மக்கள் மனங்களை வென்றவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

மக்கள் மனங்களை வென்றவர்கள்

 மகளிர் ஆக்கி அணி

36 ஆண்டுகள் கழித்து ரியோ ஒலிம்பிக்கில் முதன் முறையாக வாய்ப்பு பெற்ற மகளிர் ஆக்கி அணி கடைசி இடத்தைத்தான் பிடித்தது. மகளிர் ஆக்கியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு கத்துக்குட்டி. காலிறுதியை நெருங்கினாலே பெரிய சாதனைதான். ஆனால், ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியைக் காலிறுதியில் புரட்டிப்போட்டது. அரையிறுதி வரை சென்று, பதக்கம் எதுவும் வெல்லாவிட்டாலும், மகளிர் ஆக்கிக்குப் புத்துணர்வையும் உத்வேகத்தையும் இந்த அணி ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

கோல்ஃப்

கோல்ஃபை பொறுத்தவரை நம்மவர்களுக்கு ஓர் அந்நிய விளையாட்டு. இதில் சத்தமில்லாமல் இறுதிச்சுற்று வரை முன்னேறி ஆச்சரியம் தந்தார் அதிதி அசோக். பதக்கம் வெல்வார் என்கிற நம்பிக்கையில் கால்ஃப் விளையாட்டை அறியாதவர்கள்கூடப் பல மணி நேரமாக டி.வி. முன்பு உட்கார்ந்திருந்தார்கள்.

நெருக்கமாக முன்னேறிவந்து 4ஆவது இடம் பிடித்து பதக்கத்தை இழந்தார் அதிதி. தரவரிசையில் 200ஆவது இடத்திலிருக்கும் அதிதி முன்னணி வீராங்கனைகள் கொண்ட சுற்று வரை முன்னேறியதே அற்புதம்.

குதிரையேற்றம்

ஒலிம்பிக்கில் குதிரையேற்றம் என்கிற விளையாட்டு இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த விளையாட்டில் 20 ஆண்டுகள் கழித்து முதன் முறையாக இந்தியா சார்பில் களமிறங்கினார் பெங்களூருவைச் சேர்ந்த ஃபுவாத் மிர்சா.

அரையிறுதி வரை ஃபுவாத் மிர்சா முன்னேறி கடைசியில் 23ஆவது இடத்தைப் பிடித்து இந்த விளையாட்டில் நம்பிக்கை அளிக்கிறார் இந்த 20 வயது இளைஞர்.

தடகளம் - வட்டெறிதல்

தடகளம் வட்டெறிதல் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறி பெரும் நம்பிக்கை அளித்தார் கமல்ப்ரீத் கவுர்.

தேசிய அளவில் 66 மீ. எறிந்ததுதான் இவருடைய சாதனை. அதனால், பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிச் சுற்றில் 63.7 மீ. மட்டுமே வீசி 6ஆவது இடத்தையே பிடித்தார். ஆனால், இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாகக் கமல்ப்ரீத் கவுர் உயர்ந்தார்.

வில்வித்தை

பாரம்பரிய விளையாட்டான வில்வித்தை தனி நபர் பிரிவில் காலிறுதி வரை சென்று பெரும் நம்பிக்கையைக் கொடுத்தார் தீபிகா குமாரி. இதேபோல அவருடைய கணவர் அதானுதாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை முன்னேறினார்.

இதில் ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்ற தென் கொரியாவின் ஜின்-ஹய்க்கை வீழ்த்தியதும் அடங்கும். கணவன் - மனைவியான இருவருமே இந்த ஒலிம்பிக்கில் தோற்றாலும் மனங்களை வென்றனர்.

No comments:

Post a Comment