ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லையா?

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலை கரோனா காலகட்டத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலை கரோனா கால கட்டத்தில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.   இதையொட்டி உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.   

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அமைச்சர் அந்த பதிலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது மாநில அரசுகள் அளித்த அறிக்கை மூலம் தெரிய வருவதாகக் குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசு கரோனா மரணங்களை எவ்வாறு வகைப்படுத்தித் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்ததாகவும், அதன்படி வழங்கப்பட்ட அறிக்கைகளைப் பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை என தெரிய வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிர் இழந்ததாக ஒவ்வொரு மாநிலமும் செய்திகளை வெளியிட்டிருந்தது.   அப்படி இருக்க, நாடாளுமன்றத்தில் அமைச்சர் இவ்வாறு அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல், மே நடுப்பகுதி வரை மேற்கு இந்தியாவின்  குஜராத், வட இந்தியாவின் டில்லி, உத்தரப்பிதேசம், அரியாணா, மத்தியப் பிரதேச, பீகார்  மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது.

குறிப்பாக தலைநகர் டில்லியில் உள்ள பல மருத்துவமனைகளும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும், தங்களுக்கு உதவும்படியும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து சாலைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்த உடல்கள். மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தவர்கள். உயிரிழந்தவர்களை எரிக்க இடமில்லாமல் சாலை ஓரங்களிலும் ரயில் தண்டவாளங்களின் ஓரத்தில் கிடக்கும் பழைய மரக்கட்டைகளின் மேலும் உடல்களைப் போட்டு எரிக்கும் காட்சிகள் தொடர்ந்து வெளியாகியது.

முக்கியமாக கங்கை யமுனை உள்ளிட்ட நதிகளில் 300-க்கும் மேற்பட்ட கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மிதந்துவந்தன, கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் அந்த உடல்களை கங்கைக் கரையில் புதைத்த அவலங்களும் அப்படி புதைக்கப்பட்ட சடலங்களில் உடலில் உள்ள துணிகளை அகற்றி அதைத் துவைத்து விற்பனைக்குக் கொண்டு சென்றகொடூரங்கள் அனைத்தும் பெரும்பான்மை ஊடங்களில் ஆவணமாக காட்சிப்படுத்தப்பட்டன.

 ஏப்ரல் 25 ஆம் தேதி மட்டும் டில்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்

 புதுடில்லியில் மே 1 ஆம் தேதியில் ஒரு மருத்துவர் உட்பட 12 கரோனா நோயாளிகள்  ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம்!

அய்தராபாத் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த 7 கரோனா நோயாளிகள் மரணமடைந்தனர். ஆக்சிஜன் விநியோகம் இல்லாததால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்

மாநிலத்தின் மிகப்பெரிய  மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மே மாதம் முதல்வாரத்தில்  மட்டும் 74 நோயாளிகள் மரணமடைந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாகக் கூட நள்ளிரவு 1 மணியில் இருந்து அதிகாலை 6 மணிக்குள் 13 பேர் மரணம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 4 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இப்படியாக செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டுள்ள ஒரு சூழலில் ஒரு கால கட்டத்தில் நாடாளுமன்றத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட மரணம் அடைய வில்லை என்று சொல்லுவது சரியானதுதானா?

மக்களில் பிரதிநிதிகள் அவையில் மாண்புமிகு அமைச் சர்கள் இப்படி எல்லாம் அறிவித்தால் நம்பகத் தன்மை என்பதை எங்கே போய்த் தேடுவதோ!

No comments:

Post a Comment