நரேந்திர மோடி ராமன் - கிருஷ்ணன் அவதாரமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

நரேந்திர மோடி ராமன் - கிருஷ்ணன் அவதாரமா?

1993ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில்  மத்தியப் பிரதேச சட்டசபைக்கு 5 முறை  தேர்ந்தெடுக்கப்பட்டவர் கமல்படேல்கடந்த 2020ஆம் ஆண்டு சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு அமைந்த போது இவர் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

உத்தரப் பிரதேச தேர்தலையொட்டி  அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய பேச்சு  இணையத்தில் பரவி வருகிறது

 பிரதமர் நரேந்திர மோடியை "கடவுளின் அவதாரம்" என்று குறிப்பிட்ட கமல் படேல், காங்கிரசின் ஊழல் மற்றும் நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் அட்டூழியங்கள் அதிகரித்ததால், அவைகளை முடிவுக்குக் கொண்டு வரக் கடவுளின் அவதாரமாகவே பிரதமர் நரேந்திர மோடி பூமியில் பிறந்தார் என்று கூறினார்.

உத்தரப்பிரதேசம் ஹர்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கமல் படேல், "விஷ்வ குரு போலப் பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். அவர் இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிக்கவும், சாதாரண உழைக்கும் மக்களின் நலனை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நமது நாட்டில் நெருக்கடியும், கொடுங்கோல் ஆட்சி முறையும் அதிகரித்த போதெல்லாம், கடவுள் மனித வடிவில் அவதாரம் எடுப்பார் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ராமன், கிருஷ்ணன்  மனித உருவில் அவதாரம் எடுத்து ராமன், அசுரனான ராவணனைக் கொன்றார். வேறு சில தீய சக்திகளையும் வென்று, மக்களைப் பாதுகாத்து அவர் 'ராமராஜ்யத்தை' ஏற்படுத்தினார்.

 அதேபோல கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது, ​​பகவான் கிருஷ்ணன் பிறந்து, கம்சனின் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவந்தார், அவர்கள் இருவரின் தலைமையில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

அதேபோல், காங்கிரஸின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது ஊழல், ஜாதி வெறி அதிகரித்த போது, நாட்டின் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு மக்களிடையே விரக்தி நிலவியபோது, ​​அதை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி பிறந்தார். ஊழலற்ற ஆட்சியை வழங்கும் பிரதமர் மோடியின் தலைமையில் சாதாரண மக்களும் கூட நிம்மதியாக வாழ்கின்றனர். இவையெல்லாம் சாதாரண மனிதனால் செய்ய முடியாத காரியங்கள். அவதார புருஷனால் மட்டுமே செய்ய முடியும். அப்படி சாதாரண மனிதரால் இவற்றைச் செய்ய முடியும் என்றால் ஏன் கடந்த 60 ஆண்டுகளில் இதை யாராலும் செய்ய முடியில்லை.

எனவே, என்னால் உறுதியாகக் கூற முடியும் - பிரதமர் நரேந்திர மோடி ஒரு அவதார புருஷன். "சாத்தியமற்ற செயல்களைச் செய்யும் கடவுளின் அவதாரம் அவர்" என்று கமல் படேல் கூறினார். இவரது பேச்சு தான் இப்போது இணையதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

கமல் படேல் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை.   முன்னதாக இதே கமல் படேல் தான் கடந்த நவம்பர் மாதம் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை ராபின்ஹூட் எனப் புகழ்ந்திருந்தார். அவர் கூறுகையில், "ராபின்ஹூட் பணக்காரர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்து, அதை ஏழை மக்களுக்கு வழங்குவார். நமது முதலமைச்சர் கொள்ளை அடிக்க மாட்டார். ஆனால், பணக்காரர் களிடம் வரியை வசூலித்து அதை ஏழை மக்களுக்கு வழங்குவார்" என்று தெரிவித்திருந்தார்.

பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாமே அசுரர்களை அழிக்கத்தான். அவதாரங்கள் கற்பனைதான் என்றாலும் அதன் தத்துவம் பார்ப்பனர் அல்லாதாரை அசுரர் என்று கூறி அழித்ததுதான் என்பது வரலாற்று அறிஞர்கள் கூறும் கருத்தாகும்.

நரேந்திரமோடி இப்பொழுது என்ன செய்கிறார்? ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறார். இதன் பொருள் என்ன? பார்ப்பனர் அல்லாதாரை ஒடுக்குவதுதானே - சமூகநீதியை ஒழிப்பதுதானே!

பணக்காரர்களிடம் வரி மூலம் பணத்தைப் பெற்று, ஏழைகளுக்கு உதவுகிறாராம்!

உண்மை என்னவென்றால் இது கார்ப்பரேட்டு களுக்கான அரசு. கார்ப்பரேட்டுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசு. கரோனா காலத்தில் நாட்டு மக்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு பல மடங்கு எகிறி உள்ளது.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புழுத்த சங்பரிவார்க் கூட்டம், இதுவும் பேசும் - இதற்கு மேலும் பேசும். மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment