நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (1)

03.04.1948 -குடிஅரசிலிருந்து...

(இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு. - பதிப்பாசிரியர்)

பணவசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படைதான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினாசிலிங்கம் அவர்களோ, மற்றவர்களோ மறுத்துச் சொல்ல முடியாது.

திராவிட சமுதாயத்தில் நூற்றுக்குப் பத்துப் பேராவது படித்திருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகிற கணக்கு, தன்பெயரிலே கூட இரண்டொரு எழுத்துக்களை விட்டு விட்டு, கையெழுத்துப் போடும் நபர்களையும் சேர்த்துக் கூறுவதாகும் என்கிற உண்மையைத் தெரிந்தால், பார்ப்பனர்கள் அளவில் படித்தவர்கள் என்கிற எடைபோடும்போது 100க்கு 5 பேர்கூட படித்தவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும், இந்த அய்ந்து பேர்கூட திராவிடர் கழக (நீதிக்கட்சி)க் கிளர்ச்சியின் பயனால் படித்தவர்கள் ஆனார்கள் என்பதும், திராவிட சமுதாயம் என்கிற உரிமையினால் இந்த அய்ந்து பேரும் படிக்கவும், படித்து உத்தியோகமோ மற்ற தொழில்களோ கைக்கொண்டு வாழவும் ஆனநிலை ஏற்பட்டிருந்தாலும், இந்த அய்ந்து பேர்களில் அரைக்கால் பேர்வழிகூட திராவிட சமுதாயத்தின் நன்மைக்கான காரியங்களில் கருத்தைச் செலுத்துவோர் இல்லை என்பதும், அதற்கு மாறாகத் தன் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து, அடமானம் வைத்து, கிரையம் செய்து கொடுத்துவிட்டுத் தங்கள் சொந்த வாழ்வுக்கு, வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண்டவர்களே ஏராளம் என்பதும், இந்த மாதிரியான போக்கிலே படித்தவர்கள் என்பவர்கள் போய்க்கொண்டிருப்பதினால்தான்  திராவிட சமுதாயம் சூத்திரச் சமுதாயமாக, சண்டாளச் சமுதாயமாக, வேசி மக்கள் சமுதாயமாக இருந்து வரும் நிலைமை இருக்கிறது என்பதும் எவரும் இல்லை என்று சொல்லிவிடமுடியாத சங்கதிகளாகும்.

திராவிட மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டிய இந்த படித்தவர்கள் கூட்டம், அவ்வாறு செய்யவில்லை என்பதை அக்கூட்டம் உணருவதற்கு மறுத்தபோதிலும், நாளைக்குப் படித்தவர்கள் கூட்டத்தில் சேரவிருக்கின்ற மாணவர்கள், இந்த நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

திராவிட மாணவர்கள், அதாவது திராவிட மாணவர்கள் என்கிற பெயரினால் தங்களை அழைத்துக்கொள்ள முன்வந்து, திராவிட மாணவருலகின் முற்போக்குக்கும், திராவிட மக்களின் நல்வாழ்வுக்கும் பாடுபடச் சபதம் புரியும் மாணவத் தோழர்கள், படித்தவர்களின் வஞ்சகப் போக்கை மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விறுவிறுப்பான பேச்சு! சுறுசுறுப்பான நடவடிக்கை! உண்மைக்குப் பரியும் உள்ளம்! உலுத்தரை ஒழிக்கும் தீவிரம்! எடுப்பான தோற்றம்! எதற்கும் அஞ்சாத நோக்கு! இத்தனையும் உண்டு வாலிபத்துக்கு. இன்னும் பல நல்ல இயல்புகளுமுண்டு.

இந்த நல்லியல்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, பாராட்டுக்குமேல் பாராட்டு என்று சுமத்தி, இளைஞர்களே எதிர்கால மன்னவர்கள் என்று சரணம்பாடி முடிப்பதுதான் மாணவர்களுக்கிடையே பேசும் அறிஞர்கள், தலைவர்கள் என்பவர்களின் வழக்கம்.

இத்தகைய பாராட்டுரை பயனைத் தரும்! எந்த அளவுக்கு? தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ளவிரும்பும் ஒருவர், ஒரு சிறுவனைத் தட்டிக் கொடுத்துத் தன் வேலையைச் சாதித்துக் கொள்ளும் அளவில் புகழ்ந்து கெடுத்தல் என்று இதனைச் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும்கூட, புகழ்ந்து பேசி மற்றவர்களின் சக்தியைத் திரட்டித் தன் சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் இதன்  பயன் என்றால், இதனால்  புகழப்பட்டவருக்குப் பயன் சிறிதும் இல்லை என்றால் யாரேனும் மறுத்துவிட முடியுமா?

வேலைக்கு முன் கூலி! செயலுக்கு முன் பாராட்டு! வேண்டப்படலாம்! ஆனால் நிரந்தரமானதாய் இருக்கலாமா? இதுவே நிரந்தரமானால் ஏமாற்றமும் தோல்வியுமே பெருகும் அல்லவா? இதனை மாணவத் தோழர்கள் நன்கு சிந்தித்துத் தெளிவடைய வேண்டும்.

திராவிட மாணவர்கள் என்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பும், நிறைவேற்ற வேண்டிய செயலும் மிக மிகக் கடினமானவை. பல தலைமுறை தலைமுறையாகப் பகுத்தறிவுக்கு வேலையின்றி வாழ்ந்த சமுதாயத்தை அழித்து, பகுத்தறிவு ஒளி வீசும் புது சமுதாயத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு! தலை கீழ் மாற்றமான இப்பொறுப்பைத் தத்தம் வாழ்வையே ஈடுகட்டி விட்டு, உயிரைப்பணயம் வைத்து, உண்மையும் அன்புமே ஆயுதமாகக் கொண்டு போராடி வெற்றிகாண வேண்டிய செயல்! இச்செயல் பலரால் பல முறை முயற்சிக்கப்பட்டதுதான்; ஆனால் எவரும் இதுவரை வெற்றி காணாதது! என்கிற இலட்சியத்தின் பொறுப்பை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்!

மிகமிகக் கடினமான இந்த லட்சியத்தையும், செயலுக்கு முன் பாராட்டு என்கிற போக்கையும் சேர்த்து எண்ணினால், இந்தப் போக்கு லட்சியப் பாதையைக் காண்பியாது என்பது உறுதி.

சென்ற மாதம் திருச்சியில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில், நம்மியக்கத்தைப் பின்பற்றும் திராவிட மாணவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்கிற கருத்தை விளக்கிப் பெரியாரவர்கள் பேசிய பேச்சின் ஒரு பகுதி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதனை ஒவ்வொரு மாணவத் தோழரும், கழகத் தொண்டரும் கட்டாயம் படித்துப் பார்த்துத் தங்கள் தங்கள் நிலைமையோடு ஒப்பிட்டு, தங்களைத் தாங்களே சோதனை செய்து கொள்வது நல்லது என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.


No comments:

Post a Comment