அம்பேத்கர் - பெரியார் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 26, 2022

அம்பேத்கர் - பெரியார் சந்திப்பு

 30.9.1944  - குடிஅரசிலிருந்து....

இந்திய மத்திய அரசாங்க நிர்வாக அங்கத்தினர்  டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி பெரியார் .வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.

டாக்டர் அவர்கள் 12 மணிக்கு வந்து சந்திப்பதாக தெரிவித்து விட்டு சரியாய் 12 மணிக்கு பெரியார் ஜாகைக்கு வந்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுச் சென்றார்.

பேச்சின் முக்கிய சாரம்:

சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகவும், அதற்கு ஆகவும், அவை யாவும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதற்கு ஆக பெரியாரைப் பாராட்டுவதாகவும், பட்டம் பதவியாளர்களும், பணக்காரர்களும், பதவியே கருமமாய்க் கருதுபவர்களும் முன்னணியிலிருந்து நடத்தப்படும் கட்சி எதுவும் இக்காலத்தில் பயன்தராதென்றும், அவர்களைப் பின் அணிக்குத் தள்ளியது இக்கட்சிக்குப் புத்துயிரளித்தது போல ஆயிற்றென்றும்,

பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதின் திட்டங்களில் நம் வகுப்பில் பார்ப்பனருக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? எதை ஒழிப்பதற்கு அல்லது என்ன நடப்பை மாற்றுவதற்கு என்று குறிப்பிடும் திட்டங்கள் நடைமுறைகள் இல்லாததாலேயே பாமர மக்களிடத்திலும் அறிவாளிகளிடத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு மதிப்பில்லாமல் போனதோடு, பார்ப்பனர், இக்கட்சியாரை உத்தியோக வேட்டைக்காரர் என்று சொல்லுவதை பாமர மக்களும் வெளியிலுள்ள அறிஞர்களும் நம்பும்படி ஏற்பட்டு விட்டதென்றும், இதனாலேயே கட்சி 1937இல் வீழ்ச்சியுற வேண்டியதாயிற்று என்றும், சேலம் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியை எல்லா இந்தியக் கட்சியாக ஆக்கக் கூடியதாகுமென்றும், எதிர் காலத்தில் இது தலைசிறந்து விளக்கக் கூடியதாக ஆகிவிட்டதென்றும் கூறினார்.

சேலம் தீர்மானம் பிடிக்காததால் கட்சியை விட்டுப் போகிறேன் என்பவர்களைப்பற்றியும், வீண் குறை கூறிக் கொண்டு தங்கள் காரியம் பார்த்துக் கொண்டிருப்பவர்களை பற்றியும் கவலைப்படாமல் பாமர மக்களுடையவும் வெளிநாட்டு மக்களுடையவும் ஆதரவு பெறவும் சர்க்கார் கவனிக்கவும் உருப்படியான காரியம் செய்யவும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும், சந்தர்ப்பப்பட்டால் மற்ற ஆள்களுக்கும் இதை வெளிப்படையாய் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றும் சொன்னார்.

ஜஸ்டிஸ்கட்சி எல்லா இந்தியக் கட்சியாக ஆக இப்போது நல்ல சமயமும், நல்ல வேலைத் திட்ட தீர்மானங்களும் இருப்பதால், துணிந்து தைரியமாயும் இந்தியா பூராவும் சுற்றி  வேலை செய்யும்படியும் ஆங்காங்குள்ள தனது நண்பர்களுக்கு எழுதியும் தன்னால் ஆன அளவுக்கு ஒத்துழைத்தும் ஆதரிப்பதாகவும் சொன்னார்.

கடைசியாக திராவிடஸ்தானையும் பாகிஸ்தானையும் ஒன்றாக கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு; இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லிம் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்தமானதென்றும், திராவிடஸ்தான் இந்தியா பூராவுக்கும் பொறுத்தமானதென்றும், பிராமணியம் இந்தியா முழுமையும் பொறுத்த விஷயமென்றும், திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணக்காரர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment