தவறான பத்திரங்களை பதிவு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

தவறான பத்திரங்களை பதிவு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 28- தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யும் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று (27.7.2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பத்திரப் பதிவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, தவறான பத்திரங்களை எழுதி பதிவு செய்யும் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். மேலும் பத்திரப்பதிவு சேவை மய்யத்திற்கு வந்த புகார்கள் மீது ஒரு மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது என்றும் இதுவரை கிடைத்த 5 ஆயிரம் புகார்களில் 2,500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

77.43 அடியாக உயர்வு

சேலம், ஜூலை 28- சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கருநாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75.34 அடியாக இருந்த நிலையில் இன்று 77.43 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 34,141 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 34.44 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. கருநாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணைக்குக் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும்

12 அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை, ஜூலை 28 தமிழ்நாடு முழுவதும் 12 அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் 12 அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ரயில்வே தலைமை காவல் இயக்குநர் சுமீத் சரண், ஊர்க் காவல்படைக்கும், பொருளாதார குற்றப்பிரிவு தலைமை காவல் இயக்குநர் தினகரன், சிலை தடுப்பு பிரிவுக்கும், திருச்சி ஆயுதப்படை துணைக் காவல் இயக்குநர் கயல்விழி, சென்னை காவல்துறை பயிற்சி துணைக் காவல் இயக்குநராகவும், திருவாரூர் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளராவும், இந்த பதவியில் இருந்த ரவளி பிரியா தஞ்சாவூர் காவல் துறை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஅய்டி சிறப்பு பிரிவு எஸ்பி விஜயகுமார், திரு வாரூர் மாவட்ட எஸ்பியாகவும், தஞ்சாவூர் எஸ்பி தேஷ் முக் சேகர் சஞ்சய், ராணிப்பேட்டை எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் எஸ்பியாகவும், அடையாறு துணை அணையர் விக்ரமன், சிபிசிஅய்டி சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு பிரிவு எஸ்பி தேவராணி, சைபர் கிரைம் எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த அருண் பாலகோபாலன், மவுண்ட் துணை கமிஷன ராகவும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்பி சியாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

சென்னை, ஜூலை 28- பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேனாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கியது. இதன்படி கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன், அங்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்றுடன் (ஜூலை 28ஆம் தேதி) பரோல் முடிவடைய இருந்தநிலையில், பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடுஅரசு இன்று அறிவித்தது.

No comments:

Post a Comment