ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்விஒரே நாடு, ஒரே வாகன எண் என்று மாநிலங்களுக்கான குறியீட்டை மெல்ல மெல்ல நீக்கிட ஒன்றிய அரசு முனைகிறது. இதற்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: மாநில அரசுகளில் உள்ள முக்கிய கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு பெரியார் நுண்ணாடி சப்ளை தேவை. அதற்கு தமிழ்நாட்டுக்குத் தான் வர வேண்டும். நமது முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் மற்றவர்களை வரவழைத்து திட்டமிட்டு, முன்பு கலைஞர் ஆட்சியில் கூட்டியது போல மாநில உரிமைகள் பற்றிய கருத்தரங்க மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்தி, பிறகு அகில இந்திய இயக்கமாக அதனை விரிவாக்கிடுவார் என்று நம்புகிறோம்; முந்தைய கலைஞர் ஆட்சியில் - அரசியல் சட்ட ரீதியில் அமைக்கப்பட்ட ஜஸ்டிஸ் ராஜ மன்னார் குழுவின் செயல் முறைத் திட்டங்களுக்கு ஆயிரம் வலுவான காரண காரியங்கள் இப்போதும் உண்டு. ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ - காத்திருப்போம் - காத்திரமான செயலை எதிர்பார்த்து.

கேள்வி:  வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரத்தை காவல் நிலையத்தில் அளிக்குமாறு வீட்டு உரிமையாளர்களை தொந்தரவு செய்கிறார்களே காவல்துறையினர். இது சரியானதா?

- ஸ்டிபன், பட்டாபிராம், ஆவடி

பதில்: இப்போதுள்ள சூழலில் - எவர் எப்படிப்பட்டவர் என்று புரிந்து கொள்ள முடியாத சூழலில் - இந்த ஏற்பாடு தவிர்க்க முடியாத ஒன்று. குறை காண வேண்டாம்.

கேள்வி:  ஏழை மக்களிடம் கடனை வசூல் செய்யும் அடாவடி முறையை, கடன் வாங்கி கட்டாத பெரும் நிறுவனங்களிடம் காட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே?

- கொ.ராஜன், கும்மிடிப்பூண்டி

பதில்: உச்சநீதிமன்றம் உச்சியில் நின்று முழங்குவது போல் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால் செயல்வடிவம் பெறுமா? நிச்சயம் இப்போதைய ஒன்றிய ஆட்சியில் அது குதிரைக் கொம்பே!

கேள்வி: தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தின் அங்கமான பிர்லா கோளரங்கத்தை விளம்பரப்படுத்தும் அளவிற்கு, பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்தை ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லையே?

- . மணிமேகலை, நாவலூர்

பதில்: முன்பொருமுறை நேரிலேயே பள்ளிக் கல்வி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். ஏனோ சரிவர உடனடி நடவடிக்கை இல்லை என்பது  நீங்கள் கூறுவது மூலம் உண்மையாகி உள்ளது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்திற்கு முன்னுரிமை தந்து விளம்பரங்கள் செய்ய வற்புறுத்துவோம்.

கேள்வி: இன்றைய ஒன்றிய அரசு பொது நிறுவனங்களை குத்தகைக்குத் தர செய்யும் ஒப்பந்தங்களை அடுத்த அரசு ரத்து செய்ய சட்டவழி உள்ளதா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: நிச்சயம் சட்டப்படி ரத்து செய்ய முடியும். அடுத்து வரும் அரசு முற்போக்கு சமதர்ம நம்பிக்கையுள்ள, அரசியல் சட்டத்தை உள்ளபடியே மதிக்கின்ற அரசானால் நிச்சயம் செய்யலாம்!

கேள்வி:  நீட்தொடர்பாக அமைக்கப்பட்ட .கே.ராஜன் கமிட்டி பரிந்துரைகளை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமா?

- சி.இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்: எந்த ஒரு அரசு அமைத்த கமிட்டி, கமிஷன் அறிக்கையானாலும் சட்டமன்றத்தில் வைத்து பகிரங்கப்படுத்திய பிறகே, அரசிதழில் வெளியிட முடியும். இன்னும் அது பகிரங்கப்படுத்தப்படவில்லையே - அதற்குள் எப்படி அரசிதழில் (கெசட்டில்) வெளியிட முடியும்?

கேள்வி:  ஒலிம்பிக் போன்ற போட்டிகள் வரும்போது இந்தியாவில் விளையாட்டு தொடர்பான ஆதங்கம் வெளிப்படுகிறதே தவிர அதன் பிறகு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லையே?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: நிழலோடு போர் புரியக்கூடாது. நிஜத்தோடு போர் புரிந்தால் உண்மை வெற்றிகள் பெற முடியும். எனவே அரசுகளின் அணுகுமுறை மாற வேண்டும்.

கேள்வி:  அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை வைக்க ஆவன செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

- மு.இரா.வேந்தன், ஈரோடு

பதில்: நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது. மேனி சிலிர்த்து உரிய அறிவிப்பைக் காணக் கண்கள் தேடக் காத்திருக்கின்றன! கேட்கக் காதுகள் துடிக்கின்றன!

கேள்வி:  பா... ஆளும் மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழ்நாட்டில் இதற்காகவே ஆட்சியைக் கலைப்போம் என்று பா...வினர் துள்ளுகின்றார்களே?

- வி.ஆனந்தி, தென்காசி.

பதில்: பா...வினர் ஆட்சிக் கலைப்பை ஏதோ கிள்ளுக்கீரை என்று நினைத்து பேசுகிறார்கள். அண்ணாமலைகளின் ஆரோகணம் - அவரோகணங்கள் எல்லாம் முடிவில் முகாரியாக முடியும் - பூச்சாண்டிக்கு திராவிடம் ஒரு போதும் பயப்படாது!

தங்களிடம் உள்ள நான்கு இடங்களை இழக்க ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? என்று நமக்கு புரியவில்லை.

ஒரு வேளை இவர் பற்றிய படங்கள் தோற்றுவிட்டதன் காரணமா? தெரியவில்லை.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவாஎன்பதுதான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment