மாங்கு மகராச்சிய துக்க விடயங்கள் (ஆங்கிலத்தில்: சாவித்திரி பூலே மாணவி - முக்தா சால்வே!) தமிழில்: பேரா.க.கணேசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

மாங்கு மகராச்சிய துக்க விடயங்கள் (ஆங்கிலத்தில்: சாவித்திரி பூலே மாணவி - முக்தா சால்வே!) தமிழில்: பேரா.க.கணேசன்

முக்தா சால்வே - சாவித்திரி பூலேயின் மாணவி

வணக்கம். மிக முக்கியமான கட்டுரை. சுதந்திரமான கற்றல் செயல்பாடு எத்தகைய சிந்தனையாளரை உருவாக்கும் என்பதற்கு முக்தா சால்வே சிறந்த எடுத்துக்காட்டு.

இவரின் ஆசிரியர் சாவித்திரிபா பூலே, அவர்களின்  கற்றல்- கற்பித்தல் செயல்பாடு, இவை அனைத்தும் இன்றைய கல்வி யியல் விவாதத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்று நம்புகிறேன்.

குழந்தைப் பருவத்தில் இவ்வளவு வீரியத்துடன் எழுதி உள்ள இவர்,

பின்னர் என்ன ஆனார்?

இவரின் மற்ற படைப்புகள் என்ன ஆயின?

விடை தேட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்ற நம்பிக்கை உடன் இதைப் பகிர்கிறேன்.

பேராசிரியர் சச்சின் கருட் யின் கட்டுரையை ஆங்கிலத்தில் மூத்த கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அனுப்பி வைத்தார். இதை மொழி ஆக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தார்.

உடனடியாக பேராசிரியர் .கணேசன் கட்டுரையை தமிழில் பெயர்த்து அனுப்பி வைத்தார்.

உடன் இதை பரவலாக நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று முனைவர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் பணித்தார்.

இது தனி நபராக சாத்தியம் இல்லை. அனைவருடனும் பகிர்கிறேன்.

உழைக்கும் வர்க்கத்திடம் மிகுந்த நம்பிக்கையுடன்,

-பிரின்ஸ் கஜேந்திர பாபு

மிருகத்தைவிட கீழாக நடத்தப்பட்டு தீண்டாமையின் வலியிலும், வேதனையிலும் வாழ்ந்து வருகின்ற மகர், மாங்கு மக்களில் பிறந்த என்னைப் போன்ற தீண்டத்தகாத பெண்ணின் இதயத்தை கடவுள் நிரப்பியுள்ளார். அனைத்து உயிரினங்களையும் படைத்தவர் என் இதயத்தில் இடம் பெற்றிருப்பதால், அந்த வலிமையோடு இந்தக் கட்டுரையை எழுதத் துணிகிறேன்.

மாங்குகளையும், மகர்களையும் படைத்த அதே கடவுள்தான் - “பிராமணர்களையும் படைத்துள்ளார். அவர்தான் எனக்கு எழுதும் வல்லமையை அளித்துள்ளார். எனது உழைப்பை அவர் ஆசீர்வதிப்பதோடு அதற்கான மகிழ்ச்சி நிறைந்த பலனைக் கொடுப்பார்.

வேதங்களின் அடிப்படையில் நாம் மறுக்க முயற்சி செய்தால், தங்களை உயர்ந்த பிறவிகளாகக் கருதிக் கொள்ளும் மேலாதிக்க பிராமணர்கள் வேதங்கள் தங்களுக்கு கட்டுப்பட்டது என்றும் அவர்களுக்கே உரித்தான சொத்து என்றும் வாதிடுகிறார்கள். இப்போது வெளிப்படையாகவே சொல்வதானால் வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்றால், அவைகள் நம்மைப் போன்ற தீண்டாதாருக்கு இல்லை என்பது பளிச்செனத் தெரிகிறது.

வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டும் தானென்றால், நமக்கு எந்த நூலும் இல்லையென்பது வெளிப்படையான உண்மை. நாம் எந்த நூலையும் எந்த மதத்தையும் நாம் பெற்றிருக்கவில்லை என்பது திறந்தவெளி உண்மையாக ஆகிறது. நமக்கென்று எந்த மறைநூலோ எந்த மதமோ இல்லை என்பதே உண்மை.

வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டும் என்றால், அந்த வேதங்களின்படி நாம் அந்த வேதக் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆக மாட்டோம். அவர்களின் வேதநூல்களை கண்ணால் பார்த்துவிட்டாலே பிராமணர்களின் குற்றச்சாட்டுப்படி

(மனுஸ்மிருதி சட்டப்படி) நாம் கடுமையான பாவம்செய்தவர்கள் என்றால், நாம் அவற்றைப் பின்பற்றுவது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமன்றோ?

முஸ்லிம்கள் தங்கள் குரானின்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள், ஆங்கிலேயர்கள் பைபிளை பின்பற்றுகிறார்கள். பிராமணர்கள் தங்களின் சொந்த வேதங்களைக் கொண்டுள்ளனர். அவர்களெல்லாம் அவரவருக்கென்று வைத்திருக்கும் அவை நல்லதோ அல்லது கெட்டதோ மதநூலைப் பின்பற்றுகிறார்கள்.

எந்த மதமும் இல்லாத எங்களைவிட அவர்கள் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். .. கடவுளே எங்களுக்கான மதம் எதுவென்று சொல்வாயாக!

கற்றுக் கொடு மதமே!, உனது உண்மையான மதம் எதுவென்று சொன்னால் அதன்படி நாங்கள் நடக்க ஏதுவாக இருக்கும்! ஒரு மதம் முன்னுரிமை கொண்ட ஒரு சிலருக்கு (பிராமணர்களுக்கு) முன்னுரிமையையும் பிற அனைத்து சாராருக்கும் மறுக்கப்பட்டால் அது பூமியிலிருந்தே அழிந்தொழிந்து போகட்டும். இது போன்ற பாரபட்சத்தை அதிகப்படுத்தும் மதத்தைப் பற்றி பெருமை கொள்ள இது ஒருபோதும் நம் எண்ணத்தில் நுழையக் கூடாது.

மாங்குகளையும் மகர்களையும் எங்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டி விட்டு, பெரிய அளவு கட்டடங்களை கட்டுவதற்கு அந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் மாங்குகள் மற்றும் மகர்களுக்கு, சிவப்பு ஈயத்துடன் கலந்த எண்ணெயைக் குடிக்க கொடுத்து இந்த மக்களை அவர்களின் கட்டடங்களின் அடியில் புதைத்து விடுவார்கள். ஏழை மக்களின் தலைமுறையே இல்லாமல் துடைத்தெறிவார்கள்.

பிராமணர்கள் எங்களை வர்ணாஸ்ரம அடுக்கில் மிகவும் கீழ்நிலையில் தாழ்த்தி வைத்தனர். பசுமாட்டுக்கும் எருதுகளுக்கும் கீழே அவர்கள் எங்களைக் கருதினர்.

பாஜிராவ் பேஷவா ஆட்சிக் காலத்தில் அவர்கள் எங்களை கழுதைகளுக்கும் கீழே கருத வில்லையா? “ நீங்கள் ஒரு நொண்டிக் கழுதையை அடித்து விட்டீர்கள்என்று சொல்லி ஒடுக்கப்பட்டோருக்கு எஜமான் பதிலடி கொடுத்தான். ஆனால் மகர்களையும் மாங்கு களையும் பாதையில் வீசுவதை மறுப்பதற்கு (தடுப்பதற்கு) யார் முன் வந்தார்கள்? பாஜிராவின் ஆட்சியில் மாங்குகளும் மகர்களும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு முன் கடந்து போக நேர்ந்துவிட்டால், (விளையாட்டுக் கூடம் தீட்டுப்பட்டதென்று) அவர்களின் தலையை வெட்டி மைதானத்தில் வாள்களை மட்டையாகவும், வெட்டப்பட்ட தலையை பந்தாகவும் அடித்து விளையாடினார்கள். அவர்களின் (பிராமணர்களின்) வாசல் கதவுகளைக் கடக்க நேரும்போது கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டு கொடுமைகளைச் சந்திக்கும்போது , கல்வி பெறுவது , கற்றுக்கொள்ள விடுதலை பெறுவது என்ற கேள்விக்கு இடமிருக்கிறதா? மாங்கு மகர்களில் எவராவது ஒருவர் எப்படியாவது எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள் என்று பாஜிராவின் கவனத்திற்குச் செல்லும்போது. “அவர்கள் கல்வி பெறுவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? மாங்கு, மகர்கள் கல்வி பெற்றுவிட்டால் பிராமணர்களின் வேலையைப் பறிப்பதாகும்  என்று கூறினார்.

இந்தத் தீண்டத்தகாதவர்கள், பிராமணர் தமது அலுவலக அதிகாரப் பணிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சவரக் கத்தி களைக் கொண்டு விதவைகளின் தலைகளை மொட்டையடிக்கச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?” என்று கேட்டார். இந்தத் தீண்டாமைப் பாகுபாட்டு கண்ணோட்டத்தோடு அவர்களைத் தண்டிப்பார்.

இரண்டாவதாக பிராமணர்கள் எங்களைக் கல்வி கற்பதிலிருந்து தடுப்பதில் திருப்திப்பட்டுக் கொண்டார்களா?  இல்லவே இல்லை. பாஜிராவ் காசிக்குச் சென்று அங்கு கேவலமான முறையில் மரணம் அடைந்தார், ஆனால் இங்கு மகர்கள் மாங்குகளைவிட குறைவான தீண்டத்தகாதவர்கள். மகர்கள் மாங்குகளின் நிறுவனங்களைத் தவிர்த்தனர். மகர்கள் பிராமணிய குணாதிசயங்கள் சிலவற்றைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களை மாங்குகளைவிட உயர்வானவர்களாகக் கருதுகின்றனர். அவர்கள் மாங்குகளின் நிழலால்கூட மாசு படுவதாக எண்ணுகின்றனர். (மகர்கள் மாங்குகள் இருசாராரும்) தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதை எண்ணி நாம் வேதனைப் படும்போது  மகர்கள் தங்களை மேலானவர்களாகக் காட்டிக் கொள்ள புனிதமான(புனிதமென்று பிராமணர்கள்)சொல்லக்கூடிய) உடைகளை உடுத்திக் கொண்டு இங்குமங்கும் அலைகின்ற அவர்கள் கல்நெஞ்சம் கொண்ட பிராமணர்கள். நம்மீது இரக்கத்தின் ஒரு உற்சாகத்தைக் கூட உணர்கிறார்களா?

நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்றே எங்களுக்கு (வயல் வெளிகளில்வேலை) யாரும் வேலை கொடுப்பதில்லை. வருமானமும் கிடைப்பதில்லை. வறுமையின்பிடியில் வேதனையோடு உழல் கின்றோம்.

கற்ற பண்டிதர்களே, உங்கள் சுயநல சாமியாரை மடக்கி, உங்கள் வெற்று அறிவின் தந்திரத்தை  நிறுத்திவிட்டு, நான் சொல்வதைக் கேளுங்கள். நமது பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது தலைக்கு மேல் கூரை கூட இல்லாமல் மழையிலும் குளிரிலும் எப்படி வேதனைப் படுகிறார்கள். உங்களின் சொந்த அனுபவத்திலிருந்தாவது புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

பிரசவத்தின்போது  ஏதாவது நோய் வந்தால் , மருத்துவம் மற்றும் மருந்துச் செலவுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?  அப்படிப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் அளவுக்கு மனிதராக இருந்த எந்த மருத்துவரும் உங்களிடையே இருந்தாரா?

 பிராமணக் குழந்தைகள் மாங்கு மகர் குழந்தைகள் மீது கற்களை வீசி காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் ஒருபோதும் புகார் அளிக்கத் துணிய மாட்டார்கள். காரணம், பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் இருக்கும் பழைய உணவை வாங்க வேண்டிய கெட்டவாய்ப்பான நிலைமையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதால், அவர்கள் அமைதியாகப் பாதிக்கப் படுகிறார்கள்.

அய்யோ! கடவுளே இது என்ன வேதனை? இந்த அநீதியைப் பற்றி மேலும் எழுதினால் கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது. இத்தகைய ஒடுக்குமுறையின் காரணமாக இரக்கமுள்ள கடவுளும் இந்த நற்பண்புள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை எங்களுக்கு வழங்கியுள்ளார். இந்த அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு தணிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

முன்னதாக கோகலே, அபேட், திரிம்காஜி, அந்தாலா, காலே, பெஹ்ரே போன்றவர்கள் (அனைவரும் பிராமண ஒட்டுப் பெயர் களைக் கொண்டவர்கள்) அவர்களின் வீடுகளில் எலிகளைக் கொல்வதற்குக்கூட தைரியம் இல்லாதவர்கள். எங்களைத் துன்புறுத்தினார்கள். எந்தக் காரணமும் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்களைக் கூட காப்பாற்றவில்லை. இப்போது அது நிறுத்தப்பட்டிருக்கிறது. பூனாவில் பேஷ்வா ஆட்சியின்போது மகர்களும் மாங்குகளும் துன்புறுத்தப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் வழக்கமான செயல்பாடாக இருந்தது. இப்போது அதுவும் கூட நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போது கோட்டைகளின் மற்றும் மாளிகைகளின் அடித்தளத்திற்காக மனித தியாகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போது நம்மை எவரும் உயிரோடு புதைப்பதில்லை.

இப்போது நமது மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிகரித் துள்ளது. முன்னதாக மகரோ அல்லது மாங்கோ மிக அழகான உடையணிந்தாலோ, இந்த வகை துணிகளை பிராமணர்கள் மட்டுமே உடுத்த முடியும் என வாதிடுவார்கள். மாங்கு மகர்கள் நல்ல துணிகளை அணிந்திருப்பதைப் பார்த்தால் அதை அவர்கள் திருடி விட்டார்கள் என்று அவர்கள்மீது குற்றும் சுமத்தினார்கள். தீண்டத்தகாதவர்கள் உடம்பைச் சுற்றி துணி அணிந்திருந்தால், அவர்கள் மதப் புனிதம் கெட்டுவிட்டதாகக் கருதி அவர்களை மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் அளவு அவர்களின்(பிராமணர்களின்) மதம் கூட ஆபத்தானது. ஆனால் பிரிட்டிஷாரின் ஆட்சியில் கையில் பணம் வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் விருப்பப்பட்ட துணிகளை வாங்கி உடுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக, உயர் ஜாதியினருக்கு எதிரான எந்தவொரு தவறான செயலுக்கும்  குற்றமிழைத்த தீண்டத்தகாதவர்களின் தலையை துண்டிக்க வேண்டும். இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அதிகப்படியான வரி மற்றும் சுரண்டல் வரி நிறுத்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீண்டாமை நடைமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது. விளையாட்டு மைதானங்களில் கொலை செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போது மக்கள் கூடும் இடமான சந்தைகளுக்கும் கூட செல்ல முடிகிறது. ஒருசார்பற்ற பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இதுபோல் பல விஷயங்கள் நடந்துள்ளன. இவற்றை நான் எழுதும்போது, நான் மேலே குறிப்பிட்டதைப் போல எங்களை அழுக்கு போல நடத்திக் கொண்டிருந்த பிராமணர்கள், நம்முடைய வேதனைகளிலிருந்து நம்மை விடுவிக்க விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  எல்லா பிராமணர்களும் இல்லை. சாத்தானின் செல்வாக்கு செலுத்தப்பட்டவர்கள் முன்பு போலவே நம்மை வெறுப்பதை தொடர்கிறார்கள். எங்களை விடுவிக்க முயற்சி செய்யும் பிராமணர்களை அவர்கள் குறிவைக்கிறார்கள். சில உன்னத மனிதர்கள் மகர்களுக்கும் மாங்குகளுக்கும் கருணையுள்ள பிரிட்டிஷ் அரசின் துணையோடு பள்ளிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

       , மகர்களே! மாங்குகளே!  நீங்கள் ஏழை மற்றும் வறுமை நோய்வாய்ப்பட்டவர்கள். அறிவு மருந்து ஒன்றே உங்களின் வறுமை மற்றும் அடிமை நோயை குணமாக்கும். அந்த அறிவு மருந்தே அறியாமையிலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் உங்களை விடுவிக்கும். நீங்கள் நீதிமான்களாகவும், தார்மீக உரிமை பெற்றவர் களாகவும் ஆவீர்கள். இது சுரண்டலை தடுத்து நிறுத்தும். மிருகங் களைப் போல நடத்திய மக்கள் இனி அப்படி நடத்தத் துணிய மாட்டார்கள். ஆகவே நீங்கள் தயவு செய்து கடின உழைப்பை செலுத்துங்கள், படியுங்கள். கடின உழைப்போடு படித்து நல்ல மனிதர்களாகுங்கள். ஆனால் என்னால் இதை நிரூபிக்க முடியாது. உதராரணமாக  என்னதான் நல்ல கல்வியைப் பெற்றவர்கள் கூட சில நேரங்களில் மிகத் தீய செயல்பாடுகளில் ஈடுபட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள்.

இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரி பூலேயின் மாணவி  14 வயது முக்தா சால்வே மராத்தியில் எழுதிய கட்டுரை. 1855இல்(166 ஆண்டுகளுக்கு முன்) சாவித்திரிபூலே, ஜோதிராவ்பூலே ஆகிய இருவரும்த்யானோதயாஎன்ற மராத்தி இதழில் வெளியிட்டபடைப்பை 2008இல் பிரஜ்ரஞ்சன்பாமணி, பமிளாசர்தார் இருவரும் ஆங்கிலத்தில்  A forgotten  Liberator: The life and struggle of Savithiri Phule என்று தொகுக்கப்பட்ட நூலில்இடம் பெற்றது. Source: FORWARD PRESS/ Dated February 15, 2020


 

 

 


No comments:

Post a Comment