கலைஞரின் அய்ம்பெரும் முழக்கங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

கலைஞரின் அய்ம்பெரும் முழக்கங்கள்!

தலைவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதானாலும், நினைவு நாளை மய்யப்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்துவதாக இருந்தாலும் சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம் - பகுத்தறிவு இயக்கத்தைப் பொறுத்த வரையில் அது ஒரு பிரச்சார யுக்தியே!

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17 என்று சொல்லப்பட்டாலும் ஆண்டு முழுவதுமே தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது வழமையாகும்.

பிறக்காத கடவுளுக்கே பிறந்த நாள் விழா நடத்தும் போது - பிறந்த எனக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது என்று கேட்டவர் தந்தை பெரியார்.

அத்தகு நிகழ்ச்சிகளில் கடவுள்களுக்கு நவமி என்றும் அஷ்டமி என்றும் (பிறந்த நாள்) திருவிழா நடத்துவது குறித்தும் அந்தக் கடவுள்களின் பிறப்புகள் பற்றிப் புராணங்கள் கூறுவது குறித்தும் அதில்கூட ஒரு நாகரிகமான தன்மையின்றி ஆபாசமாகவும், காட்டு விலங்காண்டித்தன்மையுடன் இருப்பது குறித்தும் விரிவாகப் பேசி, மக்கள் மத்தியில் மூடத்தனத்தையும் தோலுரித்துக் காட்டுவார்.

ஆபாச விநாயகன் பொம்மையைக்கூட புத்த ஜெயந்தி அன்றுதான் நாடெங்கும் உடைக்கச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பார்ப்பனீயம் கடவுள் மதங்களில் வேர் கொண்டு எப்படிப் பெரும்பான்மையான மக்களை ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் விவரிப்பார்.

நம் தலைவர்களின் இத்தகு நாட்கள் கொள்கைப் பிரச்சார நாட்களே!

தந்தை பெரியார் 1973 டிசம்பர் 24 அன்று மறைந்த நிலையில், நாடெங்கும் "உறுதிமொழி" பொதுக் கூட்டங்களைத் தான் திராவிடர் கழகம் நடத்தியது. அன்னை மணியம்மையார் மறைந்ததையொட்டி "சூளுரை" பொதுக் கூட்டங்களையே நடத்தினோம்.

அந்த வகையில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் மறைந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. அவர்களை நினைப்பதற்கும் போற்றுவதற்கும் ஏராளமான தகவல்களும், நியாயமான காரணங்களும் தரவுகளும் ஏராளம் உண்டு.

இளைய தலைமுறையினர் அவரிடம் கற்க வேண்டிய - கற்று அது வழி நடக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு 'மாடல்' மாநிலம்என்ற கருத்து இப்பொழுதெல்லாம் அதிகமாகவே பேசப்படுகிறது.

அதற்குக் காரணம் என்ன? வேறு எந்த மாநிலத்திலும் தோன்றியிராத தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் இந்த மண்ணில்தான் உண்டு.

ஒரு நூற்றாண்டுக்கால அர்ப்பணிப்புப் பணிகளால் மிகப் பெரிய விழிப்புணர்ச்சி இங்கு ஆழமாக உரமாக ஓங்கி நிலை பெற்றுள்ளது.

இந்திய அளவில் எங்கும் பிற்போக்குத்தனங்களும், சமூக அநீதிகளும் தலை தூக்கினாலும் முதல் எதிர்ப்புக் குரல் வெடித்துக் கிளம்பும் மண் தமிழ்நாடு தானே!

இந்திய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி. இடஒதுக்கீடுக்கு - சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தாலும் சரி - தனியார் மயப் பொருளாதாரக் கொள்கை  நடவடிக்கையாக இருந்தாலும் சரி - தமிழ்நாடு தான் மற்ற மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் தன்மையில் எதிர்ப்புக் குரல் முழக்கமாக வடிவமைக்கிறது.

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் கொடுத்த முழக்கங்கள் அய்ந்து.

1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

2) ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

3) இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

4) வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

5) மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.

அண்ணாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் திருச்சியில் (3.2.1970) முத்தமிழ் அறிஞரின் முழக்கம் இது.

அண்ணா நினைவு நாளில் கலைஞர் முழக்கத்தை   - கலைஞரின் நினைவு நாளில் நினைவூட்டுவோம்!

மானமிகு - இல்லையேல் மாண்புமிகுவுக்கு  மதிப்பில்லை - என்ற மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களின் பண்பட்ட பொன்மொழியைப் புதுப்பித்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment