தேர்தல் காலப் பேச்சு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 6, 2021

தேர்தல் காலப் பேச்சு!

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பா... ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் மிகவும் குறியாக இருக்கின்றது.

.பி. முதல் அமைச்சர் சாமியார் ஆதித்யநாத் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மீண்டும்  பா... ஆட்சிக்கு வருவது முயற்கொம்பே என்ற நிலை உள்ளது.

.பி.யில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த நிலையில் முஸ்லிம்களைத் தாஜா செய்யும் வகையில் பல தந்திரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

அதில் ஒன்றுதான் முஸ்லிம்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் (சர் சங் ஜாலக்) மோகன் பாகவத் முஸ்லிம்கள்மீது காருண்யம் பொங்க உருகி உருகிப் பேசி இருக்கிறார்.

நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இஸ்லாமியர்களை கூறுவோர்  ஹிந்துக்கள் என தங்களை சொல்லிக் கொள்ளத் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்.

இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்னும் அச்சத்தை உருவாக்க ஒரு சிலர் நினைக்கின்றனர்.   ஆனால் இஸ்லாமியர்கள் இது போன்ற தவறான பரப்புரையை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.   இஸ்லாமியர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்கள் பசு பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்னும் கருத்து உள்ளது.  இதனால் ஒரு சிலர் அவர்களைத் தாக்கி வருகின்றனர்.  மாடுகளின் நன்மைக்காக மனிதர்களைத் தாக்குவது ஹிந்துத்துவாவுக்கு  எதிரானதாகும்.   மொத்தத்தில் நாம் அனைவருமே இந்தியர்கள் என்னும் மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டும்எனத் தெரிவித்துள்ளார்.

 உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிக இஸ்லாமிய வாக்குகள் உள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம் தான், இந்த நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தற்போதைய முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தை நீக்குவோம் என்று பாஜக டில்லி தலைவர்கள் மக்களிடையே மறைமுகமாக சொல்லிவருகின்றனர். அதே போல் இஸ்லாமிய வெறுப்பை கக்கும் பாஜகவினரிடமிருந்து தனித்து காட்டிக்கொள்ள மோகன்பாகவத் தானே களமிறங்கி உள்ளார். மோகன் பாகவத்தைப் பொறுத்தவரை முதல் மற்றும் இரண்டாம் பாஜக ஆட்சியில் முழுக்க முழுக்க தனது பலத்தைக் கட்டி வருகிறார்.

அமைச்சர்கள் முதல் உயரதிகாரிகள் வரை மாதம் ஒருமுறை அறிக்கை கொடுக்கும் அளவிற்கு அவர் டில்லி அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார். உத்தரப் பிரதேச தேர்தலை மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்திற்கு மக்கள் கொடுக்கும் சான்றிதழாக பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. ஆகவே உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக எப்போதும் இல்லாத பெரும்பான்மையை பிடிக்க இப்போதிருந்தே தயாராகி வருகிறது என்பதற்கு மோகன் பாகவத் பேச்சு, உத்தரப் பிரதேசத்திற்கு 85 லட்சம் ரூபாய் செலவு செய்து ரயிலை மாளிகை போல் மாற்றி குடியரசுதலைவர் பயணம் செய்தது போன்றவைகள் சான்றுகளாக உள்ளன.

 பா... சங்பரிவார்களின் தேர்தல் நேரத்துப் பேச்சுகளை நம்பி ஏமாறும் அளவுக்கு அம்மாநில சிறுபான்மையினர் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.

கடந்த காலங்களில் நடந்த வன்முறைப் பேச்சுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

 குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஹமீத் அன்சாரியை, இந்தியாவிலிருந்து வெளியேறி, பாதுகாப்பாகக் கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம் என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதுண்டே!

முன்னதாக, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள், மாட்டிறைச்சி தடை, தாய் மதம் திரும்புவதற்கான பிரச்சாரங்கள் ஆகியவை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றும், இதனால் அவர்கள் அச்சத்தோடு வாழ்கின்றனர் என்றும், குடியரசு முன்னாள்  துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாத்ரியில் பசுவதை செய்ததாக கிளம்பிய வதந்தியால் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் சிறியவை; அவற்றைப் பெரிதுபடுத்தாமல் ஹிந்துக் கலாச்சாரத்தை சிதையாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறுகிறார்.

அவர் நாக்பூரில் நிகழ்த்திய தசரா நிறைவு உரை இந்த ஆண்டும் நேரடியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அரசு தொலைக்காட்சியில் ஒரு மத அமைப்பின் தலைவரின் உரை நேரடியாக சென்ற ஆண்டு ஒளிபரப்பானபோதும் எதிர்ப்பு ஏற்பட்டது.  தனது உரையில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை புகழ்ந்து பேசினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான 'பசு ரக்ஷா தள்' இதுவரை குற்றவியல் ஆவணப்பதிவுகளின் படி 240-க்கும் மேற் பட்டோரை படுகொலை செய்திருக்கிறது.

 இதில் 2015-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட முகமது அக்லாக், 2016-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பஹேலுகான், ஜார்க்கண்டில் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஜவேத் அன்சாரி எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது,

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகளான பஜ்ரங் தள், விசுவ ஹிந்து பரிஷத் போன்றவை குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை மாநகராட்சி உரிமம் பெற்றவர்கள் உரித்த போது அவர்களை அடித்து பல கிலோ மீட்டர் அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றதும் இவர்கள் தான்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பே மாட்டிறைச்சிக்கு தடை வேண்டும் என்று கூறி சுதந்திரத்திற்குப் பிறகு டில்லியில் பெரிய வன்முறையாட்டம் நடத்தியது.

பசுவதைத் தடை சட்டம் கோரி ஒரு பட்டப் பகலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவர்களைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் யார்? யார்? காலம் கடந்ததால் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணமா?

குடியுரிமை திருத்த சட்டம் (சி...) முஸ்லிம் மக்கள் மனதில் எத்தகைய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது; காஷ்மீர்ப் பிரச்சினை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

முஸ்லிம்கள் குடியுரிமையின்றியும் வாழத் தயாராக இருக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். குருநாதரின் கோட்பாட்டைக் கிழித்துதெறிந்து விட்டார்களா? சிறுபான்மை மக்களே உஷார்! உஷார்!

No comments:

Post a Comment