இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (7) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 24, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (7)

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (7)

அன்னையார் அவர்களின் ஆற்றல் - தலைமைத்துவ பண்பு, எதையும், எவரையும் துல்லியமாக எடை போட்டு, தன் உள்ளத்தில் வைத்திருந்து, தேவைப்படும்போது அதனைப் பாடமாக மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டிய நேரத்தில் உணர்த்தி, உண்மைகளை  உலவ விட்டு வரும் உயரிய செயலாக்கம் பற்றி வாசக நேயர்கள் இதுவரை வந்த தொடர்கள் மூலம் படித்துப் புரிந்திருப்பார்கள்.

எவ்வளவு நட்புறவு பேணும் நிலையிலும், வேண்டியவர்களாகவும், பழகியவர்களாகவும் இருந்தாலும், கொள்கையை விட்டுக் கொடுக் காமல் அதில் முரட்டுப் பிடிவாத குணம் கொண்டவர் அம்மா என்பதை, எங்களைப் போன்று அருகில் இருந்தோர் - சில நிகழ்வுகளை, அவரது முடிவுகளின் அடிப்படையில் நடந்த வைகளை - பார்த்தபோது, அதிர்ச்சி கலந்து வியப்பில் வீழ்ந்து விட்டோம் நாங்கள்!

திடலில் இருப்பவர் - முக்கிய பொறுப்பில் அவர்; அவரின் மகளுக்குத் திருமணம். அம்மாவிடம் - தலைவரான பிறகு - தேதி வாங்கி நடத்த திடலில் ஏற்பாடு. திருச்சியிலிருந்து அம்மா 2 நாள் முன்பாகவே சென்னைக்கு வந்து பெரியார் திடலில் தங்கி, மற்ற கழகப் பணிகளையும் எங்களுடன் கலந்தாலோசித்து நடத்திடவென்றே வந்தார்!

பழைய இராதா மன்றம் (பார்த்த நண்பர்களுக்குப் புரியும்) - அதன் பக்கமோ காலி திறந்த இடம் (இப்போது பக்கத்தில் தரையாய் போட்ட பகுதி) எல்லாம் பெரிய பந்தல். அதில் பெரிய விருந்து கூடம். முதல் நாளே தடபுடல் சமையல், மதியம் அம்மாவையும், எங்களையும் - என்னை, புலவர் போன்றவர்களையும் அழைத்து (மணநாளுக்கு முதல் நாளே இது) "பகல்" விருந்து - அந்த நிர்வாகி இந்த விருந்துக்கு - பல அதிகாரிகள், நண்பர்கள் வட்டம், உறவினர் வட்டம் எல்லோரையும் அழைத்து - ஆடம்பரம் வழியும் பலமான விருந்து - இலையில் பரிமாற இடமே இல்லாத அளவுக்கு 'டபுள் ஸ்வீட்' போன் றவை - முக்கனிகள் - இத்தியாதி! இத்தியாதி!!

அதைப் பார்த்ததும் அம்மா முகம் மாறியதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் - மவுனமான வெறுப்புடன் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு எங்கள் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள் ளாமல் ஓட்டுநரை அழைத்து அவர் வந்த காரை எடுக்கச் சொல்லி எங்கோ பயணமாகி விட்டார்! பெரியார் திடலில் அய்யா தங்கும் வழக்கமான இடத்தில் அம்மா இல்லை.  எங்களுக்கும், திருமண ஏற்பாட்டாளருக்கும் மிகவும் மனச்சங்கடம். ஒன்றும் புரியவில்லை- மகிழ்ச்சி அலை மாறி விட்டது!

திடலில் தேடிய பிறகு அறிந்தோம், ஒரு முக்கிய நண்பர் - சென்னை அண்ணாநகரில் ஒரு வீட்டில் குடியிருந்தார். அவரைத் தேடி அம்மா - அதுகூட எப்போதோ ஒரு தடவை சென்றிருக்கிறார். அங்கே சென்று தங்கி விட்டார் - திடலைத் தவிர்த்து விட்டு!

உடனே நாங்கள் அங்கு சென்றோம். அம்மா வருத்தமும், கோபமும் கலந்தவரான மன நிலையில் உள்ளதை அறிந்து - புலவர் இமய வரம்பனும், நானும் அம்மாவைச் சந்தித்தபோது, எங்களிடம் கடும் கோபத்துடன், "அய்யா திடலில், அய்யாவிடம் கொள்கையை கற்றவன் வீட்டு திருமண விழா இப்படி ஒரு ஆடம்பரம் திரும ணத்தின் முதல் நாளிலேயே என்றால் - நாளை எனது தலைமையில் இதைவிட கூடுதல் ஆடம் பரம், விருந்து, தடபுடல் தானே நடக்கும்? அய்யா இருந்து  இதைப் பார்த்திருந்தால்- அதுவும் அவருடைய இடத்தில் நடப்பது, அதற்கு எனது தலைமை என்றால் ஏற்பாரா? எவ்வளவு வேத னைப்பட்டு கண்டிப்பார்?" என்று மளமளவென பொரிந்து தள்ளி விட்டு, "நாளை நான் வர மாட்டேன் திருமணத்திற்கு - அவரிடம் சொல்லி விடுங்க" என்று சொன்னார்! எங்களால் எந்தவித சமாதானமும் சொல்ல முடியவில்லை.

"ஏதோ ஒரு ஆர்வத்தில், உற்சாகத்தில் இப்படி செய்து விட்டார். 'நீங்கள் அதை மன்னித்து விடுங்கள் அம்மா" என்பதாக நாங்கள் எவ்வளவோ சமாதானம், விளக்கம் சொன்னோம்.

பிறகு திடலுக்கு வந்தோம் - அவரிடமும், அவருடைய தம்பியிடமும் சொல்லியபடி   - அம் மாவிடம் சென்று வருத்தத்தோடு மன்னிப்பைக் கோரி "ஆடம்பரம் ஏதுமின்றி நாளை திரும ணத்தை நடத்துகிறோம் - அம்மா!" என்றெல்லாம்  கூறினர்; அம்மா ஏற்கவே இல்லை.

பிடிவாதமாக மறுத்து, "அங்கிருந்து நேரே திருச்சிக்கே திரும்பவிருக்கிறேன்" என்று 'நிர்த்தாட்சண்யமாய்'க் கூறி விட்டார்!

திருமணத்தின் ஏற்பாட்டாளரான எமது நண்பர் மிகவும் மனச் சோர்வுடன் என்னிடம் 'எப்படியாவது அம்மாவை சமாதானம் செய்து அழைத்து நடத்தாவிட்டால் - எனது நிலை மிகவும் மற்றவர்கள் முன்பு - கேவலமாகி விடும். எப்படியாவது அம்மாவை அழைத்து அழைப் பிதழில் போட்டபடியே அம்மா தலைமையிலேயே நடத்திட வேண்டும்' என்றார். என் னிடம் மன்றாடுகிறார் - புலவருடன் பேசுகிறார். எனது நிலை 'இருதலைக்கொள்ளி' எறும்பு போல' என்பார்களே, அதுவாகி விட்டது!

பிறகு நாங்கள் சென்று அம்மாவிடம் மிகவும் பொறுமையாக - "அவர் எல்லா ஆடம்பர உணவு மற்ற ஏற்பாடுகளையும் மாற்றி விட்டார் அம்மா,  மிக எளிமையான வகையிலேயே மணவிழா நடக்கும் - நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு அங்கு எந்த ஆடம்பரமும் இருக்காது - இது உறுதி" என்று கூறி ரொம்ப நேரம் அம்மாவிடம் பேசி, சம்மதம் பெற்றோம். இரவு  அண்ணா நகரிலிருந்து அம்மா திடலுக்குத் திரும்பினார்கள்.

காலை மணவிழா நடந்தது. அம்மா சற்று உற்சாகம் குன்றியவராக இருந்தார் (அது எங்களுக்கு மட்டுமே தெரியும்). அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒரு சிறந்த தலைவருக்குரிய  வகையில் பெருந்தன்மையோடு மணமக்களைப் பாராட்டி நிகழ்வை நடத்தினார்.

இதன் மூலம் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம் - அம்மாவிடம் எவ்வளவு நெருக்கமாகப் பழகிய வர்கள் ஆனாலும், அவரிடம் உள்ள கொள்கை உணர்வைப் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. அவரிடம் உரிமை எடுத்துக் கொள்ள முடியாது. கொள்கை, லட்சியம் என்று வந்து விட்டால் அவர் ஒரு போதும் தூங்கும் புலியாக இருக்க மாட்டார்; பாயும் புலியாகவே சீறுவார், பாய்வார் என்பதே!

என்னே அந்தக் கொள்கை எரிமலை!

No comments:

Post a Comment