சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களா?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை,ஜூலை30- சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென்று எந்தக் கடவுளும் கேட்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபாதைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் கடைகளை அகற்றக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவ ராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (29.7.2021)  நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி. தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,

பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை பயன்படுத்தி அதன் அருகிலேயே நடைபாதை கடைகளும் ஆக்கிரமித்து விடுகின்றன. எனவே ஓட்டேரி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் கோயில்களை அகற்ற உத்தரவிட வேண்டும்என்று கூறி அதற்கான ஒளிப்படங்களையும் தாக்கல் செய்தார்.  மேலும் உயர் நீதிமன்றத்தின் வெளியே நடை பாதையை ஆக்கிர மித்து அமைக்கப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தர வுப்படி அகற்றப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட வேண்டுமென எந்த கடவுளும் கேட்பதில்லை. ஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையில் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமேஎன வேதனை தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment