9 மாதங்களில் 35 ஆயிரம் ரயில்கள் ரத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

9 மாதங்களில் 35 ஆயிரம் ரயில்கள் ரத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

புதுடெல்லி, ஜன.24 கடந்தாண்டு 9 மாதங்களில் பராமரிப்பு பணிகளுக்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், 2021ஆம் நிதியாண்டில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2021 - 2022ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பராமரிப்பு பணிகளுக்காக 20,941 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த காலாண்டில் 7,117 ரயில்களும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான  3ஆவது காலாண்டில் 6,869 ரயில்களும்  ரத்து செய்யப்பட்டன. இதே காலக் கட்டத்தில் 41,483 ரயில்கள் தாமதமாக வந்துள்ளன.  2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் 15,199 மெயில்கள் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகின. மேலும்,  26,284 பயணிகள் ரயிலும் தாமதமாக இயக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதுஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை ரயில்வே தெரிவிக்கவில்லை.

சென்னையில்  முகக்கவசம் அணியாத 3,938 பேர்மீது வழக்கு

சென்னை, ஜன.24 சென்னையில் முகக்கவசம் அணியாத 3,938 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 600 அபராதமும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத 301 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 500 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், காவல்துறையினர் தீவிரமாக கண் காணித்து, கரோனா விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இரவு நேர ஊரடங்கில், சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் தலைமையில், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணை யர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 161 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் 3 இலகுரக வாகனம் என மொத்தம் 173 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், முகக்கவசம் அணியாத 3,938 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 600 அபராதமும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத 301 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 500 அபராதமும் வசூலிக்கப்பட்டது

No comments:

Post a Comment