இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

இலக்கியச் சந்தைக்குப் போகலாமா? (1)

ஜப்பானின் "இச்சிகோ - இச்சியே" - பற்றி தெரிந்து கொள்ளுவது புதிதாக ஒன்றை நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்வதாகும்!

நாம் அறிந்தவைகளைவிட, அறியாதவைகள் வாழ்க்கையில் மிக அதிகம்.

அதிலும்கூட புரிந்தவைகளை விட நமக்குப் புரியாதவைகளே மிகவும் அதிகமாக உள்ளது.

சிலருக்குள்ள தன் முனைப்பு (Ego) காரணமாக புரியாதவைகளையும்கூட புரிந்ததாக போலித்தனமாகக் காட்டி தங்களையும் ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றுவார்கள்! இது உலகியல்!!

அந்த வகையில் முன்பு நான் "இக்கிகை" என்ற சுகமான வாழ்க்கைப் பயணத்தை ஜப்பானின் முதுகுடி மக்கள்கூட எப்படி அனுபவித்து மகிழ்கின்றனர் -  நல வாழ்வு உடலுக்கும், உள்ளத்திற்கும் அதன் மூலம் எப்படி புத்தாக்க வாழ்க்கையாக அமைகிறது என்பதை ஓர் ஆறு கட்டுரைகளில் எழுதினேன்.

சிங்கப்பூரில் சில ஆண்டுகளுக்குமுன் வாங்கிப் படித்த ஆங்கில நூல். (அது இப்போது தமிழிலும் மொழியாக்கம் செய்து மஞ்சுள் பதிப்பகத்தினரால் நூல் வெளி வந்துள்ளது)

அதன் 'இச்சிகோ - இச்சியே' என்ற இந்நூல் எனக்கே புதிது.

மும்பையில் பல ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்பவர் (அவர் செய்வது வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் அல்ல; தமிழாக்கமும் கூட) நண்பர் PSV குமாரசாமி அவர்கள்.

அவர் பல நூல்களை எனக்கு கற்க அனுப்பி யுள்ளார். அத்துணையும் தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும்கூட கருவூலங்கள் போன்றன.

பல கோடி விற்பனையில் உலகின் பல்வேறு மொழிகளில் வரும் ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்து வரும் நண்பர் PSV குமாரசாமி அவர்களைப் போலவே, திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களது தமிழாக்க நூல்களும் வந்தன!

மஞ்சுள் பதிப்பகத்தின் சிறப்பான வெளி யீடுகள்.

வைக்க இடமும், படிக்க நேரமும் எனக்குப் பெரிதும் பிரச்சினைகளாகி விடுகின்றன.

என்றாலும் நான் விடுவதில்லை. பசியுள்ளவன் இடம், பொருள், சூழ்நிலை அந்தஸ்து என்றா பார்ப்பான்? இல்லையே!

கண்ட இடத்திலும், ஏன் தந்தை பெரியார் அவர்களே சாலை ஓரங்களில் நின்று சாப்பிட்டு விட்டுப் பயணங்களைத் தொடர்ந்த அனுபவத் தில் நானும் இடம் பெற்றதால்!

பார்த்தால் பசி தீரும் - பழமொழி

நமக்கோ படித்தால்தான் பசி தீரும்.

ருசி தெரியும்.

புசியுங்கள் என்று மற்றவருக்கும்

ஈந்து மகிழ முடியும்.

படித்தேன் இரவில் - தூக்கத்திடம் சில மணி விடுமுறை எடுத்துக் கொண்டு - மிகவும் சிறப்பானதாக இருந்தது.

ஜப்பானிய மக்கள் எதனையும் நேர்த்தியுடன் செய்வது, உழைப்பது, மென்மையாகப் பேசி அடக்கத்துடன் வாழ்வது என்பதைத் தாண்டி வாழ்க்கையை ஒரு கலையாகவே ஆக்கி தாங் களும் வாழ்ந்து பிறருக்கும் வழிகாட்டுகிறார்கள்!

"யாம்பெறும் இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்" என்ற முறையில் மற்ற மக்களுக்கும் உழைப்பினாலும் அறிவுத் திறத்தினாலும் உயர்ந்து நிற்கிறார்கள்!

"இச்சிகோ - இச்சியே" என்ற நூலினை எழுதியுள்ள நூலாசிரியர்  ஹெக்டர் கார்சியா  ஸ்பெயினில் பிறந்தவர். இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார்.

மற்றொருவர் பிரான்செஸ்க் மிராயியஸ் பன்னாட்டளவில் பல விருதுகளைப் பெற்றவர்.

இந்நூலைப் பற்றியும், இச்சிகோ - இச்சியே பற்றியும் அறிக்கைகள், நூலாசிரியர்கள் எழுதி யுள்ள முன்னுரையை (சரளமான நடையில் தமிழாக்கம் சிறப்புடன் உள்ளதை) அப்படியே தருகிறோம்.

நுழைவு வாயிலுக்குள் செல்லுமுன் இது ஒரு நல்ல அறிமுகம் என்பதால்.

(நாளையும் செல்வோம்)

No comments:

Post a Comment