவர் சென்றுவிடுவார். அவர் சென்றவுடன், நான் வாழ்த்துரை வழங்குகிறேன் என்று சொல்லி, அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டோம்.

நட்பில் சமரசம் உண்டுகொள்கையில் சமரசம் இல்லை

அதேபோன்று, கலைஞர் அவர்கள் மணவிழா வினை நடத்தி வைத்து உரையாற்றிவிட்டு, அடுத்த மணவிழாவிற்குச் சென்றுவிட்டார்.

அவர் உரையாற்றிச் சென்றதும், நான் அந்த மணவிழாவிற்குச் சென்றேன்.

அப்படி ஒரு காலகட்டமும் இருந்தது; இரட் டைக் குழல் துப்பாக்கிதான்; இருந்தாலும், ஒற்றைக் குழலாக ஒலித்த நேரத்தில்கூட - கொள்கை என்று வந்துவிட்டால், தாய்க்கழகம், நட்பைக்கூட பார்க்கமாட்டோம்; நட்பில் சமரசம் உண்டு; கொள்கையில் சமரசம் இல்லை.

அந்த சிக்கலில் ரவி மணவிழா மாட்டிக் கொண்டது. ஆனால், அதையும் சிக்கலில்லாமல், பகுத்தறிவாளர்களால் தீர்வு சொல்ல முடியும் என்ற அளவில் அதற்கும் தீர்வு கண்டோம்.

கலைஞர் அவர்கள், கவனமாகவும், கெட்டிக் காரத்தனமாகவும் இருப்பவர். ‘‘என்னப்பா, ஆசிரியர் வாழ்த்துரை சொல்ல வருகிறாரா? சரி வரட்டும்; நான் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

நான் அவருடைய மணவிழாவில் வாழ்த்துரை ஆற்றிவிட்டுத்தான் வந்தேன்.

நம்பிக்கையானவர், நாணயமானவர்!

அதேபோன்று, நம்முடைய வெங்கட்ராமன் அவர்கள்; அவர் என்னுடைய உதவியாளராக என்னுடன் சுற்றுப்பயணத்தில் வந்தவர். நம்பிக்கை யானவர், நாணயமானவர். இன்றைக்கும் அதே நட்பு - எங்கள் குடும்பத்தினருடன். தமிழ்மொழி, அவருடைய தந்தையார் என்று மிக நெருக்கமாக இருக்கக்கூடிய குடும்பங்கள்.

நாங்கள் என்ன நினைக்கிறோமோ, அதைத்தான் எங்களுடைய துணைத் தலைவர் சொல்வார்; எங்கள் பிரச்சார செயலாளர் சொல்வார்.

யாழினி என்ற பெயரைப் பார்த்தவுடன், நான் அதுகுறித்து சொல்லவேண்டும் என்று நினைத் திருந்தேன். அந்தப் பணியை மிக வேகமாக செய்துள்ளார் நம்முடைய அருள்மொழி அவர்கள்.

தொலைக்காட்சிகளில் குழந்தைகள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்தக் குழந்தைகளிடம் ஆற்றல், திறமை எவ்வளவு இருக்கிறது என்பதை வெளிக் கொணரும் அளவிற்கு, கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

குழந்தைகளும் அற்புதமாக தங்களுடைய ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அதைப் பார்க்கும்பொழுது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

திட்டமிட்ட படையெடுப்பு

நம்முடைய நாட்டில் வருகிறது

ஆனால், அந்தக் குழந்தைகளின் பெயரைக் கேட்டால், அருள்மொழி சொல்லியதுபோன்று, வாயிலேயே நுழையவில்லை; அவர் நன்றாக சொன்னார், ‘உஷ்' என்று இழுத்தார்.

எனக்கு என்ன பயம் என்றால், ..ஷி என்று சொன்னாலும் அது அதிசயமில்லை. அப்படி ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு, திட்டமிட்ட படையெடுப்பு நம்முடைய நாட்டில் வருகிறது.

அப்படி நுழைந்ததுதான்நல்ல நேரம்', ‘ராகுகாலம்' என்பதெல்லாம்.

நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், நேரமும், காலமும் நமக்கு மிகவும் முக்கியம். 24 மணிநேரமும் முக்கியம்தான். அந்த 24 மணிநேரத்தில் எமகண்டம், ராகுகாலம், நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பிரித்து வைத்துள்ளார்கள்.

தூங்குகிற நேரம் நல்ல நேரமா?

நேரத்தில் என்ன நல்ல நேரம், கெட்ட நேரம்? என்பது. 24 மணிநேரமும் நல்ல நேரம்தான் என்று சொல்வேன். 24 மணிநேரமும் நல்ல நேரம் என்று சொல்கிறீர்களே, தூங்குகிற நேரம் நல்ல நேரமா? என்று கேட்பீர்கள்.

ஆம்! அதுவும் நல்ல நேரம்தான். ஏனென்றால், தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. உடல்நிலை சரியில்லை என்று டாக்டரிடம் செல்லும் பொழுது, டாக்டர் என்ன கேட்பார், ‘‘நன்றாகத் தூக்கம் வருகிறதா? சாப்பிட்டதும் செரிமானம் ஆகிறதா?’’ என்றுதான் கேட்பார்.

படுத்தவுடன் ஒருவர் தூங்கிவிட்டார் என்றால், அவர் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார் என்று அர்த்தம். எனக்குத் தூக்கம் வரவில்லை என்று ஒருவர் சொன்னால், அவருக்கு உடல்நிலையில் சங்கடம் உள்ளது என்றுதான் பொருளாகும்.

வசதிக் குறைவாக இருக்கும்பொழுது, படுத்தவுடன் தூங்கிவிடுகிறான்; வசதி அதிகமாக அதிகமாக படுத்த வுடன் தூக்கம் வருவதில்லை. தூக்கத்திற்கு மருந்து கொடுக்கக் கூடிய அளவிற்கு இப்பொழுது இருக்கிறது.

ஆகவே, எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.

‘‘அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்‘’

‘‘அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்'' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைத் தொகுத்திருக்கின்றோம்; இங்கே புத்தக நிலையத்திலும் கிடைக்கும்.

அந்த நூலில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால்,

இங்கே கவிஞர் அவர்கள் சொன்னதுபோன்று, ‘‘இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தாரே, அவருடைய திருமணம் கொழுத்த ராகுகாலத்தில்தான் நடைபெற்றது. அவருடைய வாழ்விணையர் தாலி கட்டிக்கொள்ள வில்லை; பொட்டு வைக்கமாட்டார்கள்’’ என்று சொன்னார்.

ராகு காலத்தில் என்ன கொழுத்த ராகுகாலம்; இளைத்த ராகுகாலம்? ராகுகாலம் கொழுக்குதா? மூட நம்பிக்கை கொழுக்குதா? என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

இன்னொரு கூடுதல் செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும். அப்படி ராகுகாலத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள் எப்படி இருப்பார்களோ? என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.

எங்களுக்குத் திருமணம் முடிந்து 63 ஆண்டுகள் ஆகின்றன. அதுமட்டுமல்ல, எனக்கு நிறைய அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை  நடைபெற்று இருக்கிறது;  இன்னுங்கேட்டால், கரோனா தொற்றுகூட இரண்டு முறை வந்தது.

இவ்வளவையும் தாண்டி இருக்கிறோம்; நல்ல வேளை, நல்ல நாள் பார்த்த நிறைய பேர் காணாமல் போய்விட்டார்கள்; இதை நான் மகிழ்ச்சியோடு சொல்லவில்லை, வருத்தத்தோடுதான் சொல்கிறேன்.

ஆகவேதான், தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே நீங்கள் யாரும் கெட்ட நேரம், ராகுகாலம், எமகண்டம் என்று சொல்லி, நம்முடைய நேரத்தை, நாளை வீணாக்காதீர்கள்.

இழந்த காலத்தை நாம் ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது!

வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு மிக முக்கியம். ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு மிகவும் முக்கியம்.

இழந்த பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்-

இழந்த உடல்நலத்தைக்கூட ஓரளவிற்கு மீட்டுக் கொள்ளலாம். இழந்த காலத்தை நாம் ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது. இன்றைக்கு 2022, மார்ச் மாதம் 27 ஆம் தேதி,  காலை இப்பொழுது 11.30 மணி என்று சொன்னால், இது ஒரே முறைதான் வரும். எத்தனை முறை நீங்கள் கடிகாரத்தை சுற்றி வைத்தாலும் மீண்டும் இந்த நேரம் வராது.

நேரத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு ராகுகாலம் தெரியுமா? இங்கே ஒளி, ஒலிப்படம் எடுக்கிறார்களே இப்பொழுது - ஆனால், முன்பெல்லாம் திருமணம் எப்படி நடைபெறும் என்றால், முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியாக, அக்னி சாட்சியாக என்று சொல்லி நடத்துவார்கள்; இது நீதிமன்றத்திற்குச் சாட்சியாக வராது; ஆனால், வீடியோ சாட்சியாக என்று சொன்னால், நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவிற்கு, அறிவியல் வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் அறிவியல் காலத்தில், கடிகாரத்தைக் கண்டு பிடித்தவன் யார்?

அவன் நாட்டில் ராகுகாலம் உண்டா?

அவன் நாட்டில் எமகண்டம் உண்டா?

இதைத்தான் பெரியார் அவர்களும் கேட்டார்.

ராகுகாலம் என்றால், ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணிநேரம்.

திங்கள் கிழமையா - 7.30 மணியிலிருந்து 9 மணிவரை

ஞாயிற்றுக்கிழமையா - 4.30 மணியிலிருந்து 6 மணி வரை

இந்த ராகு காலத்தை இரவு நேரத்தில் வைத்துத் தொலைத்திருந்தாலும், தூங்குகின்ற நேரம் போயி ருக்கும். ஆனால், பகலில் வைத்து, ஒன்றரை மணி நேரத்தை வீணாக்கிவிட்டார்கள்.

பதவியேற்புக்குச் செல்பவர்கள்கூட நல்ல நேரம் பார்த்துத்தான் பதவியேற்கிறார்கள். கொஞ்சம் சீர் திருத்தம், துணிச்சல் உள்ளவர்கள் அதையெல்லாம் பார்க்கமாட்டார்கள்.

அண்ணா அவர்கள், ராகுகாலத்தில் நாமினேசன் செய்திருக்கிறார். கலைஞரும் அதேபோல, செய்தி ருக்கிறார். வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

நம்முடைய நாடு முன்னேறாததற்குக் காரணம்- இந்த மூடநம்பிக்கைதான்!

ராகுகாலத்திற்கும், அதற்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு நாளில் ஒன்றரை மணிநேரம் என்று சொன்னால், ஒரு மாதத்திற்கு 30 நாள் - 45 மணிநேரம்; ஓராண்டிற்கு, 540 மணிநேரத்தை வீணாக்குகிறோம். நம்முடைய நாடு முன்னேறாததற்குக் காரணம், வளராதத்திற்குக் காரணம் இந்த மூடநம்பிக்கைதான்.

ஓராண்டிற்கு 540 மணிநேரம் வீணாகப் போகிறது.

திரைப்படத் துறையைச் சார்ந்த நண்பர்கள் நிறைய பேர் இங்கே வந்திருக்கிறார்கள்.  அந்தத் துறையில், மூடநம்பிக்கையிலிருந்து வெளியவே வர முடியாத அளவிற்கு ஊறிப் போயிருக்கிறது.

மூடநம்பிக்கை என்பது ஒழிக்கப்படவேண்டும்

ஆனால், நாங்கள் அந்தத் துறையிலும் மாற்றம் செய்தோம் - பெரியார் திரைப்படத்திற்குப் பூஜை செய்யாமல்தான் தொடங்கினோம். 100 நாள்கள் ஓடி, ஒன்றிய அரசின் பரிசு வாங்கிய படம்பெரியார்திரைப்படம்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், மூடநம்பிக்கை என்பது ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான்.

ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டத்தை நீங்கள் அட்லாஸ் மேப்பில் கண்டுபிடிக்கலாம்; ஆனால், எமண்டத்தைக் கண்டுபிடிக்க முடியாது - இதை பஞ்சாங்கத்தில்தான் கண்டுபிடிக்க முடியும்.

எமண்டம் என்ற பெயரில் ஓராண்டிற்கு 540 மணிநேரம் வீணாகிறது.

அதற்குப் பிறகு, அஷ்டமி - நவமி என்கிறார்கள்.

தயவு செய்து தாய்மார்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; நாள்காட்டியில் போட்டிருப்பார்கள்; ராசி பலனில் போட்டிருப்பார்கள்; இந்த ராசியிலிருந்து அந்த ராசிக்குப் போகிறார் ராகு; அந்த ராசியிலிருந்து இந்த ராசிக்குப் போகிறார் கேது என்று சொல்வார்கள்.

மனிதன் செவ்வாய்க் கோளுக்கே சென்று திரும்பிவிட்டான். இவர்கள் என்னடா என்றால், இல்லாத ஒரு கோளை சொல்லிக்கொண்டு, ராகு வீட்டிற்கும், கேது வீட்டிற்கும் சென்றிருக்கிறான் என்று நம்பிக் கொண்டிருக்கின்றானே, ஒன்றை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள் - பக்தர்கள், பெரும்பாலும் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கே நிறையப் பேர் இருக்கிறீர்கள்; இங்கே இருப்பவர்களில் எல்லோரும் எங்கள் கருத்துள்ளவர்கள் இல்லை என்று தெரிந்துதான் நான் சொல்கிறேன்.

சிந்தித்துப் பாருங்கள்!

நான் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம்; யோசனை செய்து பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.

அஷ்டமி - நவமி என்று சொல்கிறார்களே,

ராமன் கடவுள் அவதாரம் - அவன் பிறந்தது நவமியில் என்பதால், ராம நவமி.

கிருஷ்ணன் பிறந்தது கோகுலாஷ்டமி - அதாவது அஷ்டமி - அவனும் கிருஷ்ண அவதாரம் என்று சொல்கிறார்கள்.

பக்தர்கள் சொல்லுகின்ற கடவுள் பிறந்த நேரத்தையே கெட்ட நேரம் என்று சொல்கிறார்கள் என்றால் - நியாயமாக இதை நாங்கள் சொல்லவேண்டும் -

கடவுளை நம்பாதவர்கள் சொல்லவேண்டும் -

கடவுளைப்பற்றி, புராணங்களில் இருக்கின்ற விஷ யத்தைப்பற்றி சொல்லவேண்டும்.

ஆனால், அவர்கள் பிறந்த நாளை கெட்ட நேரம் என்கிறார்கள்; அஷ்டமி, நவமியில் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.

மரண யோகம், கரிநாள், பிரதமை என்றெல்லாம் சொல்கிறார்கள். கிரகணத்தில் பாம்பு நிலாவைக் கவ்வு கிறது - சூரியனைக் கவ்வுகிறது என்று சொல்கிறார்கள்.

அறிவியலில், கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்தால், கிரகணம் என்று சொல்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே, மூடநம்பிக்கை ஒழிந்தால், என்ன லாபம் என்றால், தன்னம்பிக்கை வரும். அந்தத் தன்னம்பிக்கை வந்தால், துணிச்சலாக எல்லா காரியங்களையும் செய்யலாம்.

ராகுகாலத்தில்தான் ஹால்டிக்கெட் வாங்கினோம்; தேர்வில் வெற்றி பெற்றோம்!

நாங்கள் சட்டக்கல்லூரியில் படிக்கும்பொழுது, பொதுத் தேர்வு வரும். அதற்கு ஹால்டிக்கெட் வாங் கினால்தான், தேர்வு எழுத முடியும்.

மற்றவர்கள் எல்லாம் நேரம், காலம் பார்த்துத்தான் வாங்குவார்கள். நாங்கள் ஒரு 10, 20 பேர் நண்பர்கள் ராகுகாலத்தைத்தான் ஹால்டிக்கெட் வாங்கு வதற்குப் பயன்படுத்துவோம். ஏனென்றால், கூட்டம் இருக்காது; உடனே கையொப்பமிட்டு வாங்கிக் கொள் வோம். அந்த நேரத்தைப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டோம். இதுதான் எங்களுடைய உத்தி.

ராகுகாலத்தில் ஹால்டிக்கெட் வாங்கிய  நாங்கள் தேர்வில் வெற்றி பெற்றோம். அதேநேரத்தில், நல்ல நேரத்தில் ஹால்டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்தடுத்து தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவுக்கும், நம்பிக்கைக்கும்

சம்பந்தமேயில்லை!

ஆகவேதான், அறிவுக்கும், நம்பிக்கைக்கும் சம்பந்தமேயில்லை. தயவு செய்து இந்த மூட நம்பிக்கை என்பது காலங்காலமாக ஊறிப் போய் விட்டது. அதனால்தான், நல்ல நேரம், நல்ல நேரம் என்று நினைக்கிறார்களே தவிர, வேறொன்றும் கிடையாது.

நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது - வழக்கு விசா ரணைக்காக 11.30 மணிக்கு நீதிபதி அழைக்கிறார்.

‘‘இது ராகுகாலம், ஒன்றரை மணிநேரம் தள்ளி வையுங்கள்’’ என்று நீதிபதியிடம் சொன்னால், ஒப்புக்கொள்வாரா?

அவ்வளவு தூரம் போகவேண்டாம்; ஒருவருக்குக் கடன் கொடுத்து நீண்ட காலம் ஆகிறது; அய்ந்து ஆண்டுகளாக அவரைக் காணவில்லை. இப்பொழுது அவரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்; அவரும், ‘‘நான் பணம் கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்; ஆனால், ஒரே ஒரு சங்கடம் என்னவென்றால், இது ராகுகாலம்; ஆகவே, ராகுகாலத்தில் பணம் கொடுக்கவேண்டாம் என்பதற்காக, நான் ராகுகாலம் முடிந்தவுடன் வரு கிறேன்’’ என்று சொன்னால், பணம் கொடுத்தவர் ஒப்புக் கொள்வாரா?

பணம் என்றால், ராகுகாலம் தானாகப் போய்விடுகிறது!

நம்முடைய பணம் - பணம் வாங்கியவனை அய்ந் தாண்டுகளாக ஆளைக் காணவில்லை. நாமும் தேடிக் கொண்டிருந்தோம். இவனை இப்பொழுது விட்டு விட்டால், அவன் ஒருவேளை  போய்விட்டால், எப் பொழுது வருவான் என்று சொல்லி, ‘‘இப்பொழுதெல் லாம் ராகுகாலத்தை யாருங்க பார்க்கிறாங்க? பணத்தைக் கொடுத்துவிட்டுப் போங்க’’ என்று சொல்வார். பணம் என்றால், ராகுகாலம் தானாகப் போய் விடுகிறது.

சரி, திரைப்படம் தொடங்கவிருக்கிறது - ராகுகாலம் ஆரம்பித்துவிட்டது; ராகுகாலம் முடிந்தவுடன் போக லாம் என்று யாராவது நினைக்கிறார்களா? அல்லது ராகுகாலத்தில் புறப்படும் ரயிலில் யாராவது பயணம் செய்யாமல் இருக்கிறார்களா?

குழந்தை பிறக்கப் போகிற நேரம் வந்துவிட்டது என்று டாக்டர் சொன்னால்,

‘‘இல்லீங்க, இப்பொழுது ராகுகாலம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இருக்கட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பிரசவத்தைப் பாருங்கள்’’ என்று சொல்ல முடியுமா?

உலகத்தார் பாராட்டி, புகழக்கூடிய ஆற்றல்மிகு இயக்குநராக்கியது!

மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கைக்கு எதிரா னவை; தன்னம்பிக்கை இருந்தால், நாம் வளர்ச்சி அடையலாம். அந்தத் தன்னம்பிக்கைதான் சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்த செய்யாறு ரவியை, உலகத்தார் பாராட்டி, புகழக்கூடிய- ஆற்றல்மிகு இயக்குநராக்கியது அந்தத் தன்னம் பிக்கை -அந்தப் பகுத்தறிவு.

ஆகவேதான் நண்பர்களே, மணமக்களுக்கு அதிகமாக சொல்லவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் நன்றி காட்டக் கூடியவர்களாக இருங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகின்றவர்கள் விட்டுக் கொடுப்ப தில்லை’’ என்று.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியா தைத் திருமணத்தினுடைய தத்துவமே தன்னம் பிக்கைதான். மூடநம்பிக்கை வெளியேறவேண்டும்.

எளிய வாழ்வு, சிக்கன வாழ்வு, சிறப்பான வாழ்வு வாழவேண்டும். அதோடு தன்னம்பிக்கை இருக்கவேண்டுமே தவிர, தான் என்று சொல்லக்கூடிய தன்முனைப்பு இருக்கவேண்டிய அவசியமில்லை.

மணமகன் நந்தன்பாரதி கொஞ்சம் குனிந்து மாலையை கழுத்தில் வாங்கினார்!

இங்கே நந்தன் பாரதி அவர்களும், யாழினி அவர்களும் உறுதிமொழி சொல்லி மாலை மாற்றிக் கொண்டார்கள். இதையெல்லாம் நீங்களும் பார்த் திருப்பீர்கள்.

நந்தன்பாரதி, யாழினிக்கு மாலை அணிவித்தார் - அதேபோன்று யாழினி மாலை அணிவிக்கும்பொழுது, நந்தன்பாரதி கொஞ்சம் குனிந்து அந்த மாலையை வாங்கிக் கொண்டார்.

இந்த நிகழ்வினை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்குப் பிரச்சினை ஏற்படும்பொழுது, கொஞ்சம் குனிந்தால்போதும், அந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

ஆகவே, அதை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, சிறப்பாக வாழுங்கள்.

இன்னுங்கேட்டால்,

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்று வள்ளுவர் அவர்கள் சொன்னதைப்போல, தந்தையைவிட பிள்ளை மேலானவர்; சாதனையாளர்; உயர்ந்தவர் என்று பெயரெடுத்தால்தான், தந்தைக்குப் பெருமை.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குடும்பம்தான் இது. சிறப்பான குடும்பம்.

சுயமரியாதை வாழ்வு

சுகவாழ்வு!

எனவே, இந்த மணமக்கள் எல்லா வகையிலும் வழிகாட்டக்கூடியவர்களாக இருந்து சிறப்பாக வாழவேண்டும்.

பெரியார் வழி என்று சொன்னால், சுயமரியாதை வாழ்வு - சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி, விடை பெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

No comments:

Post a Comment