2021லும் இந்த தலைகுனிவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

2021லும் இந்த தலைகுனிவா?

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கலைச்செல்வி. அவரது உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (56) பணியாற்றி வருகிறார். கடந்த 6-ஆம் தேதி அன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட கோபிராசிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோபாலசாமி (38), தனது இடம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க கிராம நிர்வாக அலுவ லகத்துக்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபாலசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த முத்துசாமி, அரசு அதிகாரியை திட்டக் கூடாது என கோபாலசாமியிடம் கூறியுள்ளார். இரு தரப்பு வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, முத்துசாமியை வேலையில் இருந்து நீக்கி விடுவதாக கோபாலசாமி மிரட்டியுள்ளார்.  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். முத்துசாமி கோபாலசாமியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரி கதறி அழுதார். இதுதொடர்பான காட்சிப் பதிவு  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்சுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர்  விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம், மேட்டுப்பாளையம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெய் சிங் உள்ளிட்டோர் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்டோரை நேற்று (8.8.2021) அன்னூர் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், கோபாலசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353-இன் கீழ் (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவியாளர் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் கோபாலசாமி மீது இ.த.ச. பிரிவு 353, 506 (மி) (மிரட்டல் விடுத்தல்) மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோபாலசாமி தந்த புகார் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்."

சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஓடி விட்டன. குடியரசு அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 71 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் இந்தியாவில் குடிமகன் - அவன் பிறந்த குடும்பத்தை வைத்து ஜாதி முத்திரையைக் குத்தி கீழ்மைப்படுத்துகிறது - சுயமரியாதையைச் சூறையாடுகிறது என்பதை நினைத்தால் குருதி கொதிக்கிறது - நம்மை அறியாமலேயே நம் தலைகள் குனிகின்றன.

ஆண்டுதோறும் மனித உரிமை நாளைக் கொண்டாடுவது- சுதந்திர நாளில் சமபந்தி போஜனம் நடத்துவது - சுதந்திர நாளை, குடியரசு நாளைக் கொண்டாடுவது என்பவற்றில் மட்டும் குறைச்சல் இல்லை. 

குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவரை கொண்டு வந்து விடவில்லையா? என்று நம் முதுகை நாமே தட்டி 'சபாஷ்' போட்டுக் கொள்கிறோம்.

அதே குடியரசுத் தலைவரை - இந்தியாவின் முதல் குடிமகனை வடக்கே பிர்மா கோயிலிலும் பூரி ஜெகந்நாதன் கோயிலிலும் தடை செய்யவில்லையா? அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

குடியரசுத் தலைவருக்கே இதுதான் நிலை என்றால் கோவை மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிராம நல ஊழியர் ஒருவர் காலில் விழுந்தது- விழ வைத்தது எம்மாத்திரம் என்று சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்கள்.

வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச் சட்டத்தின் ஏட்டில் எழுதி வைத்தால் மட்டும் போதாது. தீண்டாமைக்கு மூலமான ஜாதியை ஒரு பக்கத்தில் சட்ட ரீதியாகவே காப்பாற்றிக் கொண்டு, அதன் எதிரொலியான தீண்டாமை ஒழிப்பு என்பது நிஜத்தை விட்டு, நிழலோடு சண்டை போடுவதல்லாமல் வேறு என்னவாம்?

இந்த நிதர்சனமான உண்மையைப் புறந்தள்ளி, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலைதான் இருந்து வருகிறது.

பட்டியலின மக்கள் அவமதிக்கப்படுவது என்பது அன்றாட செய்தியாக இருக்கிறது. 

தமிழ்நாட்டிலும் கூட கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்தில் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சரவணகுமார் அவர்களையும் மற்றொரு ஊராட்சி மன்ற உறுப்பினரையும் இவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் ஊராட்சித் துணைத் தலைவராக இருக்கக் கூடிய உயர் ஜாதி என்று கருதப்படக் கூடிய ஆசாமி தரையில் அமருமாறு பணித்த அவலமும் நடந்ததுண்டு. குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றவும் அனுமதிக்கப்படவில்லை என்பதெல்லாம் எத்தகைய அவலம் - சட்டமீறல். 

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் தொகுதி மக்களவை உறுப்பினர் ரஜ்வீர் சிங் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் உயர்ஜாதி உள்ளூர்க்காரர்களால் ஜாதி திமிர்க் காரணமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு, பிளாஸ்டிக் குவளையில் தேநீரும் அளிக்கப்பட்டது அப்பட்டமான ஜாதி ஆணவமும், சட்டமீறலும் ஆகும்.

ஜாதி தீண்டாமை என்பது மிகவும் வெளிப்படையாக - பட்ட வர்த்தனமாக, நிர்வாணமாக, தலைவிரி கோலமாக, தாண்டமாடுவது கோயில்களின் கருவறையாகும்.

இந்த மூலத்தில் கை வைத்தால் - தீண்டாமை நோயின் - ஜாதிக் கொடுமை என்ற நோயின் கரு கலைக்கப்பட்டு விடும்.

இந்த 2021லும் யாரோ எந்தக் காலத்திலோ தங்களுக்கு சாதகமாக - தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எழுதி வைத்தவற்றை (உண்மையைச் சொல்லப் போனால் கிறுக்கி வைத்தவற்றை) இன்றைக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என்று முயற்சிப்பது எந்த வகையில் மனித நாகரிகமும், மனிதநேயமும், மனித உரிமையுமாகும்?

வன் கொடுமைத் தடுப்பு சட்டம் போன்றவை இருந்தாலும், பட்டியல் இன மக்களின் பாதிப்பு கூச்ச நாச்சமின்றித்  தொடரத்தானே செய்கிறது.

அஸ்திவாரத்தில் கை வைத்து - மூலாதாரத்தில் கை வைத்து, ஆணி வேரில் கை வைத்து அழிப்பதற்கான - உண்மை நோக்கத்தோடு - திறந்த மனதோடு முயற்சிக்காமல் இலைகளையும், கிளைகளையும் வெட்டுவதால் யாது பயன்? நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்றுதான் பொருள்!

இந்தக் கோணத்தில் அரசியல் சமூக தலைவர்கள், அமைப்புகள் சிந்திக்கட்டும் - செயல்படட்டும்!


No comments:

Post a Comment