மத நிகழ்ச்சிகளால் மனித உயிர் பறிக்கப்படலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

மத நிகழ்ச்சிகளால் மனித உயிர் பறிக்கப்படலாமா?

தமிழ்நாட்டில் ஆடி திருவிழாக்களில் அதிகம் பேர் கூடுவதாலும், 62 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாததாலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கரோனா அவசர சிகிச்சை பிரிவை ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (11.8.2021) ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு 100-க்கும்கீழ் கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நான்கு மாவட்டங்களில் மட்டுமே நாளொன்றுக்கு 100-க்கும் மேல் தொற்று கண்டறியப்படுகிறது.

கூட்டத்தைத் தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் மக்களின் அலட்சியத்தால் சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை, 2,000-த்தை நெருங்குவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆடி மாதம் கூழ்வார்க்கும் நிகழ்வில் கூடிய 300 பேரில் 24 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 38 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதும், மீதமுள்ள 62 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அனைத்து மத ஆலயங்களிலும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. எந்தவிதமான கூட்டமாக இருந்தாலும் சரி, தடுப்பூசி போடாமல், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் அங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

இப்படி கூறி இருப்பவர் மூத்த ஓர் அரசு அதிகாரி - இப்படி கூறி இருப்பதால் இவர் திராவிட இயக்கத்தைச்  சேர்ந்தவர் என்று முத்திரையும் குத்த முடியாது.

மக்கள் கும்பிடாத கடவுள்களா? போகாத கோயில்களா? போடாத முழுக்குகளா? செலுத்தாத நேர்த்திக் கடன்களா? படைக்காத படையல்களா? இருக்காத விரதங்களா?

இவ்வளவு இருந்தும், நடைபெற்றும் ஒரு கரோனாவைத் தடுக்க முடியாதது ஏன்?

கருணையே உருவானவன் கடவுள் என்று சொல்கிறார்கள் - சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வாய்ப்பறை கொட்டுகிறார்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிறார்கள். இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் கரோனா போன்ற தொற்று நோய்கள் வரலாமா? மக்களின் உயிரையும் குடிக்கலாமா!

கடவுளைப் பற்றிக் கூறும் நமது கருத்துகளும் கணிப்புகளும் உண்மைதான் என்பதை இப்பொழுதாவது உணர்வது புத்திசாலித்தனம்.

குறைந்தபட்சம் கரோனா போன்ற தொற்று நோய் அலைக்கழிக்கும் கால கட்டத்திலாவது ஆடி வெள்ளி என்றும், அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுவது என்றும் அலையலாமா? அதன் பயன் என்ன? அரசு செயலாளர் கூறியுள்ளாரே - கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆடி மாதம் கூழ் வார்க்கும் நிகழ்வில் கூடியவர்களுள் 24 பேர்களுக்குக் கரோனாவாம்.

கடவுள் காப்பாற்ற மாட்டார் - கவனமாக இருந்தால் உயிர் தப்புவீர்கள் - எச்சரிக்கை!

No comments:

Post a Comment