‘நீட்’ என்பது ஒரு வகையான ‘குலக்கல்வியே!’ ‘நீட்’ ஒடுக்கப்பட்ட மக்களின் பலி பீடமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

‘நீட்’ என்பது ஒரு வகையான ‘குலக்கல்வியே!’ ‘நீட்’ ஒடுக்கப்பட்ட மக்களின் பலி பீடமே!

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, அக்.3  நீட்  என்பது ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை, எளிய மக்களை, கிராமப்புற மக் களை, முதல் தலைமுறையாகக் கல்விக் கூடங்களில் நுழைபவர்களைத் தடுத்து நிறுத்துவதால், அது ஒரு நவீன குலக்கல்வியே என்றும், இம்மக்களின் பலிபீடமே என்றும் தஞ்சாவூரில் நேற்று (2.10.2021) நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

'நீட்' தேர்வு என்பது மிகப்பெரிய பலிபீடம்!

இதுவரை 17 பேர் நீட் தேர்வுக்குப் பலியாகி இருக்கிறார்கள். அது ஒரு பலி பீடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய மாணவச் செல்வங்கள் தங்களுடைய மருத்துவக் கனவை நனவாக்க முடியாத அளவிற்கு, அந்தத் தேர்வு மிகப் பெரிய அளவிற்குக் கோளாறான ஓர் ஏற்பாடாகும்.

நீட் தேர்வு என்பது கிராம மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை, எளிய மக்களுக்கும் கேடு செய்யக் கூடிய அளவிற்கும் எதிரானது என்பதை நாம் மட்டுமே சொல்லவில்லை, பிரபலமான கல்வியாளர்கள், அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நீட் தேர்வில் இதுவரை வெற்றி பெற்றிருக் கிறார்கள் என்று சொன்னால், முதன் முறையாக எழுதிய தேர்வின் மூலம் அவர்கள் வெற்றி பெறவில்லை. அப்படி வெற்றி பெற்றவர்கள் என்பதும் மிக மிகக் குறைவு.

கார்ப்பரேட்டுகளுடைய சுரண்டல்

பயிற்சி மய்யத்தில் 8 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் பணம் கட்டிப் படித்துதான் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்; கார்ப்பரேட்டுகளுடைய சுரண்டலுக்கு ஆளான நிலையில்தான் நீட் தேர்வு இருக்கிறது என்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இதுவரை நீட் தேர்வு வந்து நான்காண்டுகள் ஆகியிருக்கின்றன. முதலாண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், அதிலி ருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டது.

இன்னொரு தவறான கருத்து என்னவென்றால், நீட் தேர்வு, உச்சநீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது என்பதாகும். நீட் தேர்வு கூடாது என்பதுதான் முதன்முதலாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பாகும்.

மாறுபட்ட கருத்து சொன்ன  நீதிபதியின் தலைமையில்....

மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில், இரண்டு நீதிபதிகள் நீட் தேர்வு கூடாது என்றும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் சொன்னார்.

மேற்சொன்ன இரண்டு நீதிபதிகளும் ஓய்வு பெற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் விவாதித்த பிறகு,  பா... ஆட்சி வந்த பிறகு,  வேண்டுமென்றே  குஜராத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி - ஏற்கெனவே உச்சநீதிமன்ற அமர்வில் மாறுபட்ட கருத்தை சொன்னவர் - அந்த நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நீட் தேர்வு செல்லும் என்று மறு ஆய்வில் கொண்டு வந்தார்கள்.

இது, அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான ஒன்றாகும். காரணம், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையீடு, உரிமை பறிப்பு உள்ளது.

அதேபோல, மாநிலத்திற்கு ஒரு கல்வித் திட்டம் இருக்கிறது; ஒன்றிய அரசாங்கத்திற்கு வேறொரு கல்வித் திட்டம் இருக்கிறது.

ஒன்றிய கல்வித் திட்டத்தைப் பொறுத்து நீட் தேர்வு கேள்வித் தாள்கள் தயாரிக்கப்படுவதால், மாநில அரசு பாடத் திட்டத்தில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனுடைய விளைவாக பிளஸ் டூ தேர்வில், பல பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற அனிதாக்கள் போன்றவர்கள்  - மற்றவர்கள் எல்லாம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், மனமுடைந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அந்தத் தற் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த ஆண்டும் நீட் தேர்வினால் நான்கு மாணவர்கள் தற்கொலை

இந்த ஆண்டுகூட நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இருந்தும், ஒன்றிய அரசின் கண்களைத் திறக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வு வந்தால், ஊழலே இருக்காது. திறமையின் அடிப்படையில்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன இரண்டுமே  பொய் யானவையே!

காரணம் என்னவென்றால், நீட் தேர்வில் எந்தப் பாடத்தையும், பொதுவாக மருத்துவராவதற்குத் தேவையான பாடங்களை, கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பாடங்களையே பள்ளிக்கூடங்களில் படிக்காமல், வெறும் கோச்சிங் சென்ட்டருக்கு மட்டுமே போய், அதனால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதற்காக மட்டுமே படித்து, அதற்காக 8 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் செலவழித்து, அதுவும் முதன்முறையாக இல்லாமல், மூன்றாவது முறை, நான் காவது முறை நீட் தேர்வு எழுதியவர்கள்தான் இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஆகவே, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையே ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் புதிய பாடத் திட்ட முறைப்படி நீட் தேர்வு!

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களுக்கு - ஏற்கெனவே இருந்த பாடத் திட்டத்திலே கோளாறு இருக்கிறது. அந்தப் பாடத் திட்டத்தை, இந்த ஆண்டு மாற்றியிருக்கின்றோம் என்று சொல்லி, மாணவர்களுக்கு அந்தப் பாடத் திட்டத்தைப் படிக்கக்கூடிய கால அவகாசம் கொடுக்காமல் தேர்வை நடத்தியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பாடத் திட்டத்தை மாற்றியிருக்கலாமே என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர்.அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை.

எல்லாவற்றையும்விட, நீட் தேர்வு என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபொழுது, மிகத் தெளிவாக, எந்த மாநிலம் விதிவிலக்குக் கேட்கிறதோ, அதை கொடுக்கலாம் என்ற விதியும் இருக்கிறது.

ஆனால், ஒன்றிய அரசு அதை நடைமுறைப் படுத்துவதற்குத் தயாராக இல்லை.

அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, மாநில அரசுகளோடு கலந்து பேசவேண்டும் என்ற நடைமுறை இருந்தும், அந்த விதிமுறைகளை ஒன்றிய அரசு கடைபிடிக்கவில்லை.

சட்ட ரீதியாக நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன

தேர்தல் வாக்குறுதியில் தி.மு.. நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்று சொன்னார்களே,  செய்துவிட்டார்களா? என்று நீங்கள் கேட்கலாம்.

அது நம்முடைய கைகளில் இல்லை. ஒன்றிய அரசுடன்  போராடித்தான் அதனை நிறைவேற்ற முடியும். சட்ட ரீதியாக நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த .தி.மு.. ஆட்சியில், இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுக்கவில்லையே! அதேபோன்றுதானே இந்த ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்று கேட்கலாம்.

கடந்த ஆட்சியில் அனுப்பப்பட்ட மசோதாக்கள், திருப்பி அனுப்பப்பட்ட செய்தியையே அவர்கள் ரகசியமாக வைத்துவிட்டார்கள். நீதிமன்றம் சென்ற பிறகுதான், அந்த ரகசியமே வெளியில் வந்தது.

தி.மு.. ஆட்சிக்கு வந்ததும், நீதிபதி .கே.இராஜன் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று  அந்த அறிக்கையின் பரிந்துரையின்படி, இப்போது சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

வல்லுநர் குழு அமையுங்கள் என்றோம் நாங்கள்!’

இதற்கு முன்னுதாரணமாக, 2007 இல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சரே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தபொழுது, அந்த சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் சொன்னது.

அப்போதே நாங்கள் சொன்னோம், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் கருத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சொன்னோம், அதை அந்த அம்மையார் கேட்கவில்லை.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், அனந்தகிருஷ்ணன் அவர்களுடைய தலைமையில்,  ஒரு குழு அமைத்து, அந்தக் கல்வி நிபுணர்கள் குழுவின் பரிந்துரைப்படி, நுழைவுத் தேர்வை ஒழிக்கின்றோம் என்று சொன்னவுடன்,  அந்த சட்டம் இன்னமும் இருக்கிறது. நீதிமன்றத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்பட முடியவில்லை.

ஆகவேதான், கடந்த ஆட்சியில் இரண்டு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதையும் கவனத்தில் கொண்டு தி.மு.. ஆட்சிக்கு வந்தவுடன், ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள்.

தீர்மானங்கள் அல்ல - மசோதாக்கள்!

நம்முடைய பேச்சாளர்கள், மற்றவர்கள்கூட தீர்மானங்கள், தீர்மானங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவை முன்பும் சரி, இப்பொழுதும் சரி, தீர்மானங்கள் அல்ல.

மசோதாக்கள் - ஒரு சட்டம், சட்டமாக முழு ஒப்புதல் பெறுகின்ற வரையில், அதற்கு மசோதா என்று பெயர். அதற்குப் பிறகு அது கையெழுத்துப் போடப்பட்டவுடன் சட்டம் என்று ஆகும்.

இந்த சட்டத்தினுடைய அடிப்படை என்னவென்று சொன்னால், ஒரு நிபுணர் குழு ஆய்வு செய்து, பல புள்ளிவிவரங்களைத் தயாரித்து, எப்படி எப்படியெல்லாம் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்களைத் தந்துள்ளனர்.

எனவே, சுலபமாக இதை நிராகரித்துவிட முடியாது. இது ஒரு சட்டப் போராட்டம் என்றாலும் சட்டப் போராட்டம் மட்டும் போதாது; மக்கள் போராட்டமாக இது வெடிக்கும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்.

நாடு தழுவிய அளவில், மக்கள் எழுச்சியோடு போராட்டம் நடைபெறும்!

இது தொடக்கம்தான். தமிழ்நாட்டில் உள்ள ஒத்தக் கருத்துள்ள அத்தனைக் கட்சிகளும், பெற்றோரும், மாணவர்களும் சட்ட, மக்கள் போராட்டங்களை தாராளமாக இதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது கரோனா காலகட்டம் என்பதினால், இன்னும் அரசாங்கத்தால், தளர்வுகள் முழுமையாக நீக்கப்படாத காரணத்தினாலும், இதுபோன்ற அரங்கத்தில் இந்தக் கூட்டங்களை நடத்துகிறோம். அடுத்தபடியாக, நாடு தழுவிய அளவில், மக்கள் எழுச்சியோடு இந்தப் போராட்டம் நடைபெறும்.

அரசாங்கம், அதனுடைய சட்ட வரம்புக்குட்பட்டு, அவர்கள் இந்தக் கருத்தை உருவாக்கும்பொழுது, அதற்குப் பொதுமக்களுடைய ஆதரவு ஏராளமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதை விரும்புகிறார்கள்.

நீட் தேர்வு என்பது நவீன குலக்கல்வித் திட்டமே!

எனவே, சமூகநீதி வரவேண்டும்.

நீட் தேர்வு என்பது ஒரு நவீன குலக்கல்வித் திட்டம்போன்றதுதான்.

நூறாண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்தான் மருத்துவ படிப்பிற்கே மனு போட முடியும் என்பதுபோன்றகண்ணிவெடிஉருவாக்கப்பட்டு இருக்கிறது  நீட் தேர்வு மூலமாக என்பதை சொல்வதற்காகத்தான் - அதை நாடெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டும்.

பிரச்சாரம், போராட்டம் என்ற இரண்டு வகையில் செய்வதற்கான அடையாளமாகத்தான், தேர்தல் நேரத்தில் இந்தக் கூட்டத்தைப்பற்றி அறிவித்தோம்.

தஞ்சையிலிருந்து தொடங்குகிறேன்!

தேர்தல் பிரச்சாரத்தை எந்தத் தஞ்சையில் நான் முடித்தேனோ - அதை தஞ்சையில் மீண்டும் இதைத் தொடங்குகிறேன் என்பதுதான் மிக முக்கியமானது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

No comments:

Post a Comment