திண்டுக்கல் மண்டல திராவிடர் கழக காணொலி வழி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

திண்டுக்கல் மண்டல திராவிடர் கழக காணொலி வழி கலந்துரையாடல் கூட்டம்

பெரியார் பிஞ்சு இதழுக்கு  320 சந்தாக்கள் வழங்குவதாகவும் -

தலைவர்களின் சிலைகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றம்

திண்டுக்கல், ஜூலை 28- திண்டுக்கல் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21.07.2021 அன்று மாலை 6 மணியளவில் காணொலி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மண்டல தலைவர் நாகராஜன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். திண்டுக்கல் மண்டல இணைச்செயலாளர் காஞ்சித்துரை வரவேற்புரை யாற்றினார்.

கழக அமைப்புச் செயலாளர் மதுரைசெல்வம் உரை

திராவிடர் கழக அமைப்புச்செயலாளர் மதுரை செல்வம் கலந்துகொண்டு தமிழர் தலைவர் அவர்களின் அயராத உழைப்பு - அதனால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறியும், பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு உழைத்த அத்தனை தோழர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தும், தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டிய அவசியத்தை குறித்தும், பெரியார் பிறந்த நாள் விழாவினை விளம்பரப்படுத்திட சுவரெழுத்து விளம் பரத்தை அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக செயல் படுத்திடவும், பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தாக்களை சேர்த்திடவும் பல்வேறு செயல்பாடுகளை எடுத்துக்கூறி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.

பொதுச்செயலாளர் தஞ்சை  இரா.ஜெயக்குமார் உரை

இக்கூட்டத்தில்  திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ணங்கள் செயல் பாடுகள் அனைத்தும் நாம் அனைவரும் அறிந்தது தான். நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மன நிறைவு பெற்ற ஒரு நிகழ்வு என்றால் அது பெரியாரியல் பயிற்சி வகுப்பு தான். இந்த நிகழ்வில் ஆசிரியர் மட்டுமல்ல அனைத்து கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்துள்ளனர். தஞ்சையில் கழக பொறுப்பாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இயக்க வரலாற்றிலேயே பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஒரு பொன்னேடு என்று சொன்னார்கள். இவ்வாறு சிறப்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் திண்டுக்கல் மண்டலத்தில்  ஒவ்வொரு நாளும் 60 மாண வர்களுக்கு குறையாமல் பயிற்சி பெற்றனர். அதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு முழுவதும் கலந்துகொண்ட மாண வர்களில் 1005 மாணவர்கள், இயக்க தொடர்பில்லாத புதியவர்கள். பெரியார், பெரியார், பெரியார் என்று இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பு புயலாக வீசி, இளைஞர்கள் மத்தியில்  தாக்கத்தை மிகப்பெரிய அளவிற்கு ஏற்படுத்தி விடுகிறது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை, உங்களிடம் மாற்றி தருகிறோம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே கூறும் அளவிற்கு பயிற்சி பெற்ற மாணவர்களின் செயல்பாடு அமைந்துள்ளது.

நம்முடைய இயக்கம் தான்  இந்த இனத்திற்கான வழிகாட்டி

இன்றைய தினம் சமூகநீதியை நிலைநாட்ட நினைத்த தெல்லாம் செய்கிற வகையில் அதற்கான ஆட்சி இங்கே அமைந்துள்ளது. அதற்கு காரணம் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இந்த இயக்கம் தான் இந்த இனத்திற்கான வழிகாட்டி என்பதை நாம் அனைவரும் அறிந்தவர்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 87 வயதில்,  மருத்துவர்கள் சொல்லியும் அதை பொருட் படுத்தாமல், இந்த நாட்டில் சுமையாக நான் வாழ விரும்பவில்லை, மக்கள் முன்னேற்றத்திற்காகவே நான் பாடுபடுவேன் என்று பெரியார் சொன்னது போல், தமிழ்நாடெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, மிகப் பெரிய அலையை உருவாக்கி இன்றைய தினம் தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தின் ஆட்சியை உருவாக்கி யுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு  கலைஞர் ஆட்சியில் இருந்த போதுகூட இப்படி நடந்ததா என்பது தெரியவில்லை, ஆனால் இந்த ஆட்சியை பொறுத்த வரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்ன நினைக்கிறாரோ, தமிழர் தலைவர் அறிக்கை இன்று வெளியிட்டால் மறுநாளே அது நடைபெறும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

எதை நம்பி தமிழர் தலைவர் அவர்கள் உழைப்பையும் செயல்பாட்டையும் அமைத்துக் கொள்கிறார் என்றால் தோழர்களையும், தொண்டர்களையும் நம்பித்தான்.

அனைத்துஅமைப்புகள் சார்பில் இடையீட்டு மனு

தற்போதைய நீட்தேர்வில் நிகழும் சமூகநீதி பிரச் சினையில் அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பி.ஜே.பி கட்சி நாகராஜன் தொடுத்த வழக்கில் அன்றைய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சொல்லு கிறார் உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு எதிரானது அந்த குழு என்று.

உடனடியாக மறுநாளே தமிழர் தலைவர், சென்னை பெரியார் திடலில்  சமூக நீதியாளர் கலந்துரையாடல் என்ற பெயரில் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல அமைப்புகளையும் சேர்ந்து அனைத்துஅமைப்புகள் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய செய்தார். தமிழர் தலைவர் இல்லை என்றால் ஆரம்பத்திலேயே அதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது மிகக் கடினம். 

இன்றைய தினம் அதனை எதிர்க்க சட்டத்தையும் அனுபவத்தையும் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்களே வழங்கியுள்ளார்.

விடுதலை பிடிஎஃப் வடிவில் அனுப்பப்படுவது நிறுத்தப்படாது

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை சந்தாவை சேர்த்து ஆசிரியர் அவர்களிடம் சிறப்பாக கொடுத்தோம் ,அதில் ஆறு மாத சந்தாக்கள் இந்த ஜூலை மாதத்தோடு முடிவடைந்திருக்கும், அவற்றை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்த்தும் வழங்க வேண்டும். விடுதலை பிடிஎஃப் வடிவில் அனுப்பப்படுவது நிறுத்தப்படாது என ஆசிரியர் அவர்கள் அறிவித்திருக்கிறார், இருந்தாலும் நாம் எப்போதும் போல் சந்தாக்களை குறைவில்லாமல் சேர்த்து கொடுக்க வேண்டும்.

அதிகமான அறிவியல் செய்திகளோடு வெளிவரும் பெரியார் பிஞ்சு

அதேபோல் பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தாக்களை சேர்ப்பது மிகவும் முக்கியம். ஊரடங்கு காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், பெரியார் பிஞ்சு சந்தாக்கள் அனுப்புவது குறைந்துவிட்டது. 

பெரியாரியல் பயிற்சி வகுப்பில் முதல் பரிசு பெற்ற இளையோருடன் கலந்துரையாடல் நிகழ்வில் அமெரிக் காவில் போராசிரியராக பணியாற்றுகின்ற ரவிசங்கர் கண்ணபிரான் இயக்க ஏடுகள் அனைத்திலும் தனக்கு பிடித்தது பெரியார் பிஞ்சுதான் என்று சொல்லக்கூடிய வகையில் மிகச்சிறந்த அறிவியல் செய்திகளோடு வெளிவரும் பெரியார் பிஞ்சு மாத இதழ் கழக தோழர்கள் வீடுகளுக்கு கட்டாயம் வரவேண்டும், அதோடு பொது மக்களிடமும் சந்தாக்களை சேர்த்தும் வழங்க வேண்டும். பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பதற்கு எல்லை கிடையாது. மண்டலத்தையும் தாண்டி எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு சந்தா சேர்க்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டங்களை மாதம் ஒரு முறை நடத்தலாம், அதன் பயனாக அனைத்து தோழர்களையும் சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதை தெரிவித்து, இதுபோன்ற காணொலிக் கலந்துரையாடல் கூட்டங்களை அடிக்கடி நடத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மண்டலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த அனைத்து கழகப் பொறுப்பாளர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிக்கிறது. பங்குபெற்ற இருபால் மாணவர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை திராவிடர்களின் தேசியத் திருவிழாவாக எழுச்சியோடு கொண்டாடுவது என முடிவு செய்யப் படுகிறது. திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுவரெழுத்து பிரச்சாரப் பணியை உடனடியாக மேற்கொள்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3

இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஏடுகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்தோடு சந்தா சேர்ப்பை தொடர் பணியாக செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4

திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் இருக்கக்கூடிய தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளை உடனடியாக அகற்றி பொதுமக்கள் தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை இக்கூட்டம் வலியுறுத்து கிறது.

கலந்துகொண்டு கருத்துக் கூறியவர்கள்

தேனி மாவட்ட துணைத்தலைவர் ஸ்டார் நாகராஜன், திராவிடர் தொழிலாளர் பேரவை தலைவர் மோகன், திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் பெரியகுளம் அன்புக்கரசன், திண்டுக்கல் செல்வம், திண்டுக்கல் நகர தலைவர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன், தேனி மாவட்ட செயலாளர் மணிகண்டன், பழனி மாவட்ட தலைவர் பெரியார் இரணியன், பழனி மாவட்ட செயலாளர் முருகன், பழனி அருண்குமார், மாநில மாணவர் கழக துணை செயலாளர் ஸ்டார் விஜய். திண்டுக்கல் நகர செயலாளர் ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், திண்டுக்கல் சிதம்பரம், தமிழரசு, தேனி மாவட்ட தலைவர் போடி ரகுநாகநாதன், zoom  காணொ லியை இயக்கி உதவிய செல்வ மீனாட்சிசுந்தரம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர். இறுதியாக தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் சுருளிராஜன் நன்றியுரை கூறினார்.

தொகுப்பு:

நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல், தஞ்சை


No comments:

Post a Comment