கரோனாசோம்னியா: தொலையும் தூக்கம்... மீட்கும் வழிகள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 26, 2021

கரோனாசோம்னியா: தொலையும் தூக்கம்... மீட்கும் வழிகள்...

பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் பலருக்குத் தூக்கம் சரிவரக் கிடைப்பதில்லை. இந்தியாவில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் பல ஆண்டுகளாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டுவருகின்றனர்.

தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் சூழலில்தான், கரோனா பெருந் தொற்று கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. கரோனாவால் ஏற்படும் மன அழுத்தம், கவலை, பதற்றம், அன்றாட வாழ்க்கையில் அதன் தாக்கம் ஆகியவற்றால் தூக்கமின்மையின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த கரோனா காலத்தில் பத்தில் நால்வர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. கரோனா காலத்தில் அதிகரிக்கும் இந்தத் தூக்கமின்மையை மருத்துவ வல்லுநர்கள் கரோனாசோம்னியா என்கின்றனர்.

கரோனாசோம்னியா என்றால் என்ன?

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கும் தூக்கக் கோளாறுகள், மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் கவலை உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்டு கரோனாசோம்னியா வகைப்படுத்தப்படு கிறது. பொதுவாக மனக் கவலை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவை தூக்கமின்மையுடன் (இன்சோம்னியா) தொடர்புடையவை. அதேநேரம் வழக்கமான தூக்கமின்மையிலிருந்து கரோனா சோம்னியா பெருமளவு வேறுபடுகிறது. கரோனாசோம்னியாவின் அறிகுறிகள் பெருந்தொற்றுக் காலத்தின்போது பலருக்கு ஏற்பட்டுள்ளன அல்லது தீவிரமடைகின்றன.

கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மை, மனநலக் கோளாறுகள் ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் ஆவணப் படுத்தியுள்ளன. கரோனா தொற்று நோய்க்கு முன்னர், 24 சதவீதத்தினரே தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டனர். கரோனா பெருந்தொற்றின்போது, அது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் தூங்கும் பழக்கமும் மாறிவிட்டது. பெரும்பாலானோர் இரவில் குறைவாகவும் பகலில் அதிக நேரமும் தூங்குகிறார்கள். இரவில் தூங்கத் தொடங்கும் நேரம் 39 நிமிடங்களும் காலையில் விழிக்கும் நேரம் 64 நிமிடங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கரோனா நோயாளிகளில்

மூச்சுத் திணறல், தொடர் இருமல் போன்ற கரோனாவின் அறிகுறிகளால், கரோனா நோயாளிகளுக்குத் தூக்கமின்மை ஏற்படும் சாத்தியம் உண்டு. 75 சதவீத கரோனா நோயாளிகளுக்குத் தூங்குவதில் சிக்கல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுகாதாரப் பணியாளர்களுக்கு

கரோனா வைரஸ் தொற்றை நேரடியாகக் கையாள வேண்டிய சூழலில் சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதால், கரோனாவின் தாக்குதலுக்குத் தாம் உள்ளாகிவிடுவோமோ என்கிற அதீத அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அத்துடன் அதிக வேலைப்பளுவும் மன அழுத்தமும் சேர்வதால், மருத்துவ ஊழியர்களில் 80 சதவீதத்தினர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. கோவிட்-19 நோயாளிகளுடன் நேரடியாக வேலை செய்யாதவர் களைவிட, இது இரு மடங்கு அதிகம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களுடன் ஒப்பிடுகையில், சுகாதாரப் பணியாளர்கள் கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட மனநலப் பாதிப்புகளுக்கு இரு மடங்கு உள்ளாகின்றனர். மனச்சோர்வு உள்ளவர்களுக்கு, தூக்கமின்மை ஆபத்து இரு மடங்கு அதிகம். தூக்கம் போதாமை, சுகாதாரப் பணியாளர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகளைச் சீர்குலைக்கிறது; செயல்திறனைப் பாதிக்கிறது. அவர்களுக்குத் தொற்றுநோய் எளிதில் தாக்கக்கூடிய அபாயத்தை இது ஏற்படுத்துகிறது. அவர்களின் வேலைத் திறனையும் இது குறைக்கிறது.

மாணவர்களுக்கு

கரோனாசோம்னியாவின் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களும் இளைஞர்களும் பெரியவர்களைவிடத் தீவிர அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்கின்றன ஆய்வுகள். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மாணவர்கள் தூங்கத் தொடங்கும் நேரம் 39 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது, இளம் பருவத்தினரின் சராசரி தாமதத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம். மறுநாள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க சீக்கிரமாகவே விழிக்க நேரும்போது, போதுமான தூக்கம் கிடைக்காத சூழல் ஏற்படும். மேலும், கரோனாசோம்னியா மாணவர்களின் மன ஆரோக்கியத்தையும் அதிகமாகப் பாதித்துள்ளது. மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவர்களின் சதவீதம், கரோனாவுக்கு முன்பான நிலையிலிருந்து அதிகரித்திருக்கிறது.

காலத்தின் கட்டாயம்

கோவிட்-19 அன்றாட வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும், முக்கியமாகத் தூங்கும் வழக்கத்தை மாற்றியமைத்துள்ளது. இன்று நம்முடைய தூக்கம்-விழிப்பு சுழற்சி சீர்குலைந்து, ஆழ்துயில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வின் வளமையும் உடல்நலத்தின் மேன்மையும் மனநலத்தின் செழுமையும் மூளையின் செயலாற்றலும் பேரளவு தூக்கத்தையே சார்ந்துள்ளன. ஆரோக்கியமான வாழ்வுக்குத் தினமும் இரவில் பெரியவர்கள் எட்டுமணிநேரமும், சிறியவர்கள் பத்துமணி நேரமும் தூங்க வேண்டும்.

நமது உடலின் ஓய்வுக்கும் புத்துணர் வுக்கும் முறையான, தரமான தூக்கம் அவசியம். நாம் தூங்கும்போதுதான் நம் நினைவுகளை மூளை ஒருங்கிணைக்கிறது. உடலானது தனது செயல்களைத் தளர்த்தி ஓய்வெடுக்கிறது. ஆற்றலைச் சேமிக்கிறது. இந்த ஆற்றலே மறுநாளை நாம் எதிர் கொள்வதற்கான உந்துதல் சக்தியை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment