‘‘சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவர்'' பெரியாரை கொண்டாடும் வடஇந்தியர்கள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 19, 2021

‘‘சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவர்'' பெரியாரை கொண்டாடும் வடஇந்தியர்கள்...

 பாராட்டும் கேரளா, கருநாடகா

சென்னை, செப்.19-  பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரின் பிறந்த நாளை தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியாவில் பலரும், கேரளா, கரு நாடகா போன்ற அண்டை மாநிலங் களில் பலரும் கொண்டாடி வரு கிறார்கள்.

பெரியார் பிறந்த நாளான செப் டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்த தென்னிந்தியா விற்கும் ஜாதி கட்டுமானத்தில் இருந்து விடுதலை ஏற்படுத்திக் கொடுத்து, திராவிட இனத்திற்கு புதிய அடையா ளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஜாதி கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடந்த மக்களுக்கு சிறகுகளை கொடுத்தவர். பெண் விடுதலை, மறுமணம், ஜாதி ஒழிப்பு, சம உரிமை, சுயமரியாதை போன்ற விஷயங்களை வட மாநி லங்கள் இப்போதுதான் பேசத் தொடங்கியுள்ளன.பெரியாரை நினைவு கூர்ந்து ட்வீட்களை செய்து வருகிறார்கள்.  

ஆனால், தமிழ்நாட்டில் பெரி யாரோ அதை 80 ஆண்டுகளுக்கு முன்பே பேசிவிட்டார். 8,200 நாள்கள் சுற்றுப் பயணம், 10, 700 சுற்றுப்பயணம் என்று 8 லட்சத்திற்கும் அதிகமான கி.மீட்டர் பயணித்து தமிழ்நாடு மக்களுக்கு சுயமரியாதை எண் ணத்தை விதைத்து விட்டுச் சென்றவர் பெரியார். மொத்த நாடும் ஒரு பக்கம் செல்லும்போது, தமிழ்நாடு மட்டும் எப்போதும் எதிர் திசையில் செல்ல பெரியார் போட்டுக் கொடுத்த அந்த விதைதான் காரணம்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்று உரைத்த ‘‘

சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவர்'' பெரியாரை தமிழ்நாடு மட்டுமன்றி இன்று தேசமே அவரின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. ஆம் தமிழ்நாட்டில் இன்று அரசு சார்பாக சமூகநீதி நாள் கொண் டாடப்படுகிறது. அதே சமயம் வட இந்தியாவை சேர்ந்த பல ட்விட்டர் பயனாளிகள் பெரியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து ட்விட் டரில் அவரைப்பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பெரியார் ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி மொத்த இந்தியாவிற்கும் தேவை என்பதை காரணங்களோடு அடுக்கி ட்வீட் செய்து வருகிறார்கள்.

பெரியாரின் ஆலய நுழைவு போராட்டம், சமூகநீதி போராட்டம், அம்பேத்கருக்கு முன்பாகவே தாழ்த் தப்பட்ட மக்களின் சம உரிமைக்காக குரல் கொடுத்தது, அம்பேத்கர் மீது பெரியார் வைத்திருந்த அன்பு, இரண்டு தலைவர்களும் மக்கள் விடுதலைக்காக நாடு முழுக்க குரல் கொடுத்த விதத்தைப் பாராட்டி இந்த வடஇந்திய நபர் ட்வீட் செய்துள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள், அவர்களின் போராட் டங்களை இவர் நினைவு கூர்ந்து உள்ளார்.

மனிதர்கள் சந்திக்கும் இழி நிலைக்கு கடவுள்தான் காரணம் என்றால், கடவுளையும் அழித்திடு, மதம்தான் காரணம் என்றால் அதை அழித்திடு. மனுதர்மம், கீதை அல்லது வேறு புராணங்கள் காரணம் என்றால் அதை சுட்டுப் பொசுக்கிவிடு. கோவில், குளம், விழாக்கள்தான் உன் இழி நிலைக்கு காரணம் என்றால் அதை புறக்கணித்துவிடு. இதுதான் நமது அரசியல். இதை வெளியே வந்து வெளிப்படையாக கூவு என்று பெரியார் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் ட்வீட் செய்துள்ளார்.

பிரபல வட இந்திய பத்திரிகை யாளரும், தாழ்த்தப்பட்ட மக்களின் போராளியுமான சுமித் சவுகான் பெரியாரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். சமூகநீதி நாள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து வரையப்பட்ட ஓவியம் ஒன்றை பகிர்ந்து இந்த ட்வீட்டை அவர் செய்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரும், சமீபத் தில்பிராமண' கொள்கைகளுக்கு எதிராகப் பேசி வழக்கில் சிக்கிய வருமான நடிகர் சேட்டன் குமார், பெரியார் குறித்து நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். ‘‘இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் பிறந்த தினம் இன்று. அவர் விதைத்த சமூக நீதி அரசியல்தான் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போதுவரை அந்த அரசியல் மாற்றம் நீண்டு கொண்டு இருக்கிறது. உங்களை நாங்களும் பின்பற்றுவோம் தந்தையே!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கருநாடகாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் பெரியாரை நினைவு கூர்ந்து ட்வீட்டு களை வெளியிட்டுள்ளன.

சமூகநீதி போராளியான திலீப் மண்டல், ‘‘இந்தியாவின் மிக சிறந்த சமூகநீதி போராளியும், சமூக சீர்த் திருத்தவாதியுமான பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், அவரின் நினைவைப் பகிர்வோம்'' என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்.

கேரளாவிலும் பலர் பெரியாரை நினைவு கூர்ந்து உள்ளனர். வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் பெரியார் அங்கு ஆலய நுழைவு போராட் டத்தை நடத்தினார். இதற்காக அங்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 1924இல் நடந்த பெரியாரின் இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தை நினைவு கூர்ந்து பல மலையாளிகள் பெரியாரை பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்கள்.

தொகுப்பு :By Shyamsundar

நன்றி: ‘ஒன் இந்தியா'

தமிழ் இணையம்', 17.9.2021

No comments:

Post a Comment