ஒழுக்கத்தை வளர்த்ததா - வளர்க்கிறதா ஆஸ்திகம்? - (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 20, 2021

ஒழுக்கத்தை வளர்த்ததா - வளர்க்கிறதா ஆஸ்திகம்? - (2)

'நாட்டுக்கு நல்லதல்ல நாத்திகம்!' என்ற 'தினமலரின்' கட்டுரையை ஒரு வகையில் வரவேற்கலாம். அவர்கள் எடுத்து வைக்கும் கருத்துக்கள் எவ்வளவுப் பலகீனமானவை என்பதைத் தோலுரித்துக் காட்ட ஒரு நல்வாய்ப்பு தானே பகுத்தறிவாளர்களுக்கு!

கடவுளைப் பற்றியும் எழுதியுள்ளனர். "கடவுள் இருக்கிறார் - உன் கண்ணுக்குத் தெரிகிறதா?; காற்றில் தவழுகிறார், அது உன் கண்ணுக்குத் தெரிகிறதா?" என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில் சொல்லியுள்ளார் என்று கூறி அவரின் முதுகின் பின்புறம் ஒளிகிறார்கள்.

காற்றுக் கண்ணுக்குத் தெரியாது, உண்மைதான். உடலில் உராயும்போது புலன் மூலம் அதனை உணர முடிகிறதே, வேகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதே.தென்றல் காற்று என்று எதை வைத்துச் சொல்லுகிறோம் - புயற் காற்று என்று எதை வைத்துக் கூறுகிறோம்? 

காற்றை அனைவரும் அறிய முடிகிற காரணத்தால், உணர முடிகிற காரணத்தால்தான் யாரும் காற்றை இல்லை என்று சொல்வதில்லை என்பதுதானே உண்மை. மின் விசிறி மூலம் காற்றை வேகமாகவோ (Speed), குறைவாகவோ (Slow)  அனுபவிக்க முடியுமே!

அயம்புலன்களுள் ஒன்றான உடலின் மூலம் துய்க்க முடிகிறதே; கடவுள் அப்படியா? அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் கடவுள் எனறு சொல்கிற போதுதான் - கடவுளைப்பற்றிய கேள்வி தானாக வெடிக்கிறது.

கடவுள் ஒருவர் தான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் ஒரு மதக்காரர் கடவுளை இன்னொரு மதக்காரர் ஏற்பதில்லையே, ஏன், ஏன்?

ஹிந்து மதமான ஒரு மதத்துக்குள்ளேயே வைணவன் கடவுளை ஸ்மார்த்தர்கள் ஏற்கிறார்களா?

ஹிந்து மதக்காரர்கள் இஸ்லாம் மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கியது ஏன்?

கடவுள் நம்பிக்கைக்காரர்களின் மத்தியிலே ஏனிந்த முரண்பாடுகளும் - முண்டா தட்டல்களும்!

சிறீரங்கம் வைணவக் கோயில் கோபுரம் கட்டுவதற்கு ஸ்மார்த்தரான காஞ்சி சங்கராச்சாரியார் நிதி கொடுத்தார். அதேபோல சைவ ஸ்தலப் பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவதில்லை? நீங்கள் சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு அகோபிலமடத்து ஜீயரான அழகிய சிங்கர் கூறிய பதில் என்ன தெரியுமா?

"நான் சிவன் கோயிலுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிர்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். இந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும் - அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதுபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு. இவங்கல்லாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவன். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவன். அவரை வழிபடற நாங்கள், வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள் நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன்  கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தர மாட்டேன் என்றார் ஜீயர்.  (ஆதாரம்: 'கல்கி' 11.4.1982 பேட்டி)

ஓர் ஹிந்து மதத்துக்குள்ளேயே இப்படி குஸ்தி இருக்கு - இந்த லட்சணத்தில் இதனை விமர்சனம் செய்பவர்களைக் கேலி பேசுவதும் கண்டனக் கணைகளை வீசுவதும், கொச்சைப்படுத்துவதும் எந்த யோக்கியதையில்? சிவனை வணங்கினால் புத்தி கெட்டுப் போகும் என்கிறாரே ஜீயர்!

பகுத்தறிவாளர்களோ இந்தக் கற்பனைக் கடவுள்களை வணங்கினால் புத்தி கெட்டுப் போகும் என்கிறோம். என்ன தவறு? உருவமற்றவர் கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்களே இப்படி உருவங்களை அடித்து வைத்துக் கும்பிடுவது முரண்பாடு தானே!

இப்படி கொட்டி அளக்கிறாரே அழகிய ஜீயர் - அவரின் வைணவ மதம்தான் என்ன வாழ்கிறதாம்? அதற்குள்ளேயே எத்தகைய சிண்டுபிடிகள்.

வடகலைக்காரர், தென்கலைக்காரரைக் கண்டு விட்டால் சுவரில் போய் முட்டிக் கொள்வார். அதற்குப் பெயர் "கண்டு முட்டு" என்பதாகும். ஒருவரைப்பற்றி இன்னொருவர் கேள்விப் பட்டாலும்கூட சுவரில் போய் முட்டிக் கொள்வார்கள். அதற்குப் பெயர் "கேட்டு முட்டு"

இப்படி ஒரு மதத்துக்குள்ளேயே சிண்டுபிடி - இந்த யோக்கியதையில் இருக்கு. இதைப்பற்றிக் கேட்டால் பகுத்தறிவாளர்கள்மீது நாலு கால் பாய்ச்சல் என்றால், அது பரிதாப நிலையே!

உடம்பெல்லாம் 'மூளை' என்று வருணிக்கப்படுபவரும், வைணவத்தின்  முகமுமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார்  (ராஜாஜி) என்ன சொல்லுகிறார்?

"நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்கள் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைகள்தான் அதிகம்."

(முதல் அமைச்சர் ராஜாஜி - சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் - 15.4.1953)

ராஜாஜியும் பெரியாரின் சீடர் என்று சொல்லுவார்களோ!

பாரதத்தில் ஒரு பாகமான உத்திர கீதை என்ன கூறுகிறது? துவி ஜாதியினருக்குத் (பார்ப்பனர்களுக்கு) அதாவது இரு பிறப்பாளர்களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உள்ளவர்களுக்கு எங்கும் தெய்வம்.

ஆகக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுபவன் புத்தி குறைந்தவன் என்று கூறும் உத்திர கீதையை என்ன செய்ய உத்தேசம்?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இருக்கட்டும். அந்தக் கடவுள் பக்தி, நம்பிக்கை, நல்லொழுக்கத்தை வளர்த்து இருக்கிறதா?

கடவுளைப் பற்றிச் சிலாகிக்கும் புராணங்கள் காட்டும் மார்க்கம்தானா?

எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

திருவிளையாடற் புராணம்.

"மாபாதகம் தீர்த்த படலம்" என்ன கூறுகிறது?

அன்னையைப் புணர்ந்து தாதை

குரவனாம் அந்த ணாளன்

தன்னையும் கொன்ற பாவம்

தணிந்து வீடளித்த தென்றால்

பின்னை நீ விழி நோய் குட்டம்

பெரு வயி றீளை வெப் பென்று

இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம்

என்பதோ இதற்கு மேன்மை.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த கேவலப்புத்தி கொண்ட பார்ப்பனனுக்குக் கடவுள் முக்தி அளிப்பதுதான் கடவுள் காட்டும் வழியா? ஒழுக்கத்திற்கு உரை கல்லா?

"புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது - பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதார கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே "கிருஷ்ண லீலா" கதையின் நோக்கம். புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது." இதுபற்றி சிந்திக்க வேண்டாமா?

(என்சைக்ளோபீடியா - பிரிட்டனிக்கா)

'கிருஷ்ண பகவான்' என்று கன்னத்தில் போடும் பக்த சிரோன்மணிகளுக்கு ராஜாஜி மூலம் புத்திச் சொல்ல விருப்பம்.

"வியாசர் விருந்து" என்ற தலைப்பிலும், சக்கரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் 'கல்கி'யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

"சதாசிவம்!, எனக்குப் பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். ('கல்கி' 4.10.2009 பக்கம் 72).

பகவானின் லீலைகள் மிகுதியாக உள்ளன என்று நாகரிகமாக சொல்லுகிறார் அவ்வளவுதான்.

சொல்லியது ராஜாஜி, பெரியாரல்ல என்பது 'தினமலர்' கும்பலுக்கு நினைவிருக்கட்டும்!

ஒழுக்கமான கடவுளை உங்களால் படைக்க முடியவில்லையே! தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பை அழித்தான் சிவன் என்பதற்காக வெட்கப்படாமல், தலைகுனியாமல் எந்தத் தைரியத்தில் பேனா பிடித்து எழுத முன் வருகிறீர்கள்?

ஒழுக்கத்தைப்பற்றி ஜெகத் குரு சங்கராச்சாரியார் என்ன கூறுகிறார்? அதே நேரத்தில் தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்?

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" ('கல்கி' 8.4.1958) என்கிறார் மறைந்த காஞ்சி  மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

"பெரியவாள்" சொல்லி விட்டார். பெரியார் சொல்லுவதையும் கேட்க வேண்டாமா?

இதோ பெரியார் பேசுகிறார்:

"கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்குப் பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்! நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது, இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்குப் பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்.

ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம்

அதனாலே?"                             - தந்தை பெரியார்

-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து...

மதத்துக்காகவும், பார்ப்பனீயத்துக்காகவும் வக்காலத்து வாங்கி வாழ்நாள் எல்லாம் அவற்றிற்கே செலவிட்ட திரு. சோ. ராமசாமி ('துக்ளக்') என்ன சொல்கிறார்? அதையும் கொஞ்சம் கேட்கலாமே!

கேள்வி: அசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன  தெரிய வேண்டும்?

பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  - 'துக்ளக்' 26.10.2016 பக்கம் 23

கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரஸா? திமுகவா?

பதில்: இவர்கள் யாருமில்லை. விபூதி குங்குமத்தோடு நிற்காமல் புளியோதரை, வெண் பொங்கல்'னு இலவசமாக கொடுத்தால்தான் பக்தர்கள் வருவாங்கனு கண்டுபிடிச்சது கோயில்கள்தான்.  ('துக்ளக்' 20.6.2012)

எங்களுக்குப் பதில் சொல்லுவது இருக்கட்டும். முதலில், ராஜாஜிக்கும் 'சோ'வுக்கும் பதில் சொல்லட்டுமே!

இவற்றை எல்லாம் ஒட்டு மொத்தமாகக் கூட்டிக் கழித்தால், அறிஞர் அண்ணா சொன்னதுதான் நினைவிற்குவரும்.

"கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான். விபசாரி விசேஷ அபிஷேகம் செய்கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர் இழுக்கான வழி செல்பவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? இல்லை; ஆனால் ஆதி திராவிடரை மட்டும் ஆலயத்துக்கு வரக் கூடாது என்று தடுக்கிறோம். நியாயமா?

தொடர் எதற்கு?

தினமலர், தினமணி, விஜயபாரதம், துக்ளக் மற்றும் ஆன்மிக ஏடுகள் பகுத்தறிவாளர்களைப்பற்றி ஏளனமாகவும், திருப்பித் திருப்பி அரைத்த மாவையே அரைக்கும் நிலையில் அவற்றுக்கெல்லாம் சேர்த்து பதில் இருக்கட்டும் என்பதற்காகவே இந்தத் தொடர்!

 

ரெங்கநாதனின் 'சக்தியோ' சக்தி!

'ரெங்கநாதக் கடவுளைப்பற்றி நீட்டி முழங்கும் ஜீயர் பெருமாள்', அந்த சீறிரெங்கநாதன், டில்லி துருக்கியர் படை எடுத்து வந்தார் என்று பயந்து அந்த ரெங்கநாதக் கடவுளை பிள்ளை உலகாசிரியரும், நாச்சியார் விக்கிரகத்தை இன்னொரு கோஷ்டியினரும் கடத்திப் பாதுகாத்தனரே - 1959ஆம் ஆண்டு மார்ச் 22இல் சிறீரங்கம் ரெங்கநாதன் உள்ளிட்ட சிலைகள் எல்லாம் தீ விபத்தில் சிக்கவில்லையா?

இதுதான் சிவனின் பாட்டனான ரெங்கநாதனின் சக்தியா?

சிவனின் கைலாயம் - இப்பொழுது சீனாக்காரன் ஆக்ரமிப்புப் பகுதிக்குள்  சிக்கிக் கிடக்கிறதே - இது தான் சிவனின் சக்தியா? பதில் சொல்லட்டும் தினமலர்கள்.

 

- அறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள் பக்.312

நூல்: தீண்டாமை

(வளரும்)

No comments:

Post a Comment