பெண் என்பதற்காக உரிமையை மறுப்பதா? விவாகரத்து தீர்ப்பை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

பெண் என்பதற்காக உரிமையை மறுப்பதா? விவாகரத்து தீர்ப்பை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, நவ.29  பெண் என்பதற்காக, அவருக்கான உரிமையை மறுக்கக்கூடாது என்ற உயர் நீதிமன்றம், விவாகரத்து வழங்கிய குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை, போரா சமூகத்தின் ஜமாத் பதிவு செய்யும்படி உத்தர விட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அபிஷர் என்பவருக்கு தாவூதி போரா ஜமாத்தில் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி பிரிந்தனர்.

கடிதங்கள் வாயிலாக மூன்று முறை, 'தலாக்' கூறினார். ' - மெயில்' மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தலாக் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி, சென்னை குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழும், குழந்தைகளுக்கு பராமரிப்பு தொகை வழங்க கோரியும், கீழமை நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும், பராமரிப்பு தொகையாக, மாதம் 37 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அபிஷர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அபிஷர் மனு தாக்கல் செய்தார். தண்டனையை உயர்த்தக்கோரி மனைவியும் வழக்கு தொடர்ந்தார்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக, கீழமை நீதிமன்றம் முடிவெடுத்து, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதை, அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இருந்தாலும், இழப்பீடு தொகை அதிகமானது; 7.5 லட்சமாக குறைக்கப்படுகிறது.

இருதரப்பு ஆவணங்களையும் பரிசீலனை செய்ததில், மாத பராமரிப்பு தொகை, குழந்தைகளுக்கான கல்வி தொகை நிர்ணயித்ததை அதிகபட்சமானது என்று கூற முடியாது; அதை உறுதி செய்கிறேன்.இந்த வழக்கில், ஜமாத்தை சேர்க்காததால், போரா சமூகம் பின்பற்றும் நடைமுறை பற்றி, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற விடயங்களில், எதிர்கால நடவடிக்கையை ஜமாத் தான் முடிவு செய்ய வேண்டும். விவாகரத்து உத்தரவை, ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யவில்லை.

நீதிமன்ற உத்தரவை பதிவு செய்ய, மனைவிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பெண் என்பதால் அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது. தன் திருமண நிலை பற்றி அறிவிக்கும் உரிமை, பெண்ணுக்கு உள்ளது.எனவே, திருமண முறிவை அறிவிக்கும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவு, ஜமாத்தை கட்டுப்படுத்தும்.

அதனால், போரா சமூகத்தின் ஜமாத், நீதிமன்றம் பிறப்பிக்கும் விவாகரத்து உத்தரவை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், எதிர்கால வாழ்க்கை குறித்து மனைவி முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும். அபராதம் விதித்த நீதிபதி உத்தரவில் குறுக்கிட தேவையில்லை. அதனால், தண்டனையை அதிகரிக்க கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment