மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துக் கொள்வதா?: கேரள அரசும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துக் கொள்வதா?: கேரள அரசும் எதிர்ப்பு

புதுடில்லி, ஜன.24- மாநிலங்களில் பணிபுரியும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரி களை மத்தியத் தொகுப்புக்கு ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று இப்போதிருந்து வரும் விதியை ரத்து செய்திட ஒன்றிய அரசு முடிவு செய்திருப்ப தற்கு கேரளம் உட்பட ஆறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஜனவரி 12 அன்று மாநில அரசாங்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளது. அதன்படி தற்போது 1954 அய்ஏஎஸ்(ஊழியர்)விதிகளில் 6 ஆவது விதியின்கீழ் மாநில அரசுகளில் பணிபுரியும் அய்ஏஎஸ் மற்றும் அய்பிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசு தன் மத்தியத் தொகுப்புக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் பணிபுரியும் சம்பந்தப் பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த விதியை ரத்து செய்திடலாமா என அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளம் உட்பட ஆறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.  கேரள சட்ட அமைச்சரான பி.ராஜீவ், இது கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியமான குறிக்கோளையே தகர்த்திடும் என்றும் எனவே இதனை தங்கள் அரசு எதிர்க்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதுதொடர் பாக ஒன்றிய அரசுக்கு விரிவான பதிலைத் தாங்கள் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரா.முத்தரசன் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

மாநிலங்களில் பணியாற்றி வரும் அய்..எஸ். (இந்திய ஆட்சிப் பணி), அய்.பி.எஸ்.  (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில்  ஒன்றிய அரசு விதிகளை திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும். கூட்டாட்சிக் கோட்பாட்டை தகர்க்கும் செயலாகும். மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும் சட்ட மன்றங்கள் மற்றும் அமைச்சரவைகளின் அதிகாரத்தையும் பறிக்கும் எதேச்சதிகார முறையாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சக எண்ணத் தோடு அணுகும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் ஒன்றுபட்டு ஒன்றிய அரசுக்கு வலுவான நிர்பந்தம் தரும் நடவடிக் கைக்கு தமிழ்நாடு முதமைச்சர் முன் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

தொல்.திருமாவளவன் கண்டனம்

 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதை செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954இல் விதி 6 குறிப்பிடுகிறது.

இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என விதி 6இல் திருத்தம் செய்வதற்கு பா... அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளும் இதற்காக குரல் எழுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment