சென்னை பல்கலைக்கழகமா? சங்கர் பாபா கல்விக் கழகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

சென்னை பல்கலைக்கழகமா? சங்கர் பாபா கல்விக் கழகமா?

 அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளன

- பேராசிரியர் மு.நாகநாதன்

சென்னை, ஜூலை 28 சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறையில் 1971 ஆம் ஆண்டு ஆய்வு மாணவராக இணைந்து பேராசிரியராக, துறைத் தலைவராக 2006 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வினைப் பெற்றேன்.

பல்கலைக்கழகத்தில் இணைந்து தொடர்ந்து 35 ஆண்டுகள் கல்விப் பணியினை ஆற்றும் வாய்ப்பை பெற்ற ஒரு சிலரில் நானும் ஒருவன்.

கல்வி நெறிக் காவலர் நெ.து.சுந்தர வடிவேலு, பேரா. தியாகராசன் காலம் வரை 11 துணை வேந்தர்கள் தலைமையில் பணியாற்றும் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதச்சார்பற்ற தன்மை போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த 11 துணை வேந்தர்களில் ஒருவர் இஸ்லாமியர். இருவர் கிறிஸ்தவர்கள். இவர்களும் தங்களின் மத அடையாளங்களைச் சிறிதும் வெளிப்படுத்தாமல், நடுநிலை தவறாமல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதச்சார்பற்ற உயர் நெறிமுறைகளைப் போற்றினர்.

2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு  துணைவேந்தர் பொறுப்பேற்ற துணை வேந்தர்களும் மதச்சார்பற்ற மாண்பினைப் பின்பற்றினர். ஆனால், தற்போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்ற உயரிய குறிக்கோளைச் சிதைத்துள்ளார்.

23-7-2021அன்று ஆடி வெள்ளிக்கிழமை அன்று துணைவேந்தர் அலுவலகத்தில் பெண் பேராசிரியர்களை வரவழைத்துப் பூஜை செய்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய அடிப்படை கடமைகள் சுட்டப்பட்டுள்ளன.

இரண்டாம் பிரிவில்:  விடுதலைப் போராட்ட காலத்தில் உருவான உயர் எண்ணங்களைப் போற்றிப் பின்பற்ற வேண்டும்”.

அய்ந்தாம் பிரிவில்: “எல்லா பிரிவினரிடையேயும் சகோதர மனப்பான்மை, ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும்”.

பெண்களை இழிவுபடுத்துகிற எவ்வித நடவடிக்கையும் பின் பற்றக்கூடாது.”

ஆறாம் பிரிவில்:  பல தன்மைகள் கொண்ட பண்பாட்டினையும் உயர்வு மிக்க தேசிய மரபினையும் போற்றி வளர்க்க வேண்டும்.”

எட்டாம் பிரிவில்: ஆய்வு மனப்பான்மை, மாந்த நேயம்

அறிவியல் உணர்வுகளை வளர்த்தெடுக்க வேண்டும்.(To develop scientific temper, humanism and spirit of inquiry).

ஒரு மதம் சார்ந்த ஆடி வெள்ளிக்கிழமை பூஜையை நடத்தியதில் எல்லோருக்கும் பொதுவான  உயர் கல்வி, ஆய்வு படிப்புகளின் தளமான, 164 ஆண்டு தொன்மை வாய்ந்த தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

பெண்களை அழைத்துப் பூஜை செய்ய இது என்ன சங்கர் பாபா தனியார் பள்ளியா? ஆட்டம் போடும் ஆசிரமமா? துணை வேந்தருக்கு ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு இருப்பது அவரின் தனியுரிமை.இல்லத்தில் ஆடி அல்ல - எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பூஜை செய்யட்டும். யாகங்கள் வளர்க்கட்டும். ஏன் நித்தியானந்தா சாமியார் கைலாச நாட்டிற்குக்கூடச் செல்லட்டும். அங்கே வேந்தராகக் கூட வலம் வரட்டும். ஆனால் பல்கலைக்கழகத்தின் மதச்சார்பற்ற மாண்பினை அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராகச் சிதைப்பது பெரும் குற்றம்.  விதிகளை மீறிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோருவது நேர்மையான கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment