பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது

அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

கும்மிடிப்பூண்டி, ஜூலை 16  பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தபோதும் தமிழகத்தில் பேருந்துகட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியில் இயங்கிவரும் சாலை போக்குவரத்து நிறுவன பயிற்சி மய்யம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போக்குவரத்து 14.7.2021 அன்று துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  ஆய்வு செய்தார்.

மேலும் கும்மிடிப்பூண்டியில் புதிய பணிமனைக்கு இடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவின்படி, அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் நடைமுறையானது அமலுக்கு வந்ததால் பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 6 ஆயிரத்தில் இருந்து 7,291 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 700 பேருந்துகளில், தற்போது 15 ஆயிரத்து 627 பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படுகின்றன. அரசு விதித்துள்ள உத்தரவின்படி, குளிர்சாதன வசதி இல்லாமல் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 2 ஆயிரத்து 650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில், ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக்கழகத்தை சேர்ந்த 2,800 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து நகர பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகட்டணம் உயராது. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் விகிதம் ஒரு பேருந்துக்கு 2.92 என்று இருந்தது, தற்போது 2.62 என்ற விகிதத்தில் குறைந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, ஓட்டுநர், நடத்துநர்கள் குறைவாக உள்ளதை, முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பேருந்துகள் இயக்கப்படும்.

 இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment