பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 21, 2021

பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள்

சென்னை,அக்.21- விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையா ளர்களின் பட்டா பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் 31ஆம்தேதி சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில்,‘‘அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இந்த அரசின்கொள்கையின் ஓர் அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினை களுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப் படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022ஆம்ஆண்டு பொங்கலுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்’’ என்றார்.

 இதையடுத்து, அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அதற்கான வழிகாட்டுதலுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அரசாணையில் கூறப்பட்டுள்ள தாவது, அரசின் திட்டங்கள் பொதுமக்களின் வீட்டுக்கே சென்று சேரும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பட்டாவில் உள்ள தவறுகளை சரிசெய்து, நில உரிமையாளர் களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே இதன் நோக்கம்.

சிறப்பு முகாம்களை வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடத்தி மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வருவாய், நில அளவைத் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும். சிறிய அளவிலான தவறுகள் இருப்பின் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, சர்வேஎண் அல்லது உட்பிரிவு எண், நிலஅளவு, பட்டாதாரர், அவரது தந்தை அல்லது காப்பாளர் பெயர், உறவுமுறை குழப்பம், நில உரிமையாளர் பெயர், நிலம் அமைந்துள்ள இடத்தின் பெயரில்  குழப்பம் ஏற்பட்டிருந்தால் மாற்றலாம். ‘ பதிவேடுஅல்லது நில உரிமையாளர் அளிக்கும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து, சிறு தவறுகளை அந்த நாளே நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஒருவேளை முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, சான்றிதழ்கள், குடிநீர் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தால், அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, தனியான பதிவேட்டில் பதிந்து புகார்தாரர்களுக்கு உரிய உறுதிச் சான்று வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment