பார்ப்பனர்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 23, 2021

பார்ப்பனர்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏன்?

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது 'சமூகநீதி' என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இந்த சமூகநீதியை முதலில் தி.மு..வில் செயல்படுத்தியபின் ஆட்சியில் செயல்படுத்தலாமே!

சமூகநீதிக்கு விளக்கம் கூறும் முதல்வர் ஸ்டாலின், தி.மு..வில் அனைத்து ஜாதியினரும் தலைவராகலாம் என அறிவிப்பாரா?

மதம், ஜாதி, ஆண், பெண் என சுழற்சி முறையில் தி.மு.. தலைவர் பதவியைக் கொடுத்து, சமூகநீதியை நிலைநாட்டி முன்னுதாரணமாக விளங்கலாமே.... செய்வாரா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினை தி.மு.. தலைவராக்கினார். ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை தலைவராக்குகிறார். உதயநிதிக்கு அடுத்து அவரின் மகன் பதவிக்கு வருவார்.

இப்படி கருணாநிதியின் வாரிசுகள் மட்டுமே தி.மு.. தலைவர் பதவியில் இருப்பதற்கு பெயரும் "சமூகநீதி தானா?"

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால்  கடவுள் இருக்கிறார் என்பதை தி.மு.. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா? அக்கட்சியினர் கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவரா?

இனிவரும் தேர்தல்களில் ஜாதி பார்த்து தி.மு.. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட மாட்டார்கள் என, முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி கொடுப்பாரா?

முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. சமூகநீதியை முதலில் உங்கள் கட்சியில் காட்டுங்கள்; அப்புறம் கோவிலுக்கு வாருங்கள்.

உங்கள் முதுகில் உள்ள அழுக்கை துடைத்துவிட்டு, அதன் பின் ஊரை சுத்தம் செய்யுங்களேன்"

- இனமலரான 'தினமலரில்' (22.8.2021) வெளிவந்த கடிதம் இது.

தினமலர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் - இப்படித்தான் அறிவார்ந்த வகையில் பதில் கூற வக்கில்லாமல் ஏட்டிக்குப் போட்டியாக ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் சம்பந்தமில்லாமல் இடக்கு முடக்காகப் பேசி, எழுதி, தங்களின் அமாவாசை இருட்டுப் புத்தியினைக் காட்டிக் கொள்வார்கள்.

(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், தி.மு.. தலைவராக மதம், ஜாதி, ஆண், பெண் என சுழற்சி முறையில் தலைவராகலாம் என அறிவிப்பாரா? என்று ஏதோ புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டதாக  நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள்.

தி.மு..வில் இன்ன ஜாதிதான் தலைவராக வேண்டும் என்ற விதி முறை உண்டா?  இல்லையே, எந்த ஜாதியினரும் வருவதற்குக் கட்சியின் விதிமுறைகளில் தடையில்லையே!

ஆனால் கோயில்களில் அர்ச்சகராகப் பார்ப்பனர்கள் அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமேதான் அர்ச்சகராக முடியும் என்றுதானே உச்சநீதிமன்றம் வரை சென்று கூவுகிறார்கள்.

தி.மு..வில் எந்த ஜாதிக்காரரும் தலைவராகலாம். முதலமைச்சர் ஆகலாம். ஆனால் கோயிலில் அவ்வாறு அர்ச்சகராக ஆக முடியாது - இந்த அடிப்படை வேறுபாட்டைக்கூடப் புரிந்துகொள்ளாமல் - அல்லது புரிந்துகொண்டிருந்தும் குதர்க்கமாக, பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் பேதமையை அல்லது போக்கிரித்தனத்தை என் சொல்ல!

2) அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க ஆணை பிறப்பித்தவர்கள் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்களா என்று - அதிபுத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைப்பு.

'பாட்டா' செருப்புக் கடையில் பணியாற்றும் பார்ப்பனர்கள் செருப்புத் தைப்பார்களா? என்று கூட நாம் கேட்கலாமே.

ஓர் அரசு என்றால் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும், நம்பிக்கை யற்றவர்களுக்கும் சேர்த்துதான் எனும் பாலபாடம்கூட அறியாத அடி முட்டாள்களாக இவர்கள்?

(3) கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தலைவராகி விட்டார் என்று குற்றச்சாட்டு, "தூக்கிவிடும் பூனை எலி பிடிக்காது" என்பது பழமொழி. கலைஞரால் தூக்கி விடப்பட்டால்  மு. ஸ்டாலின் தலைவராகி விட முடியுமா?

'தகுதியுள்ளதுதான் நிலைக்கும்  (Survival of the Fittest) என்பது பால பாடம். இந்த இடத்துக்கு மு.. ஸ்டாலின் வருவதற்கு எவ்வளவுத் தொலைவைக் கடந்து வந்திருக்கிறார்.

இளைஞரணியிலிருந்து, கிளைக் கழகத்திலிருந்து அவர் வளர்ச்சி பரிணாம வளர்ச்சியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இதனையெல்லாம் புரிந்துகொண்டே கட்சியினரும் அவரைத் தலைமையிடத்தில் நிறுத்தி இருக்கின்றனர்.

ஒரு கட்சிக்குத் தலைவராக யார் வருவது என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய முடியும். 'தினமலர்'களுக்கு அது பற்றிய கவலை தேவையில்லை.

இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று அழைக்கும் பார்ப்பனர்கள், இந்து அமைப்பினர் (இதில் தினமலரும் அடங்கும்தான்) அங்கு மட்டும் தாழ்த்தப்பட்டவரும் வந்து சேர வேண்டும், கொடி பிடிக்க வேண்டும், விநாயகர் ஊர்வலத்தில் கூட்டமாக வர வேண்டும், கோஷம் போட வேண்டும். அதே இந்து மட்டும், இந்துக் கோயிலில் அர்ச்சகராக வர முடியாது - வரக் கூடாது - அப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பயிற்சி பெற்று இருந்தும் அர்ச்சகரானால், சாமி சிலை தீட்டுப்பட்டு விடும், ஏன் சாமி செத்துப் போய் விடும் என்று வைகனாச ஆகமம் கூறகிறது என்றால், இதன் பொருள் என்ன?

இந்துமதத்தில் கூலிப் பட்டாளமாக, பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் இருக்க வேண்டுமா? ஒரு கால கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள்ளேயே வழிபடக் கூட முடியாது என்று கூடத்தான் நிலை இருந்தது. அது மாற்றப்படவில்லையா? மாற்றம் என்பதுதான் மாறாதது.

பிராமண மதம், வேத மதம் என்பதுதான் இதற்குப் பெயர். வெள்ளைக்காரன் கொடுத்த பெயர்தான் ஹிந்து. (இதனைக் காஞ்சி சங்கராச்சாரியாரே ஒத்துக் கொண்டு இருக்கிறார்).

பார்ப்பன மதம் என்ற காரணத்தால் தான் - பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக ஆகக் கூடாது - கோயில் கர்ப்பக்கிரகம் அவர்களின் குருச்சேத்திரம் - ஆதிக்கபீடம் என்று  கருதுவதுதான் - அனைத்து ஜாதியினருக்கு அர்ச்சகர் என்ற நிலை வந்தவுடன், அலறுகிறார்கள் - பதறுகிறார்கள் - ஆவேசம் காட்டுகிறார்கள். இதன் மூலம் பார்ப்பனர்களின் உண்மைத் தன்மையினை - பார்ப்பனர் பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்தினை, கணிப்பினை இளைய தலைமுறையினரும் உணரும், அறியும் சந்தர்ப்பம் இப்போது கிடைத்து விட்டது. பார்ப்பனர்கள் இன்னும் அதிகமாகவே கத்தட்டும் - கதறட்டும்!

No comments:

Post a Comment